பெருமையான எண்ணம் அறிஞர்கள், மூத்தோர்கள் ஆகியோர்களின் ஆசிகளும் மற்றோர்களின்...
பெருமையான எண்ணம்
அறிஞர்கள், மூத்தோர்கள் ஆகியோர்களின் ஆசிகளும் மற்றோர்களின் வாழ்த்துகளும் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதை நான் கண் கூடாகக் காண்கிறேன் என்பதற்கான எண்ணம்தான் இது. அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் மதிப்புக் கொடுத்து, அதை மனதில் இருத்திக் கொண்டு முயற்சித்தாலே போதும் அவை நம்மை சாதிக்க வைத்துவிடும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம்.
நீண்ட நாட்களாக இலக்கணக் கவிதைகள் என நான் சொல்லிக் கொள்ளும் மரபுக் கவிதைகளை எழுத முடியவில்லை என்று நினைத்து பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன். அன்று என்னை அருகில் அமர வைத்து அய்யா சொல்லித் தந்தவற்றை மனதில் வைத்துக்கொண்டு முயற்சி செய்தேன். இது போன்ற முயற்சி மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் என்னைப் போன்றோருக்கு இது மிகப் பெரிய முயற்சி என்பதை உறுதியாகக் கூறமுடியும். தாய்மொழிக்கு நான் தரும் மரபு மரியாதையும் இதுவே என நினைக்கிறேன்.
முதன் முதலாக எதை தலைப்பாக கொண்டு எழுதுவது என யோசித்த போது, எனக்கு தெரிந்த உழவுத் தொழிலை ஒட்டியே எழுத நினைத்தேன்.அதில் பிறந்தவைதான் இந்த மூன்று குறட்பாக்கள்.இவை எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை.
திரு கன்னியப்பன் அய்யா, திரு சங்கரன் அய்யா,திரு எசக்கியல் அய்யா இவர்களோடு சியாமளா அம்மா இன்னும் பல தமிழறிஞர்கள் என எல்லோரின் ஒட்டுமொத்த ஆசிகளின் கைபிடித்து இந்த பாக்களை இங்கே பதிவிடுகிறேன். இதில் தவறுகள் இருந்தால் அதை மன்னித்து எனக்கு சரி செய்தும் தரவேண்டுகிறேன். சரி செய்தபின் அவர்கள் சொன்னவற்றையும் மனதில் வைத்துக் கொண்டு அதே போல் மற்ற 7 பாக்களையும் ”உழவனதிகாரம்” என்ற தலைப்பில் இவற்றை ”கவிதைகள்” பக்கத்தில் பதிவிட்டு உழவுத்தொழிலுக்கும் திருவள்ளுவருக்கும் இதை சமர்ப்பணம் செய்திடுவேன்.
நான் எழுதிய மூன்று குறட்பாக்கள் மற்றும் நான் எதை மனதில் நினைத்து எழுதினேனோ அந்த விளக்கத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.
சேற்று யிராயெனை கண்பார்த்த காலன்
அவன்கயிறை கைமறந்தா னிங்கு
(எனது உயிரைப் பறிக்க வந்த எமதர்மர்,சேற்றில் வேலை செய்யும் என்னை, விவசாயத்தின் உயிராகவே நினைத்துப் பார்த்து, தான் வீச வந்த இறப்புக்கயிறை என் மீது வீச கைமறந்து, அதை தூர எறிந்து விட்டு, அதே கையாலேயே இங்கு (வயல்வெளியில்) எனக்கு உதவி செய்வார்
நாறுது காற்றதென் றெண்ணி தொலைபோவோர்
மண்வா சமறியா தார்
(தண்ணீர் பற்றாக்குறை சமயங்களிலும் ஒரு சில சமயங்களிலும் வயலில் இருக்கும் பயிர்களோடு நாள் கணக்கில் தண்ணீர் தேங்கியிருந்தால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் ஒரு வாசனை வீசும்.”இது என்ன இப்படிநாறுகிறது” என்று எண்ணி வயல் பக்கம் வராமல், வேறு வழியாகப் போவோர்கள் மண்ணின் மணத்தையும், அதன் வாழ்வையும் அதாவது எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு நல்லதே செய்வதோடு, தான் துர்நாற்றம் வீசினாலும் பரவாயில்லை என்று அது தண்ணீரை தேக்கி வைத்து பயிருக்கு தரும் அதன் வாழ்வையும் அறியாதவர்கள்)
வானக் கதிரளக்கு மெங்கள் பொழுது
புலரும் மழைவரும் நாள்
வானத்திலிருந்து வரும் சூரியனின் கதிர்களைப் பார்த்து பொழுதை தெரிந்துகொள்ளும் உழவர்களின் பொழுது, சரியான சமயத்தில் மழை வந்தால்தான் அது அவர்களுக்கு வாழ்க்கை எனும் பொழுது புலர்ந்த நாளாக இருக்கும்.இல்லையென்றால் அது என்றும் துன்பமான கருமையான பொழுதாகவே இருக்கும்).