இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red)

கடவுளைக் கூவி விற்கிறான்
கூறுகெட்ட மனிதன்,
எடையிட்டு ஏலமிடுகிறான்
ஏட்டறிவைத் தொலைத்தவன்,
கையால் செய்த ஒன்றை
கண்ணிட்டு கடவுள் என்கிறான்..!!

உள்ளங்கையில் உருவான ஒன்று
உன்னதம் பெறுமெனில்
இவ்வுலகம் படைக்க
இறைவன் தேவையில்லை..!!

படைத்தல் தொழிலை இறைவனுடன்
பகிர்ந்து கொண்டான் மனிதன்..!!
ஆண்டவனை இவன் படைத்து
ஆனந்த ஆட்டமாடி
வீதியில் கூச்சல் போட்டு
விற்றுத் தீர்க்கிறான்
உலகத்தின் முதலாளியை..!!

தூணிலும் துரும்பிலும்
இருக்கத் தெரிந்த இறைவன்,
சிரம் மட்டும் தந்துவிட்டு
சிந்தனை தர மறந்துவிட்டான்..!!

எல்லாம் சொன்ன இறைவன்
நம்பிக்கை வேறு,
மூட நம்பிக்கை வேறு
என்பதை சொல்ல மறுத்துவிட்டான்..!!

கல்லை மட்டும் பார்த்தால்
கடவுள் தெரியாதது உண்மையே,
அரைகுறை ஆன்மிகம் பார்ப்பவனே
அதனுள் அறிவியல் பார்..!!

இயற்கையைப் படைத்த
இறைவனை வைத்தே
இயற்கையை அழிக்கும்
இழிவு செயல்கள் இங்கே தான்..!!

கடவுளை உன் நிலையெண்ணி
கள்ளமின்றி சிரிப்பேன்..!!
மனிதனை உருவாக்கியதாய்
மதம் கொள்ளாதே,
உன்னை அவன் உருவாக்கி
கழுத்தில் கயிறிட்டு
கடலில் இறக்கி
கதை முடிக்கப் பார்க்கிறான்..!!

இனியாவது இறைவனே
திருந்தி விடு,
இவர்களை படைப்பதில் கொஞ்சம்
திருத்தி விடு...!!!

எழுதியவர் : மனோ ரெட் (9-Sep-13, 9:40 am)
பார்வை : 113

மேலே