எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 81 ---------------------------------------- தற்போது விஞ்ஞானத்தின்...

  அனுபவத்தின் குரல் - 81 

----------------------------------------

தற்போது விஞ்ஞானத்தின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும் இந்த நவீன காலத்தில் பலரும் பழங்காலத்து முறைகளையும் வழக்கங்களையும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல நான் இதற்காக உதாரணங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் கூட, ஆன்மீக வழியில் நடப்பவர்கள், மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து இயங்குபவர்கள் அல்லது வாழ்பவர்கள் தான் நடைமுறையில் மாற்றமின்றி செயல்படுவதை காண முடிகிறது. அதை குறை சொல்ல விரும்பவில்லை. குற்றம் கூறவில்லை. அவரவர் நம்பிக்கை மனநிலை பொறுத்த விஷயம் அது. ஆனால் அதே நேரத்தில் செயற்பாடுகள் சில விசித்திரமாக இருக்கும். ஒருபுறம் காலத்திற்கேற்ப மாற்றம் வேண்டும் என்று கோஷமும் மறுபுறம் பழங்காலத்து வழிமுறையில் நடைபோடுவதும் வியப்பில் ஆழ்த்துகிறது. அவர்கள் தான் அதிகம் வியாக்கியானம் பேசுகிறார்கள்.


ஒரு காலத்தில் கலப்பு திருமணம் அல்லது காதல் திருமணம் என்றால் ஒதுங்கி சென்றவர்கள் ஆதரிக்காதவர்கள், வேகமுடன் எதிர்த்தவர்கள் இன்று வேறுவழியின்றி ஒரு நிலையில் ஒப்புக் கொண்டாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள மனமின்றி இருப்பதால் செய்கையில் மாறுபடுவது காண முடியும். இன்னும் சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் ஏற்படாமல் இருப்பது வேதனைக்குரியது. சாதிமத கொள்கையில் வேறுபாடுகள் இருப்பதால் சர்ச்சைகளும் சச்சரவுகளும் நாளும் பலவடிவில் எழுந்த வண்ணம் உள்ளது. அதனால் வெறித்தனம் தலைவிரித்தாடுகிறது. இதனால் தலைமுறை உறவுகளில் இடைவெளி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பல தவறுகள் கொடுமைகள் சமூகத்தில் பாதிப்புகள் நிகழ்கிறது.இதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்திட வேண்டும். இதைப்பற்றி விளக்கமாக கூறினால் பகுத்தறிவு பேசும் நாத்திகர்கள் என்று முத்திரை பதித்து எதிரிகளாக பார்ப்பதும் கேலி பேசுவதும் இப்போது வாடிக்கையாகி விட்டது. இந்த மனப்பான்மை முற்றிலும் நீங்கிட வேண்டும். 


சிலர் ஆன்மீக வழியில் நடப்பவர்கள் என்று கூறிக்கொண்டு ஆன்மீகத்திற்கு எதிராக செயல்படுவதும் சமயவெறியை தூண்டி விடுகின்றனர். அறிந்து செய்கிறார்களா அல்லது அறியாமையின் விளிம்பில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. காலம் மாறும் நிச்சயம். சமுதாயத்தில் மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.


பழனி குமார்  

நாள் : 7-Feb-18, 9:31 pm

மேலே