[381] ஏசுவைப் பாடு எம்பாவாய்!....(4)
19-12-12: புதன்
[10 பாடல்கள் கொண்ட பதிகத்தில் இது 4-ஆவது பாடல்]
பாசம் பழத்தின்மேற் பாவையவள் வைத்து,இறைவன்,
நேசம் இழந்தகதை நீயறிவாய்! என்னே,உன்
வேசமோ? பாம்பின்வாய் வீழவும் எண்ணினையோ?
ஈசன் இறைவன்,எம் ஏசுவின் பேர்பாடி
வாசலிடை வந்துள்ளோம்! வந்துன் கடைதிறவாய்!
தேசன்! பரதீசில் தேர்ந்துனக்கும் ஓரிடத்தைப்
பாசமுடன் கேட்டுப் பரமனிடம் பெற்றசீர்
பூசை பலசெய்து புகழ்ந்தே,பா டெம்பாவாய்!
======== அரும்பதவுரை:
பாசம்: ஆசை
நேசம்: அன்பு
பாம்பின்வாய்: பாம்பென்று சொல்லப்படும் சாத்தானின் வசம்;
கடைதிறவாய்: வாசலைத் திறப்பாய்!
தேசன்:ஒளிமயமானவன்
பரதீசில்: விண்ணுலகென்னும் இறைவனின் இடத்தில்;பரலோகத்தில்;
சீர்:சிறப்பு
பூசை:வழிபாடுகள்
============== பொருளுரை
தன்னுடைய ஆசையினைப் பழத்தின் மேல் வைத்தவளாய், ஆண்டவரின் அன்பை இழந்துவிட்ட ஏவாளுடைய வரலற்றினை நீ அறியாதவளா?ஏன் இப்படி அறியாது தூங்குபவள்போல் நடித்துக் கொண்டுள்ளாய்!
தீமையில் பாம்புக்கு ஒப்பான சாத்தானின் பிடிக்குள் விழுந்துவிட எண்ணிவிட்டாயோ?
எப்பொருட்கும் தலைவனும், இறைவனுமான நமது இயேசுவின் பெயரைச்சொல்லிப் பாடிக் கொண்டு உன்னுடைய வாசலிலே வந்துள்ளோம்; வந்து உனது வாசல்கதவினைத் திறப்பாயாக! ஒளிமயமான நம் இயேசு, நம்முடைய கர்த்தரும் தந்தையுமான பரமனிடம் உனக்காகவும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பெற்றுள்ள சிறப்பினை அறிந்தவளாக வழிபாடு செய்து பாடுவதற்காக எழுந்து வருவாயாக!
==================