நீ இல்லா ராத்திரிகள்

நித்திரையின் வரவுக்கு
செங்கம்பளம் விரித்து வைத்துக்
காத்திருப்பேன்
கடைசி நேரத்தில்
கழுத்தறுக்கும் எங்கள்
தலைவர்களைப்போல்
வாராமலேயே போய்விடும்

வெளிச்சம் அணைந்தாலும்
நீ இருக்கும் தைரியத்தில்
பிரகாசிக்கும் படுக்கை அறை
அமாவாசையில் மிதக்கும்

பஞ்சுத் தலையணை
நஞ்சுத் தலையணையாய்
நெஞ்சில் மோதும்

நுளம்புகளின்
ஒப்பாரி ஓலம்
மரணவீட்டில்
குடியிருப்பதாய்
வாக்குமூலம் வழங்கும்

ஞாபகத்துக்கு வரவேண்டிய
எல்லாமும் மறந்து போக
மறக்க வேண்டியதெல்லாம்
ஞாபகத்தில் வந்து
ஒரு கோழியைப்போல
பழைய குப்பைகளை
கிளறிவிட்டு வேடிக்கைப்
பார்க்கிறது

நுளம்புகளுக்கு
ரத்த தானம் வழங்கிச் சிவந்த
மொத்த மேனி எங்கும்
நகங்கள் வரைந்த
ஓவியங்கள்
கண்காட்சியில் வைக்க முடியா
கன்றாவிகள்

நீ வருவாய் என்னும்
நினைவுகளால்
கண் மூடும்போது
வருகின்ற கனவுகளில்
தென்றல் வீசவில்லை

ஒரு ரோசமுள்ள
சம்சாரத்தைபோல்
முரண்டு பிடிக்கும்
மின்சாரமே ..போதும்
உன்னால் அடைந்த அவஸ்தைகள்

விசிறிகளுக்கும் வியர்த்திருக்கும்
ராத்திரிகளுக்கு விடைகொடுக்க
விரைந்து வா நீ
உனக்கு நான் விசிறியாகிறேன்

எழுதியவர் : மெய்யன் நடராஜ்-- இலங்கை (27-Dec-12, 2:39 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 162

மேலே