முதல் நாள்.. முதல் பார்வைகள்..
சில அழுகைகள்..
பல 'அடம்'கள்..
அதற்காக ஆங்காங்கே
'தலை'காட்டும் அடக்குமுறைகள்!
என்றுமே இடைநில்லா
பள்ளி செல்லும் பயணங்கள்
இன்று
நோட்டு புத்தக கடையிலும்
மிட்டாய் கடையிலும்
நின்று.. தின்று செல்கிறது
நெடுந்தூர பயணம் போல!
புதிதாய் பளபளக்கும் 'ஷு'க்கள்..
பலநாள் தாகத்தில்
மை உருஞ்சும் பேனாக்கள்!
பல் விழுந்த பகிர்வுகள்..
மொட்டையடித்ததால் அடையாளம்
கண்டறிய முடியா முகங்கள்!
காணாமல் போன நோட்டுக்களின்
கணக்கெடுப்பு கவலைகள்!
அசைன்மெண்ட் பற்றிய
அவசர ஆலோசனைகள்!
இவ்வளவு பரபரப்புகளுக்கிடையிலும்
பார்த்த படங்களின் பட்டியல்
பிரதானமாய் பேசப்படுகிறது
வண்ணத்துபூச்சிகளால்...
வகுப்பறை வாசல் வரை!