சொர்க்கத்தை காண்பேன்
தேவதைகள் வாழுகின்ற தேசத்தில் ஊரார்
,,தேர்ந்தெடுத்த பேரழகி நேசத்தில்
தாவரமாய் மொட்டவிழ்ந்த வாசத்தில் நெஞ்சம்
..தடுமாறி விட்டதவள் கேசத்தில்.
காவலுக்கு வைத்திருந்த கணையிரண்டு பாவை
..கண்களினால் பார்வைஎன உருமாறி
பாவலனின் சிந்தைஎனும் அணையுடைத்து தேவை
..பண்னொன்று என்றதுவே எனைநாடி .
நூபுரங்கள் பொட்டலென இருப்பதனால் அங்கே
..நுனிவிரலால் கோலமிட்டு காதலுக்கு
கோபுரமாய் கட்டிவிடு மாங்கல்யம் என்றே
..கூப்பிட்டு அழைக்கிறது மோதலுக்கு
முத்துக்கள் எனச்சிதறும் புன்சிரிப்பு கண்டால்
..முகஞ்சுளித்து அழுதுவிடும் பூவிதழ்கள்
சித்தத்துள் நடக்கின்ற போராட்டம் ஒன்றால்
..சிலவேளை கசந்திருக்கும் தேன்துளிகள்
தேனிகளே இல்லாமல் தேன்கூடு ரெண்டு
..தேக்கியவள் இடைமேலே தேனெடுக்க
ஞானிகளும் அலைமோதும் அழகோடு கண்கள்
..நாள்தோறும் படையெடுக்கும் தேன்குடிக்க
இல்லாத இடைமீது இருக்கின்ற அந்த
..இமயங்கள் தாங்கியவள் நடைபோட
தள்ளாடும் இளமனது தாகத்தால் நொந்து
..தடுமாறும் நிலைக்குமனம் தடைபோட
சொல்லாத காதலினால் அடைகின்ற துன்பம்
..சொல்லாமல் அறிந்தவளும் வந்தாலே
கொல்லாமல் கொல்கின்ற அவஸ்த்தைக்கு இன்பம்
..கொடுக்கின்ற சொர்க்கத்தை காண்பேனே!
..