நிராயுதபாணி...!

நினைவுகளுக்குள் நிறைந்து...
என்னை கலைத்துப் போடும்
உன்னை இமைத்து இமைத்து
விரட்ட முயன்றும் பிம்பமாய்
விழிகளுக்குள் பரவி
நின்று கொண்டு, முரண்டு பிடித்து
மாட்டேன் என்கிறாய்!
ஒரு காற்று வந்து
என் தலை கலைக்க
என் தவம் கலைந்து
அனிச்சையாய் நினைவில்
வந்து செல்கிறது நீ விரல் நுழைத்து
விளையாடிய தருணங்கள்! !
அணைக்கிறேன் என்று
நீ மூட்டிவிட்டு சென்ற
தீயின் ஜுவாலைக்குள்
உஷ்ணமேறிய நினைவுகளோடு
எரிந்துக் கொண்டிருக்கும்
என் கனவுகளை
நீ காதலென்று சொல்கிறாய்
நான் உன்னை
கள்ளி என்று சொல்கிறேன்
ஆமாம்
அதிரடியாய் உள் நுழைந்து
ஆக்கிரமிப்பு செய்து
என்னை அள்ளிக் கொண்டு
சென்றவளை பின்
எப்படித்தான் அழைப்பதாம்?
கவிதை எழுதுவேன் என்றாய்
எங்கே காட்டு என்று
நான் சொல்லி விட்டு
நான் பார்த்த பாவத்திற்கா
என்னை கட்டிக் கைதியாய்
இழுத்துச் செல்கின்றன
உன் வார்த்தைகள் ?!
சப்தமில்லாமல் சிரிக்கிறாய்
யுத்தம் இல்லாமல் அடிக்கிறாய்
மிச்சமில்லாமல் கொல்கிறாய்
சொச்சமில்லாமல் அழிக்கிறாய்
கத்தி முனையில் நிர்ப்பந்திக்கும்
போர் வீரன் போல
என்னை கவிதை முனையில்
மண்டியிடச் செய்து
காதலை கொள்ளையடிக்கும்
உன் நினைவுகளோடு
தோற்றுப் போய்தான் நிற்கிறேன்
நிராயுதபாணியாய் !!