எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகா கவியெனும் மா சக்தி சுதந்திர தீக்கு நெய்யாக...

மகா கவியெனும் மா சக்தி

சுதந்திர தீக்கு
நெய்யாக இருந்து
நெருப்பூட்டிய பார-தீயே!

உன் வருகைக்கு பிறகுதான்
கவிதை வயலுக்குவந்தது
உன் எழுத்துக்கு பிறகுதான்
கவிதை ஏழைக்கு புரிந்தது.

எழுதுவது
எப்படி என்று எழுதுகோலுக்கு
சொல்லிகொடுத்த எழுத்தாளன் நீ
உன்கரம் பட்டதும்
பேனாவின் நீல மையும்
சிவப்பு மையானது
சமதர்மம் ஒன்றையே
அது எழுதியது..

தாய்ப்பாலுடன்
உன் தமிழ்பாலும்
கலந்து கொடுத்ததால் தானே
எம்வீட்டு பிள்ளைகளுக்கும்
வீரம் வந்தது.

உன் குயில்பாட்டு கேட்டபின் தானே
கரிசல் காட்டுக்கும்
காதல் வந்தது.

நீ- தீக்கதிர்
தீயின்கதிர்
நீ- போர்வாள்
போருக்கான வாள்.

நீ தந்த கவிகள்
எங்களுக்கு கற்கண்டு தேன்
பறங்கியருக்கோ கொட்டுகின்ற தேள்.

உன் பள்ளு பாட்டில்
அறை பட்டது
வெள்ளையனின் செவிகளோடு
உள்ளூரில்
பல சமஸ்தானங்களும்தான்

அதுவரை -
அரண்மனை நந்தவனங்களை
அலங்கரித்த தமிழ்
மன்னனுக்கு மண்டியிடாமல்
மானத் தமிழானது

மன்னனைப் பாடாமல்
மற்றோரைப் பாடியதால்
நீயும் இளங்கோ -
நீதானே
எம்கவிக்கெல்லாம் இளங்கோ .

மகா கவியே!
மறுபடியும் பிறக்கவேண்டும்
பிறந்து வரும்போது
எழுதுகோல் மட்டுமல்ல
ஏந்திவா ஒருதீப்பந்தமும் கூட .


சுசீந்திரன்.

நாள் : 11-Dec-14, 11:47 am

மேலே