*மகா மாயை* அண்டவெளியில் எண்ணிலடங்கா கருமுட்டைகள் ( கோள்கள்)...
*மகா மாயை*
அண்டவெளியில் எண்ணிலடங்கா கருமுட்டைகள் ( கோள்கள்)
"ஈர்ப்பு" எனும் மாயவிசையால் புவிக்கோள(ல) மகள் கொண்டனள் கர்ப்பம், ஈன்றனள் கோடானு கோடி உயிர்கள்
பஞ்ச பூதங்கள் வந்தன, மலைகள் முளைத்தன, பனிமலைகள் இளகின, நீராய் நீண்டு ஓடின
தாவரங்கள் துளிர்த்தன, தரணி செழித்தது
பூக்கள் பூத்தன, பூச்சிகள் பெருத்தன!
மரங்கள் திரண்டன, காடுகள் கண்டன
பறவைகள் சிறகடித்தன, மீன்கள் துள்ளின
ஊர்ந்தவை நடந்து, கால்நடையாயின
காலங்கள் கடந்தன, மனிதன் ஜனித்தான்!
பரிணாம வளர்ச்சியில் பல பரிமாணங்கள் படைத்தான்
பங்காளிச் சண்டைகள் முற்றின, வரப்பைத் தாண்டி, வரம்பு மீறினான்
பார் மொத்தமும் தனக்குத்தான் பாத்தியதை என்றான்
பிந்திப் பிறந்தவன் "பெரியண்ணன்" ஆனான்
பங்காளிகளின் பங்களிப்பில்லாமல் தன்னிருப்புச் சாத்தியமில்லை, இப் பேருண்மையை ஏனோ ஏற்க மறுத்தான்
'பகுத்துண்டு, பல்லுயிர் ஓம்புதலும்', எனும் குறளைப்
புறம் தள்ளி அறவழி மறந்தான்
ஆறறிவுடையவன் நானென ஆணவத்துடன் கொக்கரித்தான்!
ஆறறிவாவது ஒன்றுபட்டு ஓரினமானதா?
குலமும் சாதியும் கண்டு 'தனி'த் 'தனி' ஆனான்...
சுயம் என்பது வெறும் 'நானோ'! அது யாவற்றையும் உள்ளடக்கிய 'யானே' அன்றோ!
மறைந்து தோன்றி, தோன்றி மறைந்து ஆடும் மாய விளையாட்டை முடித்து அண்டவெளித்தாழ் திறக்க, மகாமாயை தாள் வணங்கிடுவோம்.. திறவுகோல் அவளிடமே!
அன்னை மகா மாயையே போற்றி, போற்றி!!!
கணேஷ்