இயற்கையோடு இயைந்து !
![](https://eluthu.com/images/loading.gif)
துக்கம் துவங்கும்போது...!
உன் உள்ளங்கை பார்த்து
வானம் நோக்கு
நீல வண்ணம் விடுத்து
சூரியனுக்கு அப்பால்
விழிகளை சுற்றவிடு,
கிடைக்கும் இருட்டினுள்
இனிதே தனித்தமர் !
தினமும் விழுந்து - வீரியமாய்
மறுநாள் எழுந்து நடைபோடும்
சூரியனின் சூத்திரத்தை
கற்றுக்கொள் - எரியும்போது
வழித்தங்கும் வலிதாங்க
வழியெதுவெனவும் வினவு !
விழும் அருவிகளிலிருந்து
துளித்துளியாய் பறந்து
பாறை மோதும் படலம்
தவிர்த்து - செய்த பனியாய்...
சூழ்ந்த செடிகளுக்கு - சூல்
சூழ்ந்து குளுமை கொடுக்கும்
பாரிய பண்பை பெறு !
பூக்கடையாய் வானிலிருந்து
வந்திறங்கி - பிரிந்து சென்று
பணியாற்றி - சாக்கடையாய்
போய் விழுந்து சாகாமல்,
ஒடங்களோடு ஒன்றியோடி
கடல்தாயின் மடிதேடி
மடிந்து போகும் மழையிடம்
கூரிய மனமதை பெறு !
ஓரறிவு உடுக்கைகள்
இசைவதால் அசைந்து
இசைந்ததை அசைத்து
வருடும் தென்றலாகவும்
முரட்டுப் புயலாகவும்
பன்முகம் காட்டும் காற்றுடன்
சன்னல்கள் தாண்டி உரையாடு
கலந்துபேசு - கதவு பெறு !
சிலநொடியெனினும்
பகலவனை மறைத்து
நிலவை மறித்து - எள்ளி
விளையாடும் மேகங்களின்
மென்மையும் வெண்மையும்
கண்டுரசி, கண்டுசிரி !
நில்லாது ஓடுமவை
சொல்லும் ரகசியம் பயில் !
வானவில்லின்
வண்ணப் பிரிகைகளுக்கு
இடையிடையே நடந்து பழகு
அதனழகை குடித்துக்கொண்டு !
வேகாமாய் ஆட்டபட்ட
ஊஞ்சலின் - தலைதூக்கிய
பெருவடிவிடம் தலைசாய்த்து
குட்டித்தூக்கம் போடு
பெறுவதெல்லாம் பிறகிருக்கட்டும் !
உண்ணாமல் உறங்காமல்
உனைத்தொடரும் நிழலை
தொடர்ந்துபார் நீயோருமுறை !
வெளிச்சத்திற்கு எதிர் திசையில்
மறந்தபடி கருப்புடை தறித்து
நீ இன்புறும் ஏதோ ஒன்றின்
கலாடியில் விழுந்து கிடக்க
விடயம் வேண்டுமெனில்
நல்ல வெயிலில், நிழல் குடி !நன்
நாம் ரசிக்க, சிரிக்க, பறக்க
பல்லாயிரம் விடயங்களை
விருந்துகளாய் படைத்துவிட்டு
பூமிப்பந்தின் போர்வையாய்
புகுந்திருக்கிறது இயற்கை !
என் மகிழ்ச்சிக்கு - ஏன்
வேண்டும் இன்னொரு கை !
சுழலும் ஒவ்வோர் நொடியும்
பாடம் தரும், ஓடும் படமது
வசந்தத்தின் வடமது - ஆகவே
வாருங்கள் ஓடுவோம்
இயற்கையோடு இயைந்து !