இந்த இயற்கையின் நியதிகள் சலசல எனப் பாயும் நதியில்...
இந்த இயற்கையின் நியதிகள்
சலசல எனப் பாயும் நதியில்
ஜதி இயற்றும் தென்றல்
அதன் இசையில் லயித்து
இளைப்பாறும் கணங்கள்
வெயிலும் மழையும் வீழ்ந்தாலும்
நிற்காத மூங்கில் காட்டுப் புல்லாங்குழல்
அதில் மூழ்கித் தவிக்கும் முற்பகல் நிழல்
கலகலவென கவியியற்றும் கிளிகள்
அதை மெருகேற்றும் இசையின் ஸ்வரங்கள்
அழகாக நடமாடும் மயில்கள்
அதற்கு தாளமிடும் மரக் கிளைகள்
சிலையாக இசை பாடும் குயில்கள்
அவற்றை அசையாமல் இரசிக்கும் மலைகள்
திசையெட்டும் கலங்கிட இசை பயிலும் இடிகள்
அவற்றுக்கு அசை போடக் கற்றுக் கொடுக்கும் மின்னல்கள்
இதைக் கண்டு இறைவன் வரைந்தான்
சில கோலங்கள்
அவை ஆகின அழகிய வான் கோடுகள்.
மேகம் கசக்கிப் பிளிந்த
மஞ்சள் பொடி வானில்
தாகம் தீர்க்கும் விண்மீன்கள்
கண்ணிமைக்கும் கணங்களைக் கூட களவாடிச் செல்லும் காரிருள் நிலவு
மிகையாக ஒலி எழுப்பும் கடலில்
சிலை வடிக்கும் அலைகள்
இசையாக நான் தேடும் நினைவுகளை
தடையின்றி தரும் வனங்கள்
வயதுகளை மறந்து
வயல்களில் திரிந்து
மயில்களுடன் விளையாடி
குயில்களுடன் உரையாடி
இலைகளுடன் கவி பாடி
மரங்களில் இளைப்பாறும்
இனிமையின் நினைவுகளை
கனவுகளில் காண்கின்றேன்.
இந்த இயற்கையின் நியதிகள் தான்
எத்தனை அபூர்வமானவை
எத்தனை அதிசயம் வாய்ந்தவை