3.யுத்தத்தின் சுவடாய் நான்..ஸ்நேகமுடன் ஸ்நேகா..!

யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் தொகுப்பில் அய்யா திரு.காளியப்பன் எசேக்கியேல் அவர்களின் வாழ்த்து உள்ளடங்கிய மாளிகைக்கான அழகிய வாசல்..! உழைத்து சேர்ந்த நெல்லைக் கூட்டி..யென, படைப்பாளிகளாய் உள்ளே வசிப்பவரை மட்டுமல்ல..வாசிப்பவரையும் அழகாய் வாழ்த்திவிட்டுப் போகிறது அய்யாவின் கவிதை..! வார்த்தைகளின் அடுக்கும்,அதில் சொல்லிச் செல்லும் பொருளும்..அடடா வாசிக்க வாசிக்க இன்பம்.! ஆய்யா உங்கள் பாடல்களை மட்டுமே தனியொரு தொகுப்பாகக் காணவேண்டும் என்ற ஆவல் எனக்கு மீறுகிறது.! அந்தச் செய்தியை விரைவில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.!

இதனையடுத்து,முனைவர் பஞ்சாங்கம் எழுதியுள்ள அணிந்துரையில்,எதிர்கால இளைய சமுதாயம்..இருண்ட வானில் ஒரு நம்பிக்கையொளி யென இத்தொகுப்பைக் குறித்துக் கூறுவது மிகையல்ல என..இதனை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்ளமுடியும்!.

தனித்தனி கண்ணிகளாய் இருந்தவர்கள் இத்தொகுப்பின் மூலம்,ஒரு மாபெரும் சங்கிலியானார்கள்..எப்படி..? வாசகர் நோக்கில் மு.ராமச்சந்திரன் அண்ணா எழுதியுள்ள அனுபவஉரை..அதுவொரு தனி சுவாரஸ்யமிக்க கதைபோலவே இருக்கிறது.! சிறகுகளை விரிக்கும் கற்பனைகள்..தாய்மொழியில் விரியும்போது அது எவ்வளவு வீரியமாக இருக்கிறது என்றும் இந்த உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தொகுப்பில் இடம்பெற்ற படைப்பாளிகள் யாவரும் வாழ்வாங்கு வாழ்கவென,மருத்துவர் கன்னியப்பன் வாழ்த்துரை வழங்க பின் தொடர்கிறது..திரு.அகன் என அறியப்பட்ட அய்யா தி.அமிர்த கணேசன் அவர்களின் ஊதுகுழலென்னும் ஊக்குவிப்பு..! இதில் ஊதுகுழல் எனும் வார்த்தைப் பிரயோகம் முதலில் எனக்கு ஆச்சரியமூட்டியது.காரணம்..,ஊதுகுழலை யார் ஊதுவார்.அந்தக் காலத்தில் அரசர்கள் வரும்முன்..கட்டியம் கூறுபவர்கள் ஊதுவார்கள்.இந்தக் காலத்திலும் குடும்ப உறுப்பினர்களின் வயிறு நிறைவதற்காக அம்மாக்கள் பலபேர் அடுப்பில் ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த இருவிஷயத்திலும் தன்னைத் தாழ்த்திக் கொள்பவர்களே..தனக்குப் பின்னே இருப்பவர்களை உயர்த்தி வைப்பதற்காக..,ஊதுகுழலை ஊதுகிறார்கள்..! இந்த விஷயம் மனதிற்குள் உரைத்தபோதுதான்..தி.அமிர்தகணேசன் அவர்களின் அந்த வார்த்தைக்கும் எனக்கும் அர்த்தம் புரிந்தது. இங்கு இதனைப்படிப்பவர்களும் அறிந்து கொள்ள வசதியாக இன்னொரு விஷயம் உண்டு. திரு.அமிர்த கணேசனின் இன்ஷியலாக உள்ள தி எனும் எழுத்து எதனைக் குறிக்கிறது தெரியுமா..? “தியாக” என்பதைக்குறிப்பதாக நான் அறிந்து கொண்டேன்..பெயருக்கேற்றார் போலவே சிலருக்கு நடத்தையும் அமைந்து விடும் அபூர்வ மனிதர்களில் அவரும் ஒருவர் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்..! நான் “இங்கே சொல்வதும் ஊதுகுழல் அல்ல” உண்மையான விபரங்களே என்பதே எனது வாக்குமூலம்.!

தொடரும் அவரது உரையில்..எது கவிதை..? யார் கவிஞர்.. என்று இடத்திற்கு இடம் மாறுபடும் நிலையில்..,செம்மையான கவிதைகள் வளர்க்கப்பட வேண்டுமெனில், படைப்பாளிகளை ஊக்கப்படுத்த வேண்டும்-வானம்பாடி கவிஞர்களைப்போல,இளம் கவிஞர்களுக்கு வாய்ப்புச் சாலை அi9மத்துக் கொடுக்க வேண்டும்-என்று குறிப்பிடும் திரு.’தியாக’ அமிர்தகணேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ள வரிகள்,எண் எண்ணத்தை இன்னும் வலிமையாக்குகிறது.தனியொரு மனிதராய் இத்தொகுப்பு வெளிவர கண்துஞ்சாமல் அவர் பாடுபட்டிருந்தாலும்,தனது முயற்சிக்கு உறுதுணையாக மற்ற தோழர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருப்பது மிக அரிய பண்பாகும்.

-இவற்றையெல்லாம் நினைக்கும்போது,அவருக்கு “தியாகச் செம்மல்” என்ற பட்டத்தையே தூக்கிக் கொடுக்கலாம்.ஆனால்,தியாகம் என்பது சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மரபு இருப்பதால்,
”புதுவைப் பெருமகன்,
இலக்கியக் கோ,
எழுத்துச் சித்தர்,
செங்கவிக்கோ,
சமத்துவப் பெருங்கடல்,
நவயுகச் சிற்பி
கவிதைக் காவலன்
இலக்கியக் காவலர்..என இன்னுமுள்ள பட்டங்களையெல்லாமே அவருக்கு அள்ளி வழங்கலாம்.!-

என்றென்றும் அன்புடன்.. இன்னும் எழுதுவேன்..

எழுதியவர் : ஸ்நேகமுடன் ஸ்நேகா (27-Dec-12, 9:33 am)
சேர்த்தது : snekamudan sneka
பார்வை : 145

மேலே