அன்புள்ள அம்மாவுக்கு

அன்புள்ள அம்மாவுக்கு,
நான் இங்க நல்லா இருக்கேன். நீங்களும் நல்லா இருப்பீங்கனு நம்பறேன்.உடம்ப நல்லா பாத்துக்றீங்களா?.அப்பாவுக்கு முட்டி வலி எப்படி இருக்கு.அர்ச்சனா ஒழுங்கா காலேஜ் போய்ட்டு வராளா?. நஸ்ரியாவுக்கு கல்யாணம்னு கேள்வி பட்டேன்.வருத்தமாதான் இருக்கு. என்ன பண்றது?. போன தடவ நான் வந்தப்போ நட்ட ரோஜா செடி எல்லாம் எப்படி இருக்கு.போய் சொல்லுங்க அதுங்க கிட்ட இன்னும் ஒரு மாசத்துல நான் அங்க இருப்பேன்னு.
கடிதம் எழுதறதே அரிதாகிவிட்ட இந்த காலத்தில் இப்படி ஒரு கடிதம்.ஆனா அம்மா, நினைவுகளுடனே வாழற எங்களுக்கு தான் தெரியும்,கடிதங்களோட அருமை.வீட்ட பத்தி ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த கடிதங்கள் தான் எங்க‌ளுக்கு தலையணை.
ஞாபகம் இருக்கா மா உங்களுக்கு, என்ன‌ நல்ல டாக்டர் ஆக்கணும்னு நீங்க ஆசைப்பட்டது. நானும் தான் ஆசைப்பட்டேன்.ஆனா அப்பாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போய்டுச்சு. நான் வேலைக்கு போயாக வேண்டிய நிலைமை.எனக்கு உடனே கிடைச்சது இந்த இராணுவ வேலை தான். ஒரே பையனை இராணுவத்துக்கு அனுப்பறதுக்கு நீங்க எவ்வளோ யோசிச்சிங்க..
நானும் விருப்பத்துடன் இங்க வரல மா.வேற வழியில்லாம தான் வந்தேன்.ஆனா அப்பா சொன்னது ஞாபகம் இருக்கா உங்களுக்கு.'எந்த வேலை செய்தாலும் முழு மனசோட செய்யனும்னு'. ஒரு கட்டத்துல‌ நானும் என் வேலையை விரும்ப ஆரம்பிச்சிட்டேன்.நான் நெனச்சதவிட இங்க சந்தோசமாவே இருக்கேன்.வேற வேற மொழிகள் பேசற நண்பர்கள்,செம சாப்பாடு,தீவிர பயிற்சி,எல்லாத்துக்கும் மேல நாட்டுக்காக சேவை செய்றோம்ன்ற மன திருப்தி. வேற என்ன வேணும் ஒரு வேலையில?..
எல்லா வேலையிலும் தான் கஷ்டம் இருக்கு.எங்க வேலையில இன்னும் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்க எல்லாரையும் விட்டு பிரிஞ்சு இருக்க முதல்ல ரொம்ப கஷ்டப்பட்டேன்.இங்க எப்போ என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.திடீர் திடீர்னு சண்டை நடக்கும்.சண்டை நடக்கும் போது எதிர்ல இருக்கறவன தோக்கடிக்கணும் மட்டும் தான் நாங்க நினைப்போம். ஆனா சண்ட முடிஞ்ச உடனே தான் தெரியும்,எங்க பக்கம் எவ்ளோ தொலைச்சிருக்கோம்னு.எத்தனையோ பேர் செத்து போயிருக்காங்க.அப்போ எல்லாம் நம்ம நாட்டுக்காக தான் எல்லாம்னு சொல்லி தான் நாங்க எங்க மனச தேத்திக்குவோம்.
இதுக்காக எல்லாம் என் வேலையை வெறுத்ததில்லைமா. ஏன் , நான் யோசிச்சு கூட பார்த்ததில்லை நான் என் வேலையை வெறுப்பேன்னு.போன தடவ நடந்த சண்டையில என் நண்பனோட கால் போய்டுச்சு.அதனால அவன் வேலை போயி அடுத்து என்ன செய்றதுனு மனசொடிஞ்சு போயிருந்தான் அவன்.அவனுக்கு உதவியா நானும் அவன் கூட,அவன் வீட்டுக்கு போயிருந்தேன்.அப்போ தான் இதெல்லாம் நடந்த‌து.
அவன் ஊருக்கு இரயிலில் தான் போயிருந்தோம். திடீர்னு கிளம்பனதால முன்பதிவு செய்ய முடியல. என்னை விடுங்க நான் நின்னுட்டே போய்டுவேன்.என் நண்பன் எப்படி மா நின்னுட்டு வருவான்?.இரயிலில் இருந்து இறங்கும் போதும் இதே நிலைமை தான்.அவங்க வீட்லயும் அதேதான்.மனிதநேயம்ன்றதே சுத்தமா காணமா போய்டுச்சு.
அம்மா கோடிகள்ல‌ சம்பளம் வாங்கிட்டு நாட்டுக்காக விளையாடுற விளையாட்டு வீரர்களையும், நடிகர்களையும் தெய்வமா கும்பிடற நீங்க,எங்களை மனுசங்களாவாவது மதிக்கலாம்ல‌. எங்களுக்கு தேவையெல்லாம் கொஞ்சம் மரியாதை தான்.அதுவே கெடைக்காத போது யாருக்காக நாம இப்படி உயிரைக் குடுத்து வேலை செய்றோம்?ன்ற கேள்வியைத் தடுக்க முடியல.
சரி மா.இங்க ஒரு அவசர அழைப்பு.எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க‌.அடுத்த மாசம் பாக்கலாம்.இங்க எல்லாருக்காகவும் கடவுள வேண்டிக்கோங்க….

எழுதியவர் : saranya nandagopal (21-Feb-14, 10:15 am)
Tanglish : anbulla ammavuku
பார்வை : 313

மேலே