கர்ப்பத்திலிருந்து மரணக்குரல்

கர்ப்பத்திலிருந்து மரணக் குரல்
(கவிதை)
காமச் சகுனியின் பகடை உருட்டலில் எனைக்
கரு விதைத்த தந்தைக் குலமே!
ஜாமப் புயலின் மோகச் சுழற்சியில் எனைக்
கரு ஏந்திய தாய்க்குலமே!
கர்ப்பத்திலிருந்து கேட்கிறேன்!
எந்த நங்கூரத்தை நம்பியெனக்கு
பிறவிக் கடலில் பரிசம் போட்டீர்!
மானாவாரி நிலமாய்
மாதச் சம்பள வானம் பார்த்து
வந்த மறுநாளே வறட்சியில் வாய் வெடித்து
கோல்கேட்டையும் குளோஸ்-அப்பையும்
தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு
கோபால் பல்பொடி கொப்பளிக்கும்
சராசரியின் சந்தாதாரர் நீர்!
உமக்கெதற்கு சந்ததி?
அப்பாவெனும் அழுக்கு பனியன் ஆத்மாவே!
பெண்ணாய் நான் பிறந்து விட்டால்
என்
வரதட்சனை விருந்துக்கு
உன்
நாக்கை நீ துப்ப வேண்டியிருக்கும்!
என்
திருமணச் செலவுக்கு
உன்
கிட்னியை நீ விற்க வேண்டியிருக்கும்!
செய்வாயா?
ஆணாய் நான் அவதாரமெடுத்தால்
எனக்கு
மருத்துவக் கல்வி மகுடம் சூட்ட
மாரடைப்பை உடுத்த வேண்டும்!
பொறியியல் கல்வி பொருத்திப் பார்க்க
பக்கவாதத்தைப் போர்த்த வேண்டியிருக்கும்!
தேவையா?
உங்களின் அரை வயிற்றுக் கஞ்சியை
பங்கு போடும் என் அவதாரம் எதற்கு?
உங்களின் ஏழ்மைப் புண்ணைக் கீறும்
ஏளன ஜனிப்புக்கு என்ன அவசியம்?
ஆகையினால் ஆன்றோரே
அகிலம் வர அருவருத்து
ஆவலுடன் ஏற்கிறேன் மரணத்தை
அம்மாவின் கருவறைக்குள்ளேயே!
ஒரு வேண்டுகோள்!
கருவறையே கல்லறையாகும் அவலம்
என்னோடு நிற்கட்டும்!
அடுத்தொரு சிசுவை
அடைகாக்க வேண்டாம்!
----------------------------
முகில் தினகரன்
கோவை.