நிலவுக்கும் ஜன்னல் உண்டு

வானத்தின் ஜன்னல்
நிலவே நீயென்றுத்
தெரியும் யாவருக்கும்.
உன் ஜன்னல்
எதுவென்று
வூருக்குத்தெரியாது...
அந்த
ரகசியத்தை உடைக்கும்
ரகசியக்கவிதையை
காற்றில் நான்
கரையவிடுகிறேன்.
உருக்கிய
வெள்ளிப்பொட்டு
உதிராத
தாமரைத்தட்டு.
இரவுவந்து
ஒளியால் குரலெழுப்பி
எங்கள் உயிரில்
இசையை நனையவிடும்
வட்டக்குயிலே...
அடைஒளிமழையால்
மெல்லிய சுகத்தை அப்பும்
வில்லை வெண்மேகமே!
தாவணிப் பெண்ணொருத்தி
தங்கக்குடம் சுமந்து
தண்ணீர்க் கிணற்றருகில்
நடக்கக்கண்டேன்..
அவள்
வாளித்த கண்வழியே
இந்த வாலிப ஊருக்குள்
நீ நுழையக்கண்டேன்
நீ வந்த
அந்த
நித்தியப் பொழுதில்தான்
உலகம்
ஒளியால் நிறையக்கண்டேன்.
உன்வழியே
விண்ணுலகம்
எங்கள் உள்ளுக்குள்
நிறைவதைப்போல்
அந்தப் பெண்ணெனும்
ஜன்னல் வழியே
இந்த பூமியை
நீ உணரக்கண்டேன்...
வானத்தின்
ஜன்னல் நிலவென்று
யாவருக்கும் தெரியும்...
பூமியின் நிலவாய்
நீவிர் இருந்து
வானத்தின் ஜன்னலாய்
ஆனகதையை
பொசுக்கென்றுப்போட்டுடைத்தேன்
எங்கள் வூர்
மல்லிச்சிட்டு
தாவணிப் பெண்டீர்காள்!