"மொட்ட மாடில என்னடி பன்ற ?"

காற்றுவாரி வழியே
கசிந்துகொண்டிருந்தது
காற்றும், வெளிச்சமும் !
சற்றுன் - சற்று தொலைவில்
கேட்டதொரு நாயின்
அழுகுரல் மூன்றாவதாய் !
அசாதாரணமான
அமைதியை - ஏனோ
என்னால் - வெகு
சாதாரணமாக - எடுத்துக்
கொள்ளமுடியவில்லை !
தனிமை எனக்குப்
புதிதல்லெனினும் - என் கடிகார
முள்ளின் இதயத்துடிப்பு
எனக்கே கேட்பது
இதுவே முதல்முறை !
மீண்டும் இருளில்
கிடந்தது எழுந்தது
அந்நாயின் அழுகுரல் !
இம்முறை - அருகில்,
சற்றே நடுங்கிய நானோ
வியர்வையின் அருவியில் !
என் வளர்ப்புப் பூனையின்
வீலென்ற சத்தம் - பின்
மரண அமைதி - என்னால்
யூகிக்க முடிந்தது,
நடந்தவை யாவும் !
சத்தமில்லாத இரவுக்கும்
சத்தமிக்கும் சம்பந்தமுண்டா ?
யோசிக்க ஆரம்பித்தேன் !
சிசுவொன்றின் அழுகுரல் !
ஆம், என்னறையில் !
வரும் வழி தெரியவில்லை !
தெரிந்தது, மங்கலாக...!
உச்சி முடிகள்
நின்று கொண்டன !
கண்மூடிய என்னை
யாரோ தீண்ட வருவது
பிரம்மை மட்டுமே அல்ல !
என் நெற்றி தொட்டு
ஒருகரம் பொட்டிட்டது !
இமை இழுத்து மையிட்டது !
உதட்டு சாயமும்தான் !
சரேலென - வந்து
குதித்தது மின்சாரம் !
கண்திறந்து பார்த்த நான்
யாருமில்லாதது கண்டு
தைரியமாயிருந்தேன்,
கண்ணாடி பார்க்கும்வரை !
மேசையில் - அதே
அழகு சாதனங்கள்
குப்புறக் கிடந்தன !
என் முகத்தில்
தடயங்கள் ஏதுமில்லை !
ஆனால், என் பிம்பத்தில்
வைத்த போட்டு
வழிந்து கொண்டிருந்தது,
இரத்தச்சிவப்பில் - அவ்வண்ணமே
மீதமுள்ள இரண்டும் கூட !
அலறினேன் !
யாரோ ஓடிவருவது
புரிந்தது - கைவிளக்குக்கு
பின்னால் என் அம்மாவின் கை !
கீழ்காணும் கேள்வியோடு
"மொட்ட மாடில என்னடி பன்ற ?"
நடக்க ஆரம்பித்த
நான்காவது நிமிடம்,
என் படுக்கையிலிருந்து
எழுந்த நான் - தண்ணீர்
குடித்துவிட்டு - போர்வைக்குள்
புகுந்தேன் - சற்று தொலைவில்
கேட்ட, நாயின் அழுகுரல்
எதேச்சையானதென நம்பிக்கொண்டு,
மின்சாரம் நின்றது தெரியாமல் !
(புலமி அவர்களில் "அர்த்தமற்ற வாழ்நிலைகள்......!" கவிதையின் தாக்கம் மேலும் இதற்கான உந்துதல் அளித்த கலைக்கு நன்றிகள் !,)