தேனாற்று மீனாகலாம்
அன்னையவள் கொடுக்கின்ற தாய்ப்பால்
..அமுதுண்டு வளர்கின்ற மனிதன்
தென்னையது தருகின்ற இளநீர்
..தீர்த்தமதை குடித்தாலும் புனிதன்
பின்னுமவன் குடிக்கின்ற மதுவால்
..பிதற்றுகின்ற நேரத்தில் இழிஞன்
என்பதனை உணர்ந்திட்டால் பொதுவாய்
..இடரின்றி வாழ்ந்திருக்கும் கலைஞன்
குடிப்பதற்கு எடுக்கின்ற மதுவில்
..குடிக்கப்படும் குடும்பங்கள் கண்ணீர்
வடிக்கின்ற நிலைகண்டும் எங்கும்
..வடிகட்டும் ஆலைகளை நிறுவி
படிக்கட்டு போட்டுவிடும் நாட்டில்
..படிக்காத மேதைகளாய் திரியும்
குடிமக்கள் படையெடுப்பை தடுக்க
..கோட்டையிலே சட்டமது போடார்!
பிள்ளையினை கிள்ளிவிட்டு கையால்
..பிசகாமல் தொட்டிலினை ஆட்டும்
கல்வியினை கற்றவர்கள் போடும்
..கலையழகு நாடகத்தி னாலே
பள்ளிகளும் மூடுவிழா கண்டு
..படையெடுக்கும் மதுபான சாலை
சொல்லித்தரும் போதைஎனும் பாடம்
..சுடுகாட்டு புத்தகத்தின் வேதம்
ஆதாயம் வருகின்ற தாலே
..அழிகின்ற சாராயம் காய்ச்சி
சூதாடும் பலகூட்டம் நாளும்
..சொகுசாக வாழ்வதற்கு ரொம்பத்
தோதான தொழிலாகச செய்யும்
..துரோகங்கள் தனையழிக்கும் போது
தீதான வழிசெல்லா மக்கள்
..தேனாற்று மீனாக லாமே !