ஒரே கடவுளும் பெண் !
பிறக்கும் முன்
கருச்சிதைவுக்கோ,
பிறந்தபின்
கள்ளிப்பாலுக்கோ
காவாய் போயிருக்கலாம்
பெண் பூவாய் போனதற்கு !
வக்கிரக் கண்களுக்குள்
வளைய வருதல் - எங்கள்
அன்றாட பணி !
எம்மை உடலாக அன்றி
உயிராக பார்க்கும்
கண்கள் வெகுசில !
கண்களால் எனைத்தீண்டும்
கயவர்கள் கூட்டம் !
ஓடும் பேருந்தில்
உரசுது ஒரு கூட்டம் !
இப்படி கூட்டம் கூட்டமாய்
கொத்திக் கொத்திக்
தினம் எமைத்திங்கும்
சதைதேடி கழுகுகளே !
எங்களுக்கென பூமி
பிரித்துக் கொடு - இல்லையேல்
உன் போதை அறுத்துக் கொடு !
பள்ளியறையை
பள்ளியறையாக்கி
அன்றலர்ந்த பூக்களையும்
கிழித்தெறியும்
கிழட்டுக் குருக்களே !
ஆசிரியன்
மா சிறியன் ஆவதற்கா,
கடவுளுக்கு முன்
உம்மை வைத்தோம் !
கருவறை இருட்டை
உம் காமக்கழிவரை
ஆக்கிய குருக்களே !
நீவிர் கடவுளில்
முகத்தில் பருக்களே !
வார்த்தைகளில்லை
உம் வக்கிரம் வரைய !
வாய்ப்புகளில்லை
கடவுளின் கோவம் குறைய !
குழந்தைகள் கூட
விடாமல் குடிக்கும்
உங்கள் குரல்வளை
அறுத்தெறிவது உத்தமம் !
உன்தாய் உனக்களித்தது
தாய்பாலா ?
சாக்கடையா ?
என்னை - இரையென
கொத்த வருவது
பெத்த தகப்பனெனில்,
எங்கு போய் முறையிடுவேன் ?
சேர நாட்டிலிருந்து
சேர்ந்த சேதியிது !
மரணம் - உடல் திங்கும்
எம் எதிரியிடமிருந்து
எனைக் காக்கும்
மருந்தென நினைத்தேன்,
சிங்கள காடைகள் காணும்வரை !
வீழ்ந்த பெண்புலியை
தின்ற பன்றிகளை
மரணங்களும் மன்னிப்பதில்லை !
ஓநாய் கூட்டத்தில்
மாட்டிய மானாக
ஒவ்வொரு நாளும்
உட்கார்ந்து அழுகிறேன் !
இசைவின்றி பெண்ணலம்
பருகத்துடிக்கும் - ஆண்
பெண்டகன் தானே !
இறைவா...
கொஞ்சம் இறங்கி வா !
காமம் கடந்த கண்களை
கண்டறிய வழிகாட்டு !
காமம் ஊறிய கண்களை
கருவழிக்க வழிகாட்டு !
ஓ... ஆணே...!
காமம் அறு !
வன்புணர்வு மற !
ஏனெனில்...
உன்னை பெற்ற...
உயிரோடு இருக்கும்...
ஒரே கடவுளும் பெண் !
(தில்லியில் ஓடும் பேருந்தில் வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண்ணிற்கு சமர்ப்பணம்)
பெண்ணலம் = பெண்ணால் ஆண்மகனுக்குக் கிடைக்கும் இன்பம்
பெண்டகன் = பேடி