சமூகத்தில் இன்றைய பெண்களின் நிலை!! இதைப்பற்றி எழுத வேண்டுமென்று...
சமூகத்தில் இன்றைய பெண்களின் நிலை!! இதைப்பற்றி எழுத வேண்டுமென்று என்னுள் நீண்ட நாட்களாக எண்ணமிருந்தது. பெண் என்பவள் யார்? அவள் இச்சமூகத்தில் எவ்விதம் நடத்தப்படுகிறாள்?
''வெளியே போகும் போது பார்த்துப் போய்ட்டு வாமா, டியூசனுக்கு தனியா போகாதே, கடைக்குப் போனா தம்பியைக் கூட்டிட்டு போ. நைட் லேட்டா வராதே, சாயந்திரம் லேட்டானா ஒரு போன் பண்ணி சொல்லு! என்று ஒவ்வொரு பெற்றோரும் இன்று தங்கள் வீட்டு பெண்களிடம் கூறுவது இயல்பாக உள்ளது. இன்றைய சூழலில் ஒரு பெண் தனியே வெளியில் செல்வதென்பது எவ்வளவு கடினம். அப்படி வெளியே செல்லும் பெண் வீட்டிற்குத் திரும்பும் வரையில் அந்தப் பெற்றோர் அடையும் தவிப்பும், பயமும், வேதனையும் எண்ணிலடங்கா!
இன்றைய தேதியில் விடுமுறைக்காக சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து தங்கள் ஊருக்குச் செல்லும் பெண்களின் நிலை - பயமும் பாதுகாப்பின்மையும் அவர்களுடன் பயணித்துக் கொண்டே இருக்கும். ரயிலில் ஸ்லீபர் க்லாஸ் முன்பதிவு செய்தும் இரவில் உறங்காமல் கண் விழித்து பிரயாணிக்கும் பெண்களுக்கு அமைதியென்பதே இருப்பதில்லை.
Play school, LKG செல்லும் குழந்தைகளிடம் 'good touch and bad touch' பற்றி கவுன்சிலிங் செய்வது இன்று கட்டாயமாக உள்ளது. என்ன உலகமடா இது!! அந்த சிறுவயதிலேயே ஆண் பற்றிய ஒரு கசப்பான எண்ணமும், பயமும் அவளுக்குள் விதைக்கப்படுகிறது. தன் தந்தை, சித்தப்பா, மாமா, உறவினர், பக்கத்து வீடு என்று தன்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு ஆணிடமும் அவளின் எச்சரிக்கை அவசியமாகிறது.
நம் அனைவரையும் பாதித்த ஒரு நிகழ்வு - கொடூரமான பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு, துடித்துத் துடித்துச் சாவைத் தழுவிய நிர்பயா.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் அந்த இளம்பெண் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டார். அந்த ஆறு குற்றவாளிகளில் ஒரு சிறாரும் அடங்கும்.
பெண்ணைப் போற்றி வணங்கிய நம் தாயகம் இன்று அந்தத் தாயின் கருவறையை அழித்துவருகிறது. GDP, technology, smart city and internet for all என்று ஒருபுறம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்குக் கொண்டே செல்கிறது. பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு, வன்கொடுமை, பெண் கடத்தல், ஆசிட் தாக்குதல்கள், மானபங்கம் - இதுவே இன்றைய செய்தித்தாள்களில் நீங்காமல் இடம் பெற்றிருக்கும் செய்தி.. இங்கு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். இன்னும் கொடுமை என்னவென்றால் ஒரு வயது குழந்தையும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகிறது, கற்பனை செய்வதுகூடக் கடினமாக இருக்கிறது. போலீஸ் நிலையத்திலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் பெண்களுக்கும், ஸ்கூல், காலேஜ் என்று அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தவண்ணம் உள்ளன.
நிர்பயா வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவன் கூறியது பின்வருமாறு;
''“ஏன் அந்தப் பெண் இரவு 8 மணிக்கு மேல் தனியாக ஒரு ஆணுடன் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் அவளுக்குத் தண்டனை கொடுத்தோம்''. ''இரவில் வேற்று ஆண் ஒருவனுடன் வெளியில் வரும் பெண் ஒழுக்கமற்றவளாகத்தான் இருப்பாள்''. ''பாலியல் பலாத்காரத்திற்கு ஆணைவிட பெண்ணே முக்கிய காரணமாகிறாள்''. “அந்தப் பெண் எங்களை எதிர்த்துப் போராடாமல் எங்களை அனுசரித்து நடந்துகொண்டிருந்தால், நாங்கள் அந்தப் பெண்ணைக் கொல்லாமல் விட்டிருப்போம்”. “பெண்ணும் ஆணும் சமமல்ல. அவர்கள் வீட்டு வேலை செய்வதில் மட்டுமே ஈடுபட வேண்டும். டிஸ்கொதேவுக்குப் போவது, அரைகுறையாக ஆடை அணிந்து தவறுகள் செய்வது என்று இந்தக்காலப் பெண்கள் படுமோசம். 20 சதவிகித பெண்களே நல்லவர்கள்”
குற்றவாளியின் மனைவி கூறியது, “என் கணவர் தவறு செய்திருக்க மாட்டார். அவர் இறந்தால் என் பிள்ளையின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு நானும் இறந்து விடுவேன்”. இதே நிலை இப்பெண்ணிற்கு ஏற்பட்டிருந்தால் அவள் குடும்பம் குற்றவாளிகளை மன்னித்து மறந்திருக்குமா?
சிறார் குற்றவாளியின் தாயின் பதில், ''என் பையன் அந்தத் தப்ப செய்திருக்க மாட்டான்''. தண்டணைக் காலம் முடிந்து இன்று சிறார் குற்றவாளி சுதந்திரமாகச் சுற்றுகிறான். நமது சட்டத்தில் அவனுக்கு எந்தவொரு கடுமையான தண்டனையும் வழங்கப்படவில்லை.
குற்றவாளிகளுக்காக வாதாடிய (போராடிய) வழக்கறிஞர் கூறியது, “நம் சமூகத்தில் ஒருபோதும் பெண்களை தெரியாத ஆண்களுடன் மாலை 6.30 / 7.30 / 8.30 மணிக்கு மேல் வெளியில் விடுவதே இல்லை. இந்தியாவில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை கட்டி வைத்திருக்கிறோம். என் தங்கையோ, மகளோ இது போல் திருமணத்திற்கு முன் இருந்தால், குடும்பத்தினர் முன்னிலையில் தீ வைத்து எரித்து விடுவேன்”.
“பெண் மென்மையானவர்கள், வைரத்தை போன்றவர்கள். அவளைக் கைக்குள் பொதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவளை இப்படித் தெருவில் போட்டால் நாய்க் கவ்விக்கொண்டுதான் போகும். ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்கவே முடியாது. இரவில் என் வீட்டுப் பெண்களை வெளியே தனியாக அனுப்பிவைக்க மாட்டேன். குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்த வெளி நபர்களுடன் சுற்றுகிற பெண்கள் நல்லவர்களே இல்லை. இவர்கள் சேர்ந்து பழகினாலே அது செக்ஸ்க்குதான். நம்முடைய கலாசாரம் சிறந்த கலாசாரம். இதில் பெண்களுக்கு இடமில்லை”. இதுவே இன்று பெரும்பாலான மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
குற்றவாளிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தால் அதை எதிர்த்துப் போராட பல வக்கீல்கள் கூட்டம் ஒருபக்கம். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்ட அப்பெண்ணை அருகிலிருந்த அனைவரும் வேடிக்கைப் பார்த்தார்களே தவிர எவரும் காப்பாற்றவோ உதவவோ முன் வரவில்லை. கேடு கெட்ட மனிதர்கள்!! என்னைப் பொறுத்த வரையில் - தான் செய்தது தவறே இல்லை என்று நினைப்பவர்களிடம் கருணை காட்டுவதை விட முட்டாள்தனம் வேறெதுவுமில்லை. அந்தச் சிறார் குற்றவாளிக்கு தான் செய்வது தவறு என்று தெரிந்தே செய்திருக்கிறான், நீதிமன்றமோ சிறார் பிரிவின் கீழ் அவனை சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளது.
இத்தகைய வன்செயலுக்கு குடியும் போதையும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. பணம் படைத்தவனும் வலிமையானவனும் பெண்ணைத் துன்புறுத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தனிமையிலிருக்கும் பெண்ணிடம் எது வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் தடுக்கமாட்டார்கள், அப்படியே கைது செய்யப்பட்டால் சட்டத்திலிருத்து எளிதில் விடுதலை பெறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதேபோல் இன்னும் எவ்வளவோ வக்கிரமான சம்பவங்கள் குழந்தைகளிடம் கூட நடந்து வருகின்றன. அதற்காக குழந்தைகள் மேல் இச்சமூகம் குறை சொல்லுமா - குழந்தையின் ஆடையினால் தான் அவள் துன்புறுத்தப்பட்டால் என்று !!
நிர்பயா வழக்கை முன்னிறுத்தி விவாதம் நடத்தி தங்கள் TRP எண்ணை உயர்த்திய தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும், சமூக ஊடகங்களும் இன்று இவ்வழக்கைப் பற்றி எண்ணுவதுமில்லை, அதைப் பற்றி விவாதிப்பதுமில்லை. இத்தகைய கொடூர நிகழ்வை குடிமக்களாகிய நாமும் எளிதில் மறந்துவிட்டோம். இன்றைய சினிமாவும், ஊடகங்களும் பெண்களைக் காட்சிப் பொருளாகவே சித்தரிக்கின்றது.
இது போன்ற தீமை இன்னொரு நிர்பயாவிற்கு விளையுமுன் அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இதே நிலை நாளை நம் வீட்டுப் பெண்களுக்கு உருவாகாதா? அதைத் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா?
குழந்தையின் பிறப்பிலிருந்தே அதனுள் ஆணாதிக்க சிந்தனையானது விதைக்கப்படுகிறது. பெண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டு ஒவ்வொரு நிலையிலும் அவள் மற்றொரு ஆணைச் சார்ந்தே வாழவேண்டிய சூழ்நிலை உள்ளது. சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் ஆண்-பெண் இருவரும் சமம் என்ற எண்ணத்தைப் பதிய வைக்க வேண்டும். பெண்ணை சமமாக மதித்தலையும், பிறருக்குத் தீங்கிழைத்தல் தவறானதென்றும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளனைத்தும் தண்டிக்க தக்கச் செயலென்று கற்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அரசும் அதைச் சார்ந்த துறைகளும் சட்ட வரம்புகளை ஆராய்ந்து, தகுந்த சட்டத்தை வகுத்து எதிர்காலத்தில் இத்தகைய கொடிய செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பெண்ணைப் போற்றாத, ஆராதிக்காத, மதிப்பளிக்காத எந்தவொரு சமூகமூம் அழிவின் பாதையிலே செல்லும். இன்று நாம் போற்றிப் புகழும் நம் நவீன இந்தியா அத்தகு கொடிய பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.
இன்னும் இது போன்ற நிலை எத்தனை வருடங்களுக்குத் தொடரும்?