எனக்கென்று மகுடத்தை சூட்டியது நீயா ? இருவிழியால் மனநெருப்பை...
எனக்கென்று
மகுடத்தை சூட்டியது நீயா?
இருவிழியால்
மனநெருப்பை மூட்டியது நீயா?
கனவுகளில்
விதவிதமாய் வர்ணங்கள் பூசிக்
கைகுலுங்க
மனங்குலுங்கப் பூட்டியது நீயா?
வருவாயோ மாட்டாயோ
எனத்தவிக்க விட்டே
மனதிற்குள்
துயரத்தை ஊட்டியது நீயா...?
அலைமோதும்
நெஞ்சிற்குள் அலையாக மோதிக்
கரையாக
வெறும்மணலைக் கூட்டியது நீயா..?
கனவுகளின்
நந்தவனம் போலிருந்த எனக்குள்
காதலெனும்
நடைவண்டி ஓட்டியது நீயா...?
கண்ணீர் என்ன
மதுவா எனக்கு...?
கண்ணி வைத்தாய்
விழுந்தேன் உனக்கு...
நெஞ்சிற் குள்ளே
பனியைப் பொழிந்தும்
நெருப்பாய்த்
தகித்தேன்; என்ன கணக்கு...?
உருகும் இரவில்
உன்றன் பாடல்
கேட்டுத்
துடித்தே மறப்பேன் பிணக்கு...
என்றன் பாட்டில்
பூக்கும் கண்ணீர்
என்னுள் தேடும்
சுகத்தைத் தனக்கு
பார்த்தும் பாரா
உன்மேல் என்றும்
தோன்றுவதில்லை
ஏதும் சுணக்கு
பொடிப்பொடியாய்
பொடிப்பொடியாய் உடைந்து போகவோ...?
பூவுன்றன்
சிரிப்பின்றி நாளும் நோகவோ...?
நதியோரப்
புல்வெளியில் படர்ந்தி ருந்தே
நடந்துவரும்
உனைக்கண்டு நெஞ்சில் வேகவோ...?
மாலைநிலாப்
பொன்னொளியில் நனைந் திருந்தே
உனைக்காணக்
காத்திருந்தே நொந்து சாகவோ...?
எங்கிருந்தோ ஒரு
பறவை பாடும்... நானும்
உன்பெயரைப்
பாடுமொரு பறவை யாகவோ...?
எப்போதும்...
எப்போதும் உன்னை எண்ணித்
தவிக்கிறதே
என்மனது... என்ன தாகமோ...?
அந்திநிலா
வரவில்லை... என்ன காரணம்?
அடிபெண்ணே! நீ
தானே அழகின் தோரணம்
விண்மீன்கள்
பூக்கவில்லை... இரவு வந்தும்...
ஏனென்றால் நீதானே
சிரிக்கும் பூவனம்...
மலரெல்லாம்
சருகாகி உதிர்ந்த போதும்
நீபார்த்தால்
அவையெல்லாம் வீசும் நறுமணம்...
எனக்குள்ளே
நீயிசைக்கும் இசையைக் கேட்டே...
இரவெல்லாம்
எங்கெங்கோ பறக்கும் என்மனம்...
உன்நினைவு
நெஞ்சிற்குள் உரசிப் போக
உயிருக்குள்
உயிருக்குள் மணக்கும் சந்தனம்
சிறகெனக்கு
முளைத்ததடி... நீபார்த்தபோது
பறந்திருந்தேன்...
எனைமறந்து கவலைகளும் ஏது...?
மதுக்குடுவை
ஆனதடி உன்னிணைவில் மனது...
தடுமாறிக்
கிடக்குதடி என்னுடைய பொழுது...
அலை அலையாய்
எத்தனையோ கனவுகளைத் தந்து
விலகித்தான்
போனாய்நீ... நான்நொந்தேன் வெந்து...
நாளுக்கு
நாளிங்கே நலிகின்றேன் தேவி...
எனைத்தழுவி
வலிவூட்டு நீயிங்கே வந்து...
அமுதூறும் ஒரு
சொல்லை நீஉதிர்த்துப் போனால்
நாளெல்லாம்
இங்கிசைப்பேன் தேன்காதல் சிந்து...
எங்கே என்
உயிரென்று நாளெல்லாம் தேடிக்
கண்டேன் உன்
கண்ணிமையில் எங்கெங்கோ அலைந்து...
உன்பார்வை..
உன்பார்வை... உன்பார்வை தானே
என்நெஞ்சத்
துயரத்தைத் தீர்க்கின்ற மருந்து...
பனிமூடிய
விடிகாலையில் உனைக்காணவே வரவா...?
குளிர்போக்கிடும்
இளஞ்சூட்டினை என்பார்வையில் தரவா...?
நதிபோகிற
வழிமீதினில் உருவாகிற கரையாய்
நீபோகிற
வழியாவிலும் கரையாய் உருப் பெறவா...?
அலைமோதிடும்
கரைமீதினில் விளையாடிடும் காற்று
உனைப்பார்த்ததும்
தடுமாறிடும் என்மூச்சினுக் குறவா...?
நெஞ்சின் ஒலி
கொஞ்சும்மொழி காதல்மொழி யலவா...
இன்னும் உனக்
கேனோதுயர்? நெஞ்சம்வெறும்
விறகா...?
தயக்கம் ஒரு
மயக்கம் எனக் கலங்கும் சிறு மனமே...
அவளைத்தொட
இமைக்கும்இமை... பறக்கும் இரு சிறகா...?
வழிந்தோடும் உன்
அன்பைப் பிடித்துவைக்கும் பாத்திரம்
என்மனந்தான்...
காத்திருக்கும் அதற்கென்றன் நேத்திரம்.
உனைக்காண முடியாத
பொழுதுகளை நினைத்ததும்...
நெஞ்சிற்குள்
பற்றுதடி... பற்றுதடி ஆத்திரம்.
பேரழகைத்
தரிசித்து நிறையட்டும் என்மனம்...
வந்துவிடும்
வந்துவிடும் என்னருகில் சீக்கிரம்...
நாமிருவர்
சேர்ந்திருக்க முடிவெடுத்த பின்னரும்...
எதற்கிந்த
எதற்கிந்த வீணான சாத்திரம்...?
எதையிங்கே
நான்நினைத்துக் கொண்டிருக்கும் போதிலும்...
உன்பெயரே
உன்பெயரே நான்சொல்லும் தோத்திரம்...
சின்னக் கண்கள்
மின்னல் வெட்டும்
சிரித்தால்
போதும் அமுதம் கொட்டும்
உயிரைச் சுண்டிப்
போகும் பார்வை
உள்ளக் கதவை
நாளும் தட்டும்...
உன்னை நினைத்துப்
பேசும்போது
சொல்லில் எல்லாம்
தேனே சொட்டும்.
அருகில் நீதான்
வந்தால்போதும்
உயிர்த்தே
எழுவேன் மரணம் தொட்டும்...
வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் அன்பே
பிரிந்து போகும் எண்ணம்
மட்டும்...
ஒருவர் கைக்குள்
ஒருவர் என்றால்
வானம் நமக்கு
நொடியில் எட்டும்.
வா... வா...
அன்பே... இங்கே... வா... வா...
வந்தால் எனக்குச்
சொர்க்கம் கிட்டும்
குறிப்பு - படித்ததில் பிடித்தது :
இந்த கவிதையை படிக்கும் பொழுது வார்த்தை பிரயோகத்தை எண்ணி மெய் சிலிர்த்தேன் ...