மனிதன் கையாலாகதவன்

கண்களில் பார்வை தந்தும்
கண்களை மூடிக் கொண்டு
காட்சிகளை காண முடியா
சாட்சிப் பிழைகளாய் மனிதர்கள்.!

ஞாயிரும் திங்களும் சுடராய் தந்தும்
ஞாலம் அனைத்தும் சிறந்திட தந்தும்
ஞானம் சீர்மிகும் சிறப்பாய் தந்தும்
ஈனமாய் இழிந்துரைக்கும் மனிதர்கள்.!

அறிவான அத்தாட்சிகள் தந்தும்
அழகான அற்புதங்கள் தந்தும்
தெளிவான வேதங்கள் தந்தும்
தெளியாத புரியாத மனிதர்கள்.!

கனகச்சிதமாய் யாவும் படைத்து
காலகாலத்துக்கும் உரிமை தந்து
சமயோசிதமாய் பயன்பாடு தந்தும்
சந்தர்பத்தால் பழிக்கும் மனிதர்கள்.!

அண்டியோருக்கும் அருள் தந்து
அடிபணியாதோருக்கும் அள்ளித் தந்து
நல்லருள் நாளும் புரிந்திட்ட போதும்
நன்றி கெட்ட நாசகார மனிதர்கள்.!

தொண்டையில் மரணம் சிக்கி
விக்கித் திக்கும் தருணம்
மகத்தான இறைவனின் மகத்துவத்தை
மரணத்தில் உணர்வார்களோ மனிதர்கள்.!

அன்னை தந்தையை தேர்ந்தெடுக்கும்
ஆற்றல் அற்றவரெல்லாம் அகந்தையில்
சொந்தமாய் பிறப்பெடுத்து வந்ததைப் போல்
பற்களில் சொற்கள் போட்டு பேசும் மனிதர்கள்.!

வாழும் வழிமுறை வகுத்துத் தந்தும்
வழிகாட்ட நல் தூதுவர்கள் தந்தும்
வழிகேட்டில் வாழ்ந்து பழகி பின்
வல்லோனை வசை பாடும் மனிதர்கள்.!

சின்னதொரு பொருளைக் கூட
சுயமாய் உண்டாக்க சக்தியற்ற
சாமானியர்களாக படைத்த போதும்
சர்வ வல்லமையும் பெற்றுவிட்டதாய் மனிதர்கள்.!

தமக்குத் தாமே சுயமாய்
தீங்கிழைத்துக் கொண்ட பின்
சுலபமாய் கடவுளை பழிபோடும்
சுயம் மறந்த சுயநலவாதிகள் மனிதர்கள்.!

நல்லவையும் அல்லவையும்
பகுத்தறியும் அறிவை தந்தும்
தீயவை மட்டும் செய்து திரியும்
மனிதன் கையாலாகதவன்.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (26-Dec-12, 11:33 am)
பார்வை : 272

மேலே