என் ஆண் நண்பர்கள் வட்டத்திற்கு...

என் ஆண் நண்பர்கள் வட்டத்திற்கு...

பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இந்திய அளவில் உரத்த குரல் ஆகியிருப்பது சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்கள் மீது, பெண்களின் அடிமனதில் இருக்கும் அச்சமும் சந்தேகங்களும் அளவிடமுடியாதது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, பெண்களுக்குப் பாதுகாப்பைக் கற்றுத்தரும் ஊடகங்களும் செயல்வீரர்களும், அதை விடுத்து பெண்கள் மீதான மரியாதையை ஏற்படுத்தும் விதமான விழிப்புணர்வை ஆண்களுக்கு ஊட்டினால் நன்று. பெண்கள் உடல் மீதும் சிந்தனை மீதும் ஆண்கள் செலுத்தும் வன்முறை வெறுமனே உடல் சார்ந்தது மட்டும் அன்று. சமூகத்தின் எல்லா நிலைகளிலும் அது நீக்கமற நிறைந்திருக்கிறது.

என்னுடைய ஆண் நண்பர்கள் வட்டம் பெண்ணியச் சிந்தனையாளர்களால் ஆனது, என்றாலும் இந்த வட்டத்தைத் தாண்டிச் சென்றால், நான் சந்திக்கும் பெரும்பாலான ஆண்கள், சமூகத்தின் எந்தப் பொறுப்பிலும் நிலையிலும் இருந்தாலும், பெண்கள் மீது இழிவான சிந்தனை கொண்டவர்களாகவும் அதை மூர்க்கமாகச் செயல்படுத்துபவர்களாகவுமே இருக்கின்றனர். இந்நிலையில், பெண் பற்றிய ஆணின் சமத்துவப் மனப்போக்கு சமூக விழிப்புணர்வினாலும், சுய மனமாற்றத்தாலுமே ஏற்படும்.

இன்றைய பெண் பாலியல் வன்முறைக்கு எதிரான குரல் குறிப்பாக, ஆண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதே நம் எல்லோரின் நோக்கமாகவும் இருக்கவேண்டும்.

என்னுடைய அச்சம் எல்லாம் இன்று சிறுமிகளாக இருப்பவர்கள் குறித்தே. அவர்களுக்கு ஆண்களை நாம் எப்படி அறிமுகப்படுத்துவது, ஆண்களைப் பற்றி நாம் அவர்களுக்கு என்ன சொல்லி வளர்ப்பது, நண்பர்களே?

கவிஞர் குட்டி ரேவதி

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (29-Dec-12, 8:19 pm)
பார்வை : 205

மேலே