[388] அன்பின் வழியில் இறப்பில்லை....
[ஹேயேந்தினி பிரியா -அவர்களின் தண்டிக்கப்பட்ட நியாயங்கள் -என்ற பாடலைப் படித்ததும் மனதில் தோன்றியது இங்கே கொடுக்கப்படுகிறது-இது ஒரு விமரிசனமோ அல்லது கருத்தோ அல்ல ,அவரின் பாடல் ஏற்படுத்திய தாக்கம் என்று வேண்டுமானால் கூறலாம்.]
பார்க்கும் அவலமெலாம்
---பாவத்தின் சம்பளமாய்
வேர்க்கும் மனத்தோடும்
---விலகிநீ செல்லாதே!
யார்க்கும் உதவிடுவாய்
---இயன்றவரை உன்மனதில்
தீர்க்கன் இயேசுவினைத்
---தினமெண்ணி நல்மனமே!
தொட்டில் சுகமறியார்,
---தொட்டணைக்க அன்னையிலார்
கட்டிக் கருணையினால்
---கரைசேர்க்க, ஆவினத்தின்
கொட்டில் தனைத்தேர்ந்து
---குழந்தையாய்ப் பிறந்தவனுள்
பட்டி எனச்சேர்த்து
---பதைபதைப்பை நீக்கப்பார்!
அழுக்கும் மேனியிலோ?
---ஆடையுமே துணியாமோ?
ஒழுக்கம் உடையாக
---உதவும்கை கொண்டெழுவாய்!
வழுக்கும் மனங்களையே
---வழுக்காது காத்திடுவாய்!
பிழைக்கும் மனிதயினம்!
---பெருமானின் தயவுண்டே!
பிழையுள்ள நெஞ்செல்லாம்
---பிச்சைப் பாத்திரமே!
மழையுள்ளம் கொண்டு,அவர்க்கு
---மன்னிப்பைக் கொடுப்பதற்கே
உழை,அந்த இயேசுவைப்போல்;
---உலகம் தழைக்கட்டும்!
அழைக்கின்ற அவர்குரலை
---அடிமனத்தில் கேட்பாயே!
சொந்தம் பூமியில்லை
---சுகமதிலே உள்ளதிலை!
பந்தம் இவைவிடுத்துப்
---பரமனவன் பதம்தேடு!
அந்தம் கடைநாட்கள்
---அழைத்துவரும் துயரின்றி
வந்தே மரணத்தை
---வென்றவன்போல் உயர்வாயே!
கவரும் சுகங்களுக்குக்
---கைகொடுத்து வாழ்ந்தவராய்த்
தவறும் மனங்களுமே
---தவிப்புற்றுத் திருந்திவர
அவரும் அணைத்தேற்பார்!
---அதையுனது வாழ்வாக்கு!
எவரும் அகதியிலை!
---எவ்வுயிரும் வருந்தாதே!
இறக்கவே மானிடர்கள்
---இங்கே பிறக்கவில்லை!
இறப்பை வென்றவரை
---எண்ணிப் பணியாற்று!
திறப்பாய் மனக்கதவை!
---தேவைபிறர்க்கு அறிந்துதவு!
இறப்பாரோ அன்புவழி
---எதுவென்றே செல்பவரும்?.
======================