எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததை பகிர்கிறேன் :-- ஸ்ரீதர்ஷன் சுஜாதா - நடமாடிய...

படித்ததை பகிர்கிறேன் :--ஸ்ரீதர்ஷன்

                                                                               சுஜாதா - நடமாடிய கலைக்களஞ்சியம்

     எனது வாசிப்பனுபவம் வயதுக்கேற்ற மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்தும் வாசித்துக்கொண்டிருக்கும் ஒரே நபர் அமரர் சுஜாதா. காரணம் ரொம்ப simple எதை எழுதினாலும் எளிமையாக எழுதுவார், புரியும்படி எழுதுவார், சுவாரசியமாய் எழுதுவார்.

என்னவாக ஆக வேண்டும் என்று யாரேனும் கேட்டால் டொக்டர் தொடங்கி ஜனாதிபதியாவது வரை சொல்லுவோம். ஆனால் இருந்தா இப்படித்தாண்டா இருக்கணும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் இவர். இவரது அறிவின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. எழுத்தாளர், நாடகாசிரியர் திரைப்பட வசனக்கர்த்தா, கண்டுப்பிடிப்பாளர் என இந்த மனிதனுக்குத்தான் எத்தனை முகங்கள். எதைப் பற்றித் தெரியாது இவருக்கு. சங்கப் பாடல்கள் தொடங்கி சாப்ட்வேர் வரை பேசுவார். நல்லப் பாடல்களின் ராகங்களைப் பற்றியெல்லாம் ரசனையாய் அலசுவார். நல்லப் படங்களைக் கொண்டாடுவார். அரசியல்,கிரிக்கெட் இன்னும் என்னவெல்லாமோ. இதனாற்றானோ என்னவோ அவரைப் போல இல்லாவிட்டாலும் எல்லாவற்றிலும் கொஞ்ச கொஞ்சமாய் பிய்த்தெடுத்தது ஏதோக் கொஞ்சம் மண்டைக்குள் போட்டு வைத்திருக்க முயல்கிறேன்.

அவரது கொலை அரங்கம் நாவலில் வசந்த் ஒரு முறை " உங்களுக்கு வல்வெட்டித்துறை, மாத்தளை இங்கு யாரேனும் பழைய உறவினர் இருந்து அவர்கள் எதிரிகளாகியிருக்க வாய்ப்பில்லையா?" எனக் கேட்பதாய் ஒரு வசனம் வரும். அடடா சுஜாதா நம்ம ஊர் பெயர எழுதிட்டாருடா என புல்லரித்துப் போயிருக்கிறேன். நமக்குப் பிடித்தவருக்கு நம்ம ஊர் தெரிஞ்சிருக்கே என்ற புளங்காகிதம்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுவது இவர் எழுத்துக்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். ஒரு காலயந்திரப் பயணம் போல கதை நிகழ்வதாய் சொல்லப்படும் காலத்திற்கு நம்மைக் கொண்டு செல்வது அது. சமகால நிகழ்வுகளை ஆங்காங்கே தூவி பயிர் செய்யப் பட்ட காலத்திற்கேற்ற எழுத்துக்கள் அவருடையவை.

Advanced level படிக்கும் போதும் college of Education இலும் நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் கெத்தாய் உலாவ உதவியது அவ்வப்போது நான் சொல்லும் A ஜோக்குகள் உபயம் வசந்த். என்ன இது போன்ற ஜோக்சைக் கேட்டு வெட்கத்தால் முகம் சிவந்து செல்லமாய் அடிக்கத்தான் யாருமில்லாமல் போய் விட்டனர். ஒருவேளை வசந்த் போல் இல்லாமல் கணேஷ் போல் கொஞ்சம் அழுத்தமானவனாய் இருந்ததாலாயிருக்கலாம். வல்கராக இல்லாமல் முகஞ்சுழிக்கச் செய்யாது உதட்டோரம் புன்னகையை வரச் செய்பவை சுஜாதாவின் பகடிகள். ஏன் போய்சில் கூட அந்த இளைஞர்கள் தமக்குள்ள பரிமாறிக்கொள்ளும் பகடிகளில் அவை வெறும் பாலுணர்வு பாற்பட்டதாக இல்லாமல் ஒரு புத்திசாலித்தனம் இருக்கும்.

இணையம் பரவலாக இல்லாதக் காலத்தில் அவரது எழுத்துக்கள் நிச்சயம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருந்திருக்கும். பிறகு எத்தனை விடயங்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். நாமெல்லாம் Grand master பார்த்து விட்டு யாரையாவது நினைத்துக்கொள் நான் கண்டுப்பிடிக்கிறேன் என விளையாடிக் கொண்டிருக்கும் போது இது Savant syndrome இதை மையமாக வைத்து Rain man படம் எடுக்கப்பட்டிருக்கிறது என எழுதுவார். உலகத்தரத்திலான பெரும் ஆளுமைகளை அடையாளம் காட்டினார். இதையெல்லாம் இவர் செய்தது சிக்கலான வார்த்தைகளாலான பெரிய கட்டுரைகளின் மூலம் அல்ல. ச்சும்மா போகிற போக்கில் தனது எழுத்துக்களில் அள்ளித் தெளித்தவையே அவை.

சிலக் கதைகளை ஒரு சினிமா ஸ்கிரிப்ட் போல இருந்தது என வர்ணிப்பார்கள். எனக்கு ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாசிக்கும் போது படமே பார்ப்பது போல இருந்தது.

சுஜாதாவின் கதைகளில் நான் படித்தவற்றில் எனக்குப் பிடிக்காதது என்று பெரிதாக எதுவும் இல்லை. ஒன்றே ஒன்று பெயர் ஞாபகமில்லை நன்றாக படித்த தோற்றப் பொலிவற்ற முதிர்கன்னி ஒருவரை அவரது சம்பளத்துக்காக திருமணம் செய்து ஏமாற்றும் ஒருவரின் கதை. இருவரது பார்வையிலும் அந்நாவல் நகரும்.
திக்கான மீசையும் சவரத்திற்குப் பின்னரான பசுமை படர்ந்த மழு மழுப்பான கன்னங்களையும் கொண்ட பசையுடைய ஆண்களை மடக்கி செட்டில் ஆகும் பெண்களின் கனவுகளையே திரும்ப திரும்ப எழுதும் எனக்குப் பிடிக்காத ஒரு எழுத்தாளரின் கதை போல் இருந்ததாலிருக்கலாம்.

மற்றப்படி மறுபிறவி,ஜோசியம் போன்ற அபத்தங்களை எல்லாம் மறுப்பவர் ஆண்டாள் பாசுரங்களை பற்றியும் ஸ்ரீரங்கநாதனை பற்றியும் பக்தி பரவசத்தோடு சொல்லும் போதும் பௌதீக விஞ்ஞானத்தில் தனக்கு இருக்கும் ஞானத்தைப் பயன்படுத்தி பாகவத புராணத்தில் இருக்கும் கதைகளை எல்லாம் ஏதோ விஞ்ஞான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற ரீதியில் சொல்லும் போதும் சற்று எரிச்சல் எட்டிப் பார்க்கும்.

சுஜாதா என்ற ஒருவர் இல்லாமலிருந்தால் நிச்சயமாக இன்று இத்தனை பேர் பளோகுகளில் பத்தி எழுத்துக்களை முயற்சித்துக் கொண்டிருக்க மாட்டோம் என நினைக்கிறேன். ஏதோ வருடமொரு முறை நினைவுக் கூறத்தக்கவர் அல்ல அவர். இருந்தாலும் அவரைப் பற்றிய என் எண்ணங்களின் சிறு தொகுப்பே இப்பதிவு.



       

நாள் : 28-Oct-16, 9:12 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே