புறநானூறு பாடல் 41 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறிமுகம் காண்க)

இப்பாட்டில் ஆசிரியர் கோவூர் கிழார், “எமனும் ஓர் உயிரைக் கொண்டு செல்ல தகுந்த நேரம் காலம் வரும் வரையில் பார்த்துக் காத்திருப்பான்! அவ்வாறு காலம் பார்க்காமல் வேலைத் தாங்கிய பகைவர்களின் படையை அழிக்க, வேண்டிய இடத்தில் கொன்று வெற்றியை அடையக்கூடிய போர் செய்யும் வேந்தே!

உன்னைச் சினப்பித்தோர் நாட்டு மக்கள் எட்டுத் திசையும் எரி கொள்ளி எரிந்து விழவும், பெரிய மரங்களின் இலைகளில்லாத நீண்ட கிளைகள் காய்ந்து பட்டுப் போகவும், வெப்பக் கதிர்களை உடைய கதிரவன் கடுமையாக வெப்பத்தைப் பரப்பவும், மற்றும் அஞ்சத்தகுந்த காலநிலைகளை யும், பிற இன்னல்களின் வரவையும் அறியும் தன்மையுடைய பறவையினங்கள் கூச்சலிட்டுக் குரலிசைக்கவும் நனவில் காண்கின்றனர்.

பற்கள் நிலத்தில் உதிர்ந்து விழுவது போலவும், எண்ணெயைத் தலையில் தேய்த்து குளிப்பது போலவும், பெண்பன்றி ஆண்பன்றி மேல் தழுவுவது போலவும், ஆடையைக் களைவது போலவும், வெண்மையான வலிய படைக்கலங்கள் தாமிருந்த கட்டிலினின்று கவிழ்ந்து விழுவது போலவும் கனவினிலும் காண்பதற்கு அரிதான தீமையான செயல்களை அவர்கள் காண்கின்றனர். நனவிலும் அத்தகைய கடுமையான போர் செய்யும் வலிமை யுடையோய்!

காற்றொடு தீ கலந்தாற்போல் படையெடுக்கும் போரில் சிறந்த வளவனே! நீ இத்தன்மை உடையவன் ஆதலால், ’உன்னைச் சினப்பித்தோர் நாட்டு மக்கள், நீ படையெடுத்து வரும் உனது வலிமையை எண்ணி கலங்கி காவல் இல்லாது இருப்பவர்களாய் தம் குழந்தைகளின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு தம் மனைவியர்க்குத் தமது வருத்தம் தெரியாதவாறு மறைக்கும் துன்பத்தை யுடைய ஆடவர்களாய் மிக கலக்கமுற்று இருக்கி றார்கள்” என்று கொற்றவள்ளை பாடிக் கிள்ளி வளவனைச் சிறப்பிக்கின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

காலனுங் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே
திசையிரு நான்கு முற்க முற்கவும்
பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும் 5

வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும் 10

கனவி னரியன காணா நனவிற்
செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி
மையல் கொண்ட வேமமி லிருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்
கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு 15

பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ
டெரிநிகழ்ந் தன்ன செலவிற்
செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே.

பதவுரை:

காலனும் காலம் பார்க்கும் – எமனும் ஓர் உயிரைக் கொண்டு செல்ல தகுந்த நேரம் காலம் வரும் வரையில் பார்த்துக் காத்திருப்பான்!

பாராது – அவ்வாறு காலம் பார்க்காமல்

வேலீண்டு தானை விழுமியோர் தொலைய – வேலைத் தாங்கிய பகைவர்களின் படையை அழிக்க

வேண்டிடத் தடூஉம் வெல் போர் வேந்தே – வேண்டிய இடத்தில் கொன்று வெற்றியை அடையக்கூடிய போர் செய்யும் வேந்தே!

திசை இரு நான்கும் உற்கம் உற்கவும் – எட்டுத் திசையும் எரி கொள்ளி எரிந்து விழவும்

(உற்கம் – எரி கக்கும் விண் மீன்)

பெருமரத்து, இலை இல் நெடுங்கோடு வற்றல் பற்றவும் – பெரிய மரங்களின் இலைகளில்லாத நீண்ட கிளைகள் காய்ந்து பட்டுப் போகவும்

வெங்கதிர்க் கனலி துற்றவும் – வெப்பக் கதிர்களை உடைய கதிரவன் கடுமையாக வெப்பத்தைப் பரப்பவும்

பிறவும்,அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும் – மற்றும், அஞ்சத்தகுந்த காலநிலைகலையும், பிற இன்னல்களின் வரவையும் அறியும் தன்மை யுடைய பறவையினங்கள் கூச்சலிட்டுக் குரலிசைக்கவும்

எயிறு நிலத்து வீழவும் – பற்கள் நிலத்தில் உதிர்ந்து விழுவது போலவும்

எண்ணெய் ஆடவும் – எண்ணெயைத் தலையில் தேய்த்து குளிப்பது போலவும்

களிறு மேல் கொள்ளவும் – பெண்பன்றி ஆண்பன்றி மேல் தழுவுவது போலவும்

காழகம் நீப்பவும் – ஆடையைக் களைவது போலவும்

வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும் - வெண்மையான வலிய படைக்கலங்கள் தாமிருந்த கட்டிலினின்று கவிழ்ந்து விழுவது போலவும்

கனவிம் அரியன காணா – கனவினில் காண்பதற்கு அரிதான தீமையான செயல்களைக் கண்டு

நனவில் செருச் செய் முன்ப – நனவில் அத்தகைய கடுமையான போர் செய்யும் வலிமையுடையோய்!

நின் வரு திறன் நோக்கி - நீ படையெடுத்து வரும் உனது வலிமையை எண்ணி

மையல் கொண்ட ஏமமில் இருக்கையர் - கலங்கி காவல் இல்லாது இருப்பவர்களாய்

புதல்வர் பூங்கண் முத்தி – தம் குழந்தைகளின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு

மனையோட்கு எவ்வம் கரக்கும் – தம் மனைவி யர்க்குத் தமது வருத்தம் தெரியாதவாறு மறைக்கும்

பைதல் மாக்களொடு – துன்பத்தையுடைய ஆடவரோடு

பெருங் கலக் குற்றன்று – மிக கலக்கமுற்றது

காற்றோடு எரி நிகழ்ந்தன்ன செலவின் - காற்றொடு தீ கலந்தாற்போல் படையெடுக்கும்

செரு மிகு வளவ – போரில் சிறந்த வளவனே!

நிற் சினைஇயோர் நாடு – உன்னைச் சினப்பித் தோருடைய நாட்டு மக்கள்

திணை: வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல் வஞ்சித் திணை ஆகும்.

துறை: அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல் கொற்ற வள்ளை துறையாகும். காற்றோ டெரிநிகழ்ந் தன்ன செலவிற் செருமிகு வளவ என்று மன்னவன் புகழும், நிற் சினைஇயோர் நாடு பைதன் மாக்களொடு பெருங்கலக் குற்றன்றென ஒன்னார் நாடு அழிவதற்கு இரங்கியதும் கூறுதலால் இப்பாடல் கொற்றவள்ளை துறை ஆயிற்று.

விளக்கம்:

உயிர்கள் அவை இருந்த உடம்பிலிருந்து நீங்குதற்குரிய காலம் பார்த்து நீக்கும் இயல்பு பற்றிக் கூற்றுவனைக் காலன் என்பர். அதனால் ’காலனும் காலம் பார்க்கும்’ என்றார். வேலீண்டு படையில் வீரம் மிக்க செய்கைகளால் உயர்ந்த பெரியோரை ‘விழுமியோர்’ என்றார்.

தாம் இருக்கும் இருக்கை போதிய காவலின்றி இருப்பதால், அங்கிருப்போர் அதனை உணர்ந்து வரும் தீமை குறித்து அறிவு மயங்குவது தோன்ற, ”மையல் கொண்ட ஏமமில் இருக்கையர்” என்றார்.

தன்னை இன்றியமையாது கருதும் மனைவி தனக்குள்ள வருத்தம் அறிந்தால் பெரும் துன்புற்று தன் நெஞ்சின் வலிமையைச் சிதைப்பாள் என்ற அச்சத்தால் தம் மனைவியர்க்குத் தமது வருத்தம் தெரியாதவாறு மறைக்க வேண்டியதாயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-13, 11:02 am)
பார்வை : 115

மேலே