மாணவி இறப்பு.....டெல்லியும் அரசியல்வாதிகளும்...!

மாணவி இறப்பு.....டெல்லியும் அரசியல்வாதிகளும்...!

திடீரென்று சோனியா ஊடகங்கள் வழியாக பேசுகிறார். சீலா தீட்சித் மாணவர்களோடு போராட்ட களத்தில் கலந்துகொள்கிறார். மக்களோடு சேர்ந்து அரசும் திடீரென்று கண்விழித்து பாலியல் குற்றங்கள் மீது பொங்கி எழுவது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன. சில நாட்களுக்கு முன்னர் அரசு நடத்திய கண்ணீர் புகைகுண்டு வீச்சு, தடியடி உட்பட அடக்குமுறையெல்லாம் மறக்கடிக்கப்படுகின்றன. மாணவியின் உயிர் சிக்கலான நிலமையை நெருங்கியதும் அவசரமாக சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப அமைச்சரவை முடிவெடுத்து அனுப்பியது. இறப்பிற்கு பின்னர் உடல் தனி விமானத்தில் வருகிறது. பாலியல் சித்திரவதை, பலாத்கார கொலையில் பலியான மாணவியை "India's daughter" - ndtv, "Black Saturday" - times now, "Delhi's Breave Heart" - ibnlive என்று ஊடகங்கள் அழைக்கின்றன.

ஊடகங்களும், அரசும் செய்கிற இந்த தந்திரங்கள் பாதிக்கப்பட்ட மாணவியை பெருமைப்படுத்துவதாக கருத முடியாது. இந்தியா கேட் போராட்டம் எவ்வகையிலும் எகிப்தின் தாகிர் மைதானம் போல மாறாமல் இருக்க ஊடகங்களும், டில்லியும் மிக பதட்டமாக செயல்படுவது தெரிகிறது. இந்திய நடுத்தர வர்க்கம் அப்படியொன்றும் அடிப்படை மாற்றத்தையோ, அரசியல் மாற்றத்தையோ நினைத்து போராடுவதற்கான அறிகுறிகளில்லை. அதிகபட்சமாக நீதிமன்றக் கொலையை தண்டனையாக கோருவது அல்லது ஆட்சி மாற்றம் வந்துவிட்டால் சகல நோய்களுக்கும் தீர்வு கிடைத்துவிடுமென்று நம்புகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர்.

டில்லியில் காங்கிரஸ் கட்சியினர் சீக்கிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்கு என்ன தண்டனையை சோனியா, சீலா தீட்சித் பரிந்துரைக்கிறார்கள்? போபாலில் பா.ஜ.க அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் ஒரு பெண். அந்த குற்றவாளிகளுக்கும், 2002ம் குஜராத் படுகொலையின் போது பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கும் என்ன தண்டனையை சுஷ்மா சுவராஜ் பரிந்துரைக்கிறார் என்பது எந்த ஊடகத்திலும் இல்லை. காஷ்மீர், ஈழம், அசாமில் இந்திய ராணுவத்தின் பாலியல் வக்கிரத்திற்கும், பலாத்காரத்திற்கும் ஆளான பெண்களுக்கு உரிமைகளும், சுயமரியாதையும் கண்ணியமும் இல்லையா? அவர்களெல்லாம் மனிதர்களில்லையா? அரசு-ஊடகங்கள்-எதிர்கட்சியான பா.ஜ.க நடத்துகிற முத்தரப்பு நாடகத்தின் நூல்களில் சிக்கிய பொம்மலாட்ட பொம்மைகளாக நடுத்தர வர்க்கமும், மாணவர்களும் ஆக்கப்படுகிறார்கள்.

கொலைகள், பெண்களை கடத்தி விற்பனை செய்தல் உட்பட பல குற்றங்களுக்காக நீதிமன்றம் ஆட்டோ சங்கருக்கும், 2 கூட்டாளிகளுக்கும் கொலையை தண்டனையாக 1995ல் நிறைவேற்றியது. அதற்கு பிறகு பெண்களுக்கும், சிறார்களுக்கும் எதிரான கொலைகளும், பாலியல் குற்றங்களும், கடத்தல்களும் எத்தனை நடைபெற்றுள்ளன. ஏன் குற்றம் செய்தவர்களுக்கு "மரணதண்டனை" குறித்த அச்சம் உருவாகவில்லை? குற்றம் செய்பவர்கள் தண்டனையை குறித்து யோசித்து குற்றங்களில் ஈடுபடுவதில்லை.

நமது குற்றவியல் விசாரணை மற்றும் நீதி பரிபாலனை அமைப்புகளின் அணுகுமுறையும், அவற்றில் மலிந்துள்ள லஞ்சமும் குற்றவாளிகளுக்கு சாதகமான சூழல்களை உருவாக்கியுள்ளன. எந்த வழக்கையும் பதிவு செய்ய காவல்த்துறை அலுவலகத்திற்கு அச்சமில்லாமலும், கண்ணியத்தோடும், அலைச்சல்கள், சிபாரிசுகள் இல்லாமல் ஒரு எளிய மனிதனால் சென்று திரும்பும் நிலை எந்த காவல்நிலையத்திலும் இல்லை. வழக்குகள் பதிவு செய்தல், தரவுகளை சேர்த்தல், நீதிமன்ற விசாரணை உட்பட குற்றவியல் விசாரணை நடைமுறை துரிதமாக, வெளிப்படையாக, நேர்மையாக, எளிதாக செயல்படும் வகையில் இல்லை. குற்றவியல், நீதிமன்ற அமைப்புகளில் இந்த அடிப்படை மாற்றங்களை உருவாக்க்கும் வரையில் குற்றமிழைப்பவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் சாதகமான சூழல்களே நீடிக்கிறது. அடிப்படை மாற்றத்திற்காக போராடாத வரையில் இத்தகைய எழுச்சிகள் ஊடகங்களுக்கும், அரசுக்கும், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கும் அரசியல் நாடகங்களுக்கான களமாகவே அமையும்.

எனது நண்பர்களிடம் இருந்து
சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (29-Dec-12, 8:00 pm)
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே