உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)
உழவு செழித்து உள்ளம் செழித்து
ஊர் செழித்து உலகம் செழித்து~மனிதன்
இயற்கையின் அங்கமாய் இன்பமாய்
இருந்ததொரு பொற்காலம் ~இன்றோ
உழவு கொல்லும் காலனென
உணராத பேதமையால்
இரசாயன உரங்களாலே
இழந்துவிட்டோம் மண்வளத்தை
பாடுபட்டு இரு போகம்
பகலிரவாய் உழைத்தவனுக்கு
பாதி கூட லாபம் வேண்டாம்
முதலுக்கும் மோசமென்றால் பின்
விதைப்பது எவ்வாறு பிழைப்பதும் எவ்வாறு..?
நஷ்டமெனத் தெரிந்தும் நிலத்தையவன்
வெட்டி உழவு செய்வதால் தான் நம்
தட்டிலே கொட்டி வந்து கொடுக்குதந்த
பட்டினி மாற்றும் சோற்றினை
உரமிட்டு உயிர்சக்தி எழுந்த மண்ணில்
கற்களால் மூச்சடைத்து கட்டிடங்கள் கண்டால் அவன்
கண்களில் வடிவது கண்ணீரோ... இல்லை அது
செந்நீரின் சிதறலன்றோ......!!!
விவசாய நிலங்களெல்லாம் வீட்டடி மனைகளானால்
உழவன் மட்டுமில்லை மரணத்தின் விளிம்பிலே
உலகமும் அப்படியே உழவனின் வழியிலே