புதிய காதல் கவிதை அதிகமாக பார்த்தவை தேர்வு செய்யப்பட்டவை...
ஒரு நீண்ட காதல் கடிதம்
காற்றை சுவாசிக்கிறேன்.
உன்னை நேசிக்கிறேன்.
வாழ்வதற்காக சுவாசிக்கிறேன்.
உன்னை நேசிப்பதற்காகவே வாழ்கிறேன்.
சில நேரங்களில்ல
காற்றை நேசிப்பதைபோல
உன்னையும் சுவாசித்துவிடுகிறேன்.
போராட்டம் மட்டுமல்ல
காதலும்கூட
உணர்வின் வெளிப்பாடுதான்.
அது இல்லையென்றால்
மார்க்சோடு சென்னியேது?
மார்க்சியமும் மண்ணிலேது?
வார்த்தையில்லாமல் கவிதை இல்லை.
காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
எனது பேனா
கவிதைக்கு
புது இலக்கணம்
வகுத்துக் கொண்டிருந்தது.
நானோ
நமது காதலுக்கு
புது இலக்கணம்
வகுத்து கொண்டிருந்தேன்.
உரசினால்
எங்கே நீ
எரிந்து போவாயோயென்பதால்
உன்னை
பூஜிக்க மட்டுமே செய்கிறேன்.
நான்
உன்மீது
கொண்டுள்ள அன்பிற்கு
களங்கப்பட்டுவிட்ட
காதல் என்னும் வார்த்தையை
பிரயோக படுத்த முடியாது.
இலட்சிய பயணத்தில்
வழித்துணையாய்
வந்த உன்னை
வாழ்க்கை துணையாய்
அழைக்கும் துணிவு
என்னிடமில்லை.
கொள்கை பாதையில் மட்டும்
குறுக்கீடு இல்லையென்றால்
நீயே எனது....
என் காதல்
ஒரு தலை ராகமல்ல.
ஒருவகை ராகம்.
ஒட்டாமலே
உதடுகள் இசைக்கும்
சங்கீதம்.
ஆம்
என் காதலை
எப்போதும் நான்
உன்னிடம் கூட
சொல்ல துணிந்ததில்லை.
ஆனால்
அந்த சொல்லாத காதலிலும்
சுமமொன்று
இருக்கத்தான் செய்கிறது.
உன்னில்
விதைபோடாமலே
என்னில் ஆசைகள்
விருட்சமானது.
உன் நினைவுகளை
என்னில் போட்டு
புதைத்தேன்.
பிறகுதான் தெரிந்தது
விதைத்தேன் என்று.
கற்பனை கூடாரத்தில்
உன்னோடு
கனவு வாழ்க்கை
வாழ்ந்து வருகிறேன்.
உனக்கே தெரியாமல்
நமது குடும்பம்
நடந்து கொண்டுதானடி இருக்கிறது.
என் மனசுக்குள்ளேயே
நான் மௌனமாய்
மானசீகமாய்
அரங்கேற்றிய நாடகத்தில்
நான் தலைவன்
நீ தலைவி.
உன்னோடு கைசேர விரும்புவது
ஏதோ
கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு
கண்ணம் கிள்ளுவதற்காக அல்ல.
ஒற்றைகாலன்
ஒண்டி கட்டையாய்
ஊர்போய் சேரமுடியாது
என்பதால்
உன்னையும் துணைக்கழைக்கிறேன்.
புரட்சி வானத்தில் மட்டுமே
பறந்து பழகிய
எனது கவிதை பறவை
பூவானத்தில் சிறகடிக்க
உனது சிறகுகளை
கடன் கேட்கிறேன்.
உன் புன்னகை பூத்த முகத்தைதான்
புத்தகமென்றே நினைக்கிறேன்.
கண்ணே!
உன் கபடமற்ற
அர்த்தமற்ற சிரிப்புக்கு
ஆயிரமாயிரம் அர்த்தங்களை
கற்பித்து கொண்டிருக்கிறேன்.
அந்த புரியாத சிரிப்புக்கு
புதிதான அர்த்தம் தேடி
மெல்ல மெல்ல
தோற்றுபோய் கொண்டிருக்கிறேன்.
"நீ ரொம்பத்தான்
மாறிவிட்டாய்" - என்கிறாய்
என்னவளே!
இந்த மாற்றத்திற்கே
காரணமானவள்
நீயல்லவா?
கொள்கையை
பாதுகாப்பதிலும் சரி
இலட்சியத்தை
நிறைவேற்றுவதிலும் சரி
இன்னும்கூட
நான்
இரும்பு சங்கிலிதான்.
ஆனால்
நான்
இரும்புசங்கிலியென்பதுதான்
என்னுடைய
இப்பொழுதைய பலவீனமே.
ஏனென்றால்
உன் பார்வை காந்தமாயிற்றே.
உலகின்
ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும்
நீ
ஒரே பார்வையில்
பிரதிபலிப்பாயே!
அந்த பார்வை வழங்கிய
ஜென்ம சாபல்யத்தை
பத்திரமாய்
மிக பத்திரமாய் ....
உன் ஒற்றை பார்வையில்
ஓராயிரம் சொர்கங்களை
தரிசித்துவிட்டு போகிறேன்.
எனது சுவாசத்தின்
ஆதாரம்
மற்றும்
அர்த்தமாய்
இருப்பவள்
நீ.
மண்பானைக்குள்ளே
தேனை வைத்திருப்பதுபோல
என்னுள்
உன்னைபற்றிய
இனிய கவிதைகள் மட்டுமதான்
இருக்கிறது.
என்னவளே!
உன்னைவந்து அடைவதற்கே
உருவாக்கப்பட்ட
எனது பல கவிதைகளுக்கு
சிறகுகள்கூட
இன்னும் முளைக்கவில்லை
ஆனால்
எனது கனவுகளில் மட்டும்
காலமரம்
இப்போதே
பூ பூக்க தொடங்கிவிட்டது.
அந்த கனவூகள் யாவும்
உனது கடையில்தான்
வாங்கப்பட்டது.
எங்கே உனக்கு
நினைவிருக்கிறதா?
ஒரு நாள்
"உனக்கு
கவிதை எழுத தெரிமா?
என்று கேட்டாய் நீ.
அப்போது
இப்படித்தான்
என் மனசுக்குள்ளேயே
சொல்லி கொண்டேன்
"ஏ கவிதையே!
உன்னை படிக்க தெரியுமடி"
என்று.
ஜனகன மனஅதியைபோல்
உன் பெயரால்
ஒரு காதல் கீதம் இயற்றி
உன் பிரமிப்புகளை
என் கையில்
வாங்கிக்கொள்ள ஆசை.
ஆனால்
ஏனோ தெரியவில்லை
ஏழு ஸ்வரங்களுக்குள்
நீ
அடங்காமல் போய்விடுகிறாய்....
என் கவிதையினை
யார் வேண்டுமேயானாலும்
இதழ்களில் சூடலாம்.
ஆனால்
நீ மட்டுமே
இதயத்தில் சூடமுடியும்.
என் கவிதை
உன் இதழ்களில்ஏறி
உட்கார்ந்து கொண்டால் போதும்.
அது
அச்சில் ஏறி
அமர்ந்துவிட்டதாய்
ஆனந்தமடைவேன்.
அதன்பின்
அது
காற்றிலே தொலைந்துபோனாலும்
சிரஞ்சீவியே.
என் கவிதை தோட்டத்தில்
எத்தனையோ காவிய மலர்கள்.
நீ சூட மறுத்து விட்டால்
அவை வெறும்
காகித மலர்கள்.
உன் இதயகோயிலில் தொடுத்த
மலர்களின் எச்சங்களைதான்
இறைவனுக்கு
சமர்பிக்கிறேன்.
இந்த பாட்டு பறவை
பறக்க பழகி கொண்டதே
உனது ஆகாயத்தில்தானே
கள்ளத்தனமாய்.
தெரியுமா உனக்கு?
உனது
இதழ்கள் திறக்கப்படும்போதுதான்
எனது
எழுதுகோலும் திறக்கப்படுகிறது.
உனது
ஒவ்வொரு சிரிப்பும்
என் கவிதை குழந்தையின்
கருவறை.
என் கவலை சவங்களின்
கல்லறை.
யோசிக்கிறேன்.
உன்னிடம்
அந்த கவிதைகளை விற்றுவிட்டு
உன் காதலை
வாங்கி கொள்ள முடியுமா என்று.
உனக்கு
பரிசளிப்பதற்காக
ஒரு கையில்
விலைமதிப்பற்ற கவிதைகளையும்
உன்
இதயத்தை யாசிப்பதற்காக
இன்னொரு கையில்
பிச்சை பாத்திரத்தையும்
ஏந்தி நிற்கிறேன்.
யோசித்து பார்க்கிறேன்.
யோசித்து பார்ப்பதற்கு
உலகில்
உன்னைதவிர
வேறென்ன இருக்கிறதென்று.
உன் பெயரல்லாத கவிதையினை
எனது பேனா
எழுதுகிறபோது
ஏதோ
காகிதத்தை
களங்கபடுத்திவிட்டதாய்
உணர்கிறேன்.
நீயல்லாத பாடலினை
எனது உதடுகள்
உதிர்த்துவிட்டால்
காற்றை
களங்கப்படுத்திவிட்டதாய்
நினைக்கிறேன்.
ஏதோ
நான் பார்க்கும்
வெள்ளையேடுகள் எல்லாம்
உன் பெயா;
பதிக்கபடுவதற்காகவே
படைக்கப்பட்டதாய்
தோன்றுகிறதெனக்கு.
எதிலிருந்து
எழுத தொடங்கினாலும்
மீண்டும் மீண்டும்
காதல் என்கிற புள்ளியிலேயே
வந்து முடிந்து போகிறது.
என் கவிதைகளனைத்தும்.
உன் உதடுகளிலிருந்து
உதிர்க்கபட்டால்
கழுதையென்பதும் கவிதைதான்.
இதோ
இந்த சிரிப்பில்தான்
நான்
எனது இலட்சிய விலாசத்தை
தொலைத்துவிட்டேன்.
எனது இரவுகளும் சரி
பகலும் சரி
உன் நினைவுகளுக்குதான்
இரையாக்கப்படுகின்றன.
எனது நிழலைகூட
இருட்டில் போகும்போது
தொலைத்துவிட்டுத்தான்
போகிறேன்.
உனது நினைவுகளையோ
நீராட போகும்போதுகூட
எடுத்து கொண்டல்லவா செல்கிறேன்.
உன் நினைவுகள்
என் அருகில் படுத்துகொண்டு
ஆரிராவும் பாடுகின்றன.
உறங்கிய பின்னே
ஓங்கியும் அடிக்கின்றன.
உன்னை காணும்போதெல்லாம்
கண்களில்
வண்ணம் பூசிக்கொண்டதாய்
ஒரு புரியாத பூரிப்பு.
ஆனால்
அதே நேரத்தில்
இதயத்தில்
ஏதோ
இனம் தெரியாத சுமை
ஏறிக்கொள்கிறது.
உன்னை பிரிந்து கழிக்கின்றபோது
ஏதோ
இந்த பூமி
என்னை விட்டுவிட்டு
தான் மட்டும்
தனியாய் சுழல்வதாய்
உணர்கிறேன்.
கொதிக்கும் பகலிலும்
குளிர் காய்கிறேன்
உன் வரவால்.
பனி இரவிலும்
பற்றி கொண்டு எரிகிறேன்
உன் பிரிவால்.
உன்னை
காதலிக்க தொடங்கியபின்
நான்
எனது இமைகளைகூட
தொலைத்துவிட்டேன்.
உன்னோடு கழிக்கின்றபோது
ஆண்டுகள்கூட
அணுப்பொழுதாகிவிடும்
அதிசயம்
இன்னும் விளங்கவில்லை.
நீ
என்னோடு
இருந்த நேரங்களிலும்
பிரிந்து செல்லபோகும்
நேரத்தை நினைத்து
வருந்தி கொண்டுதான் இருந்தேன்.
தெரியுமா உனக்கு?
உன்னை காணாதபோதெல்லாம்
நான்
கல்லறைக்கு
போய்விட்டேனென்று.
நீ
மாட்டேனென்று
மறுத்தபோது
இன்றோடு
இந்த உலகம்
முடிந்துவிட்டதாகத்தானடி
தோன்றியதெனக்கு.
உன்னை பார்க்காவிடில்
பகலும்கூட
அமாவாசைதானடி எனக்கு.
என்னவளே!
எங்கெல்லாம்
ஒளிந்திருக்கிறாய் நீ தெரியுமா?
இடைவெளியெதையும்
மாற்றுமென்பதால்
இரண்டாயிரம் மைல்களுக்கு
அப்பால் நான்.
ஆனால்
செம்பல் நதியின் சினுங்கலும்
சிட்டுக்குருவியின் கீச்சலும்
உன்னைத்தானடி
நினைவுபடுத்துகிறது.
அழகானயெதுவும்
உன்னை
எளிதாக நினைவுபடுத்திவிட்டு
போகிறது.
அழுகுயென
நான்
ஆராதித்துகொண்டிருப்பது
உன் பௌதீக வடிவத்தையல்ல.
உன்னோடு நடத்தும்
பார்வை பரிமாற்றத்தின்போது
என்னுள்
ஏதோ
ரசாயண பரிமாற்றமும்
நடந்துவிட்டதாகவே உணர்கிறேன்.
உன்னை நினைவூபடுத்திகொள்ள
என்
இதய துடிப்பைதவிர
வேறு எதுவுமே இல்லையடி
என்னிடம்
இப்போது.
ஒரு பட்டாம்பூச்சி
படபடப்பதைப் போல
துடிதுடிக்கும்
உன் இமைகளையே
இமைகொட்டாமல்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உன் கபடமற்ற சிரிப்பு
இன்னும் எனக்கு
அப்படியே
நினைவிருக்கிறதடி.
எனது ஒவ்வொரு பார்வையாலும்
உன்னை
புகைப்படம் பிடித்திருக்கிறேன்.
நீயில்லையென்றாலும்
அந்த நினைவுகளையே
என்னோடு வாழ
துணைக்கழைத்து கொள்வேன்.
என் நெஞ்சவானத்தில்
நினைவு மேகமாய்
நீ
ஒவ்வொரு பொழுதும்
உலா வருவாய்
எனது
அந்த நினைவு நிலாவுக்கு மட்டும்
தேய்பிறை
என்றென்றும் இல்லையடி.
என்னவளே!
என்னை மறந்துவிடு
என்று சொன்னவளே!
தேதி காகிதங்களை
கிழிப்பதை போல
அந்தந்த தின நினைவுகளையும்
கிழித்தெறிய முடிந்திருந்தால்
நீ கேட்பது சாத்தியம்தான்.
விடியலின் அடையாளம்
வெண்மணியின்
விலகலில்தான் அடங்கியிருக்கிறது.
எனது விடியல் மட்டும்
உனது வருகையில்தான்
அடங்கியிருக்கிறது.
உன் காலடி ஓசையில்தான்
என் இதயதுடிப்பை
கேட்கிறேன்.
கண்ணே!
சிறியதாய்
உன்னுள்
ஒரு உலகம்
அடங்கியிருப்பதாய்
உணர்கிறேன்.
எனது பார்வைக்கு
நீ மட்டும்தான்
இந்த பிரபஞ்சம் முழுதும்
நிரம்பி வழிவதைபோல
தோன்றுகிறது.
எனக்கென்று வாய்த்த
சின்னதொரு உலகமடி
நீ.
நிலாவின் ஒளியெல்லாம்
உன்மீது மட்டுமே
வீசுவதாய்
தோன்றுகிறதெனக்கு
நீ
நடந்து வந்த
சுவடுகளில் நடப்பதையே
பேரானந்தமாய் உணர்கிறேன்.
நான் கொண்ட பெருமையே
நீ தானே கண்ணே!
என் வாழ்வின்
வறண்ட பூமியில்
நீ மட்டும்
நீர்ச்சுனையாய்
கிளம்பவில்லையென்றால்
எப்போதோ
நீர்த்து போயிருப்பேனடி.
மேகம் வந்து
மெதுவாய்
தொட்டுச் செல்வதுபோல்
உனது தாவணி
என் கண்ணத்தில் பட்டுச்செல்லும்
இந்த பருவமழை
அனுபவத்தில் நனைவதற்கே.
நான் இத்தனை தூரங்களை
கடந்துவந்தேன் போலும்.
இத்தனை வருடங்களை
தாண்டிவந்தேன் போலும்.
இந்த உலகத்தில்
எனது பங்கு
நீ மட்டுமே.
வாழ்ந்தால் உன்னோடு
இல்லையெனில் மண்ணோடு
இவை வெறும்
கவிதை கோடுகளல்ல
காரண கோடுகள்.
ஆனால்
நிரப்பி தர வேண்டியவள் மட்டும்
நீதான் கண்ணே!
எனது சிந்தனையை
சில்லறை மாற்றிவைத்து கொண்டு
உனக்காகவே
மெல்ல மெல்ல
செலவழித்து வருவேன்.
கண்ணே!
உனது இசைவுக்காய்தான்
இந்த எழுத்துக்களின்
எழுச்சி பேரணியை
நடத்திக் கொண்டு வருகிறேன்.
இல்லையெனமட்டும்
சொல்லிவிடாதே
ஏனெனில்
இப்போதே
நான்
ஏறத்தாழ இறந்துவிட்டேன்.
எந்த மலரையும்
பார்த்துக் கூட செல்லாதவன்
பறித்துக் கொள்ள ஆசைபட்டது
இந்த மலரைத்தான்.
ஏ சம்யுக்தா!
நான்
குதிரையில்லாத
பிருத்துவிராஜன்தான்
ஆனால்
வாழ்க்கை பயணத்தில்
உன்னில்
சுமையேறமாட்டேன்.
நீ
சொல்ல போகும்
இம்மென்கிற சம்மதத்தைதான்
ஒரு பூபாளமென்று
நினைத்துக் கொண்டு
ஒரு விடியலுக்காய்
காத்திருப்பேன்.
முடிவு சொல்.
எனக்கு முடிவு கட்டிவிடாதே.