மழைக் கஞ்சி எடுத்தாத்தான் வருவீரோ.......
எப்பதான் வருவீரோ
எம் பசிய தீர்ப்பீரோ…
பொட்டுத் தண்ணியில்ல
போட்ட பயிர் பொசுங்கிடுச்சி
வாய்க்கா வரப்பு வத்தி
வயலெல்லாம் வெந்துருச்சி
கைரேகை நிலெம் பாத்து
கண்ணீரு கொட்டுதய்யா
கெணத்து தண்ணிய ஏத்தவுந்தான்
கரண்டு கம்பிய காணோமய்யா….
ஒத்தக் கொடம் தண்ணி
ஒரு நாளைக்கு பொதுமய்யா
படகுவிட பயபுள்ள
அதையுந்தான் கெக்குதைய்யா…
போன வருசம் பொசுக்குன்னு
பாதியில போயிட்டீரு
மழக்கஞ்சி எடுக்கவுந்தான்
வெள்ளாம பத்தலியே..
உடம்புக்கு முடியலன்னு - அப்ப
குடை தான பிடிச்சிருந்தேன்
கருப்புக் கொடியினுதான்
காணாம போயிட்டீரோ….