புறநானூறு பாடல் 11 - சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
முடிவேந்தர் மூவருள் ஒருவனான இச்சேரமான் நல்லிசைச் செய்யுள் பாடும் சான்றோன் ஆவான். இவன் பாடிய பாட்டுக்கள் பலவும் பாலைத் திணைக்கு உரியனவாகும். நற்றிணை, குறுந்தொகை, அகம் முதலிய தொகை நூல்களில் காணப்படும் பாலைப் பாட்டுக்கள் பல இவனால் பாடப்பட்டவை. இப்பாட்டுக்கள் அனைத்தும் இலக்கிய வளமும், அறவுணர்வும், நல்லிசை மாண்பும் உடையன.
இச்சேரமானைப் பேய்மகள் இளவெயினி என்பவர் பாடியுள்ளார். பேய்மகள் கண்ணுக்குத் தெரியாத வடிவுடையளாதலால், கண்ணுக்குத் தெரியுமாறு பெண்வடிவு கொண்டு இளவெயினி என்ற பெயருடன் இதனைப் பாடினாளென்று கூறப்படுகிறது. போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து விரிய இவர் பாடிய சிறப்பால், இளவெயினி என்னும் இயற்பெயருடைய இவருக்கு பேய்மகளென்பது சிறப்புப் பெயராய் அமைந்திருக்க வேண்டும்.
குறமகள் இளவெயினி என்ற ஒருவர் சான்றோர் குழுவில் காணப்படுதலின், அவரிடமிருந்து வேறுபடுத்த இவரை பேய்மகள் என்று சிறப்பித்தனர். குறிஞ்சிநிலத்து நன்மகள் என்று கொள்ளாது, குறக்குடியில் பிறந்த மகளென்று பிழைபடக் கொண்டது போல தெரிகிறது.
இனி பாடலைப் பார்ப்போம்.
அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும் 5
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
புறம்பெற்ற வயவேந்தன் 10
மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே 15
எனவாங் கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.
பதவுரை:
அரிமயிர்த் திரள் முன் கை – மென்மையான முடிகளையுடைய திரட்சியான முன் கைகளில்
வாலிழை மடமங்கையர் – தூய ஆபரணங்களை அணிந்த விளையாடும் பருவத்து இளமகளிர்
வரி மணல் புனை பாவைக்கு – வண்டலிழைத்த சிறுமணலில் செய்த பாவைக்கு
குலவுச் சினைப் பூக்கொய்து – வளைந்த மரக்கிளைகளிலிருந்து கோட்டுப் பூக்களைப் பறித்து
தண் பொருநைப் புனல் பாயும் – பொருநை ஆற்றின் குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும்
விண்பொரு புகழ் விறல்வஞ்சி – வானளாவிய புகழினையும், வெற்றியினையும் உடைய கருவூரில்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே – பாடல் பெறுவதற்குத் தகுதியான வெற்றியையுடைய அரசன்
வெப்புடைய அரண் கடந்து – பகைவரின் கடும் பாதுகாப்புடைய காவற்கோட்டையை அழித்து
துப்புறுவர் புறம் பெற்றிசினே – வலிமையோடு எதிர்த்த பகைவரை வென்று, அவரிடமிருந்து திறையை கொடையாகப் பெற்றவனே
புறம் பெற்ற வயவேந்தன் மறம்பாடிய பாடினியும்மே - திறையை கொடையாகப் பெற்ற வலிமையான அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்
ஏர் உடைய விழுக்கழஞ்சின் – தோற்றப் பொலிவுடைய சிறந்த கழஞ்சுகளை உருக்கிச் செய்யப்பட்ட
சீருடைய இழை பெற்றிசினே – அருமையான பொன்னரிமாலை, முத்துமாலை போன்ற அணிகலன்களைப் பெற்றாள்!
இழைபெற்ற பாடினிக்கு - அணிகலன்களைப் பெற்ற பாடினியின்
குரல் புணர் சீர்க் கொளைவல் பாண் மகனும்மே – குரலுக்கு இணக்கமாகவும், சிறப்பாகவும் கைகளால் தாளமிட்டு இனிமையாகப் பாடவும் செய்த பாணனும்
ஒள்ளழல் புரிந்த தாமரை – பிரகாசமான உலை நெருப்பிலிட்டு உருவாக்கப்பட்ட பொற்றாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே ஆங்கு – வெள்ளி நாரினால் தொடுத்த பூக்களை அங்கே பெற்றான்.
பொருளுரை:
மென்மையான முடிகளையுடைய திரட்சியான முன் கைகளில் தூய ஆபரணங்களை அணிந்த விளையாடும் பருவத்து இளமகளிர் (மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்) வண்டலில் இழைத்த சிறுமணலில் செய்த பாவைக்கு வளைந்த மரக்கிளைகளிலிருந்து கோட்டுப் பூக்களைப் பறித்து பொருநை ஆற்றின் குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும் வானளாவிய புகழினையும், வெற்றியினையும் உடைய கருவூரில் பாடல் பெறுவதற்குத் தகுதியான வெற்றியையுடைய அரசனே!
பகைவரின் கடும் பாதுகாப்புடைய காவற் கோட்டையை அழித்து, வலிமையோடு எதிர்த்த பகைவரை வென்று, அவரிடமிருந்து திறையை கொடையாகப் பெற்றவனே!
திறையை கொடையாகப் பெற்ற வலிமையான அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும், தோற்றப் பொலிவுடைய சிறந்த கழஞ்சுகளை உருக்கி செய்யப்பட்ட அருமையான பொன்னரிமாலை, முத்துமாலை போன்ற அணிகலன்களைப் பெற்றாள்!
அணிகலன்களைப் பெற்ற பாடினியின் குரலுக்கு இணக்கமாகவும், சிறப்பாகவும் கைகளால் தாளமிட்டு இனிமையாகப் பாடவும் செய்த பாணனும் பிரகாசமான உலை நெருப்பிலிட்டு உருவாக்கப்பட்ட வெள்ளி நாரினால் தொடுத்த பொற்றாமரைப் பூக்களைப் பெற்றான். யான் அது பெற்றிலேன்! என்று அரண்மனை வாயிலில் நின்று தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது போல இப்பாடல் அமைந்திருக்கிறது.
அருஞ்சொற்கள்:
மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்
வெப்பு: Severity – கொடுமை
கழஞ்சு - பன்னிரண்டு பணவெடை
கொளை: Melody – இசை, பாட்டு, Beating time with hands or cymbals, கைகளால் தாளமிட்டு ஒற்றுக் கை
ஒள் – 1. Bright, பிரகாசமான 2. good, excellent , நல்ல; 3. beautiful, அழகுள்ள; 4.knowing , அறிவுள்ள
அழல் - fire, நெருப்பு; 2. heat, உஷ்ணம், தணல் கொழுந்து, சுடர், அனல் பொறி, அடுப்புக் கனல், உலை நெருப்பு
இப்பாடல் பாடாண்திணை ஆகும்.
துறை பரிசில்கடாநிலை ஆகும். பரிசில் கடாநிலை என்பது பரிசில் தரும்படி வேண்டிக்கொண்டு வாயிலில் நிற்பதைக் குறிக்கும். புறநானூற்றைத் தொகுத்துத் துறை குறிப்பிட்டவர் 17 பாடல்கள் இத்துறையைச் சேர்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடாநிலை என்பது கடைநிலை என்பதன் திரிபு. கடை என்பது அரண்மனை வாயில். கடாவும் = வேண்டும் நிலை அன்று. பரிசில் வேண்டுவோர் வாயிலில் நின்றுகொண்டு தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது கடைநிலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பரிசில் நிலை என்றும் குறிப்பிடுகிறது.
பாடினி இழைபெற்றாள், பாணன் பூப்பெற்றான், யான் அது பெறுகின்றிலேன் என்பது பரிசில் கடாநிலை ஆயிற்று. இங்கு நின்னோடு எதிர் வந்து பட்டோரெல்லாம் பரிசில் பெற்றார்கள்; ஆனால் நான் பேய்மகளானதால் உன் கண் முன் தோன்றிப் பரிசில் பெற்றிலேன் என்பதாலும் பரிசில் கடாநிலை ஆயிற்று.