ஒரு அரவாணியின் உள்ளக் குமுறல்

ஒரு அரவாணியின் உள்ளக் குமுறல்!
(கவிதை)
இறைவனின் ஈமெயில் முகவரி
எவரிடமேனும் இருந்தால் எழுதிக் கொடுங்கள்
எங்கள் ஜனனம் குறித்த சந்தேகத் தும்மலுக்கு
தைல பதில் வாங்க வேண்டும்!
சிங்கத்தையும் சிம்மத்தையும்
சிதிலமின்றித் தயாரித்தவன்..
பசுவையும் காளையையும்
பங்கமின்றிப் படைத்தவன்
ஆண் பெண் சமையலில்; அலட்சியமாகி
எதையோ சமைத்து எறிந்து விட்டானே!
இதோ...நாங்கள்
உருவம் கொண்ட அமானுடங்களாய்
உறவு ஒதுக்கும் இருட்டு ஆந்தைகளாய்!
எந்தத் தவறுக்கு
எங்களைத் தவளையாக்கினாய்?
நீரா?...நிலமா?...எது நிரந்தரம்?
சகமனிதனின் கிண்டல் சேறு
சரமாரியாய் எங்கள் மேல் வீழும் போதுதான்
படைத்தவனுக்குப் பாடை கட்ட
பரபரக்குது எங்கள் கைகள்!
மண்ணுக்குள்ளிருக்கும் வைர ஊற்று தொட்டு
பணதாகம் தணிக்கும் பரோபகாரிகளே!
எங்கள்
நெஞ்சிற்குள்ளிருக்கும் நேயதாகம் புரிந்து
கருணை நீரை வார்க்கக் கூடாதா?
உங்கள் பாpகாசச் சேவலின்
பச்சைக் கூவலை எங்கள்
பண்ணை வீட்டிலிருந்து
நாடு கடத்தக் கூடாதா?
நாங்கள்
தனிநாடு கேட்கவில்லை
தனிமை திகட்டி விட்டதால்!
ஒதுக்கீடு வேண்டவில்லை
ஒதுக்கபட்டே நொந்ததால்!
வசந்தத்தை தேடுகின்றோம்
வசை கேட்ட மயக்கம் தீர…
வாழ்க்கையைத் தேடுகின்றோம்
வந்த பாதையைச் செப்பனிட!
மனிதா!
இரவுக்கும் பகலுக்கு இடை நிற்கும்
அந்தியை ரசிக்கி;ன்றாய்!
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடை நிற்கும்
அரவாணிகளை மட்டுமேன் அசூசையென்கிறாய்?
வேண்டாம்!
எங்களைப் பழித்தால் இனி
அர்த்தநாரீஸ்வரர் அருள் உமக்கு
அர்த்தஜாமச் சூரியனாகிவிடும்!
ஜாக்கிரதை!