தேவதைகள் தூங்குகிறார்கள் - பகுதி 4 - கோபி சேகுவேரா

முழுவதும் படிக்க... மனம் அதிகரித்த லப்டப் புடன் ஆவலாய்... படிக்க தொடங்கினேன்... "விஜி, எங்க போன... Miss u" என்றிருந்தது... ஒரு நாவலின் காதல் அத்தியாயத்தை ஒரே வரிகளில் படித்ததை போலிருந்தது... அவ்வளவு வசிகரம்... அறையெங்கும் நிரம்பி வழியும் அவளது நினைவுகளில்... இப்போது இந்த காதல் அத்தியாயமும் சேர்ந்தது... சொல்லவா வேண்டும்... இன்னும் பத்து பதினைந்து காதல் புதிதாக முளைத்தது... "I miss u too" என நானும் பதில் அனுப்ப... என்னை யோசிக்கவே நேரம் கொடுக்காமல்... இடைவிடாமல் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே இருந்தாள்... திக்குமுக்காடி போனது என் அலைபேசி... கொஞ்சம் நானும் கூட... அவளது வார்த்தைகள் செய்திருக்கும் வர்ணஜாலங்களை ரசித்துக்கொண்டே பதில் அனுப்பினேன்.. மாய உலகில் மயான மௌனத்தில்... தேவதையின் அரவணைப்பில் கிடப்பதை போல தோன்றியது..

நொடிக்கொரு குறுஞ்செய்தி அனுப்பியவள்... இரண்டு நிமிடங்களாக பதில் அனுப்பவில்லை... ஒருவேளை தேவதை தூங்குகிறாளோ என்று நினைத்து... நாளை சந்திப்போமென குறுஞ்செய்தி அனுப்பினேன்... அவள் நன்றாக தூங்குகிறாளென தெரிந்தது... ம்ம்ம்ம்.... தூங்கட்டும்... தூங்கட்டும்... தேவதை தூங்கும்போது தானே என்னை களவாடினாள்... ம்ம்ம்ம்... இப்போதும்கூட என் உறக்கத்தை களவாடி... அவள் தூங்குகிறாள்... ரயில் கவிதைகளாய்... அவளது நினைவு ஒன்றன் பின் ஒன்றாக என் நெஞ்சில் நிழலாடியது... எத்தனை பொழிவு.. எத்தனை நேசம்... அவளது விசால பார்வையில்... போதும் போதும்... நான் நினைப்பது அவளுக்கு கேட்டுவிட்டால்... அவ்வளவு தான் தூக்கம் களைந்துவிடும்... என்று நானே எனக்குள் சொல்லிக்கொண்டேன்...

எதிர் வீடோ, பக்கத்து வீடோ... சரியாக தெரியவில்லை.. இசைஞானியின் குரலில் 'என்னை தாலாட்ட வருவாளோ' பாடல் ஒலிப்பது மட்டும் நன்றாக கேட்டது... உயிரின் அடி ஆழத்தில் இசை ஊற்றி... அதில் காதலை மிதக்க விட்டு... விசாந்தினியை இன்னும் நினைக்க வைத்து விட்டார் இசைஞானி... அறையை விட்டு வெளியே வந்தேன்... பாடல் இன்னும் நன்றாக கேட்டது... 'காலமெல்லாம் அவள் காதலில்' என்ற வரி மட்டும் என்னை ஏதோ பண்ணியது... ராஜா சார் முடியல... விசாந்தினி... மட்டுமே எங்கும் நிறைந்து கிடந்தாள்... இவ்வுலகம் காதலால் நிரம்பி வழிவதை போலிருந்தது...பாடல் முடிந்ததும் அலைபேசியில் நேரம் பார்த்தேன்... மணி 12.10.. தூக்கம் வரவில்லை அறைக்கு சென்றேன்...

தூக்கத்தை தூக்கி சென்றாளென கோபம் கொள்வதா?? இல்லை காதலை தந்து போனாளென சந்தோஷப்படுவதா?? எதுவும் தெரியாமல்... மனதோடு நிறைந்து கிடந்தவளை உடலோடு அணைத்துக்கொண்டேன்... கனவு தேசத்தின் இல்லாத கதவுகளை திறந்து .. தீராக்காதலோடு ஓடி வந்து அணைத்து கொண்டதை போல் உணர்ந்தேன்... அப்படியே எப்போவென தெரியாமல் உறக்கிப்போனேன்..

காலை 6.30 மணி...

உறங்கிக்கொண்டிருந்த அலைபேசி விழித்து வீறிட்டது.. அதன் சத்தத்தில் நானும் விழித்தேன்... அழைப்பில் யாரென பார்த்தால்..விசாந்தினி...

'Gud mrg விஜி... எனக்கே தெரியாம தூங்கிடேன்.. 9 மணிக்கு காந்திபுரம் வந்துடு... அதே கணபதி சில்க்ஸ் கிட்ட... உன்ன பாக்கனும் போல இருக்கு' என்று சொல்லி என் பதிலை கூட கேட்காமல் அப்பா வந்துடாரென அழைப்பை துண்டித்தாள்...

அரைகுறை தூக்கத்தில் ஏதுமறியாமல் எழுந்ததும்.. மீண்டுமொரு சிற்றுறக்கத்தில் சரிந்தேன்... 7.15 மணிக்கு எழுந்து கீழே சென்றேன்... தம்பி செழியன் பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்... +2 படிக்கிறான்.. இன்று உயிரியல் தேர்வென அம்மாவிடம் சொல்லிக்கொண்டு... என்னிடம் ஒரு புன்னகை வீசிவிட்டு.. அவனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றான்...

இன்று பால்கார பையன் வரவில்லை என அம்மா புலம்பிக்கொண்டிருக்க... உயிரெல்லாம் விசாந்தினியாகவே பூத்திருந்தாள்... எண்ணங்களெல்லாம் ஏதேதோ செய்ய... என்ன செய்வதென தெரியாமல் நிற்கையில்... அவள் சொன்னது ஞாபக நிழலில் வந்தது.. உடனே குளியலறை சென்றேன்...

குளித்துவிட்டு உடை மாற்றி வருகையில்... 8மணி... சீக்கிரமே செல்ல வேண்டும்... என் தேவதை அங்கே காத்துக்கொண்டிருப்பாள்.... அம்மாவின் காலை உணவில் இருந்து எப்படியோ தப்பித்து வந்துவிட்டேன்...

காற்றிலாடும் இலைகளாய் மனம் இலகுவானது... ஆவல் மட்டும் எகிறிக் கொண்டே இருந்தது... மூட்டை மூட்டையாய் கொட்டிக்கிடக்கும் அவளது நினைவுகளில்... கொஞ்சம் மட்டும்
என் பயண வழிச்செலவிற்கு எடுத்துக்கொண்டேன்...

இப்போது மணி 8.45... காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நடக்கும்போதே.. என் பார்வையை அகலப்படுத்தி தேடினேன்...
சிறகில்லா ஜப்பான் மூக்கு தேவதையை.. நேற்றை விட இன்று கொஞ்சம் கூடுதலாகவே கூட்டம் நிறைத்திருந்தது... அதில் விசாந்தினியை எப்படி தேடுவதென தெரியவில்லை... முன்னும் பின்னும் அலைந்து திரிந்து தேடியும் காணவில்லை...

இங்கு தான் எங்கோ இருக்கிறாள் என மனம் படபடத்துக்கொண்டது... கண்டுபடித்துவிட்டேன்.. ஆவலுடன் அவளும் என்னை தேடுகிறாள்.. அந்த ஜப்பான் மூக்கில் ஏதோ பதட்டம் தெரிகிறது... சட்டென்று அவளது கையை படித்தேன்... விசாந்தினி.. இது நேற்று எடுத்த புடவை தான... எவ்வளவு அழகா இருக்கு... 'ஓ அப்ப நா அழகாயில்லையா?' என அவள் வினாவ.... 'உன்னால் தான் இந்த புடவை அழகாயிருக்கிறது என சொல்லியபடி... அவள் கையில் மல்லிகை பூவை திணித்தேன்....
தேவதை புடவை கட்டி மல்லிகை பூ வைத்தால்... இப்படி தான் இருக்குமோ... என்னவோ... அத்தனை அழகு....

இன்னும் எந்த கவிஞனும் எழுதாத கவிதை... உரைநடை பகுதியில் தப்பிதவறி வந்த ஒரே கவிதை... விசாந்தினி... அன்று மெல்லிய வெளிச்சத்தில் பார்த்ததை விட.... இன்று நூறு டசன் அழகு அதிகம்...

அவளை கண்டு பிரமித்து நின்ற என்னை... அருகிலுள்ள பனிக்கூழ் கடைக்கு அழைத்துச்சென்றாள்... ஏதோ ஓர் சுவைமணத்தில் பனிக்கூழ் வரவழைத்தாள்... இருவரின் பார்வைகளும் நேருக்கு நேராய் உரசின... காதல் தீப்பிடித்தது... பார்வைகளின் பரிமாற்றம் நிகழ்த்துகொண்டே இருக்க... "தாக்குதே கண் தாக்குதே... கண் பூக்குதே... பூ பூத்ததே" என்று கடையின் தொலைக்காட்சியில் பாடல் பாட... இருவரும் மெல்லிசையாய் புன்னகை செய்ய... கண்களில் காதல் வழிந்தபடி... விசாந்தினி என் கையை பற்றிக்கொண்டாள்...

கசிந்தொழுகும் கவிதைகளாய்... காதலின் மறு தேசத்தில் இருவரும் பயணம் செய்துகொண்டிருந்தோம்... அவளது பார்வை கீறல்கள் என் உடலெங்கும் கீற... காதல் வழிந்தபடி துடித்துக்கொண்டிருந்தேன்.. நிலையில்லாத ஏதோ ஓர் புள்ளியில் இருவரும் இணைந்து கிடந்தோம்... அதில் எத்தனை ஹைக்கூக்கள் உயிர்பெற்றதோ.... எண்ணவே முடியாத விண்மீன்களை போல... இதழ்லோர புன்னகையை நொடிக்கொரு முறை கொட்டினாள்... யாருமற்ற தேசத்தில் நானும் விசாந்தினி மட்டும் உயிர் வாழ்வதாக என் மனம் நினைந்தது... அப்படியொரு நம்பகத்தன்மை கொடுத்துவிட்டாள் என் தேவதை...

இரவில் கவிதை எழுதும் கவிஞனுக்கு மின்வெட்டு தரும் இடையூரை போல... திடீரென ஒரு நடுத்தர வயதுடையவர் எங்களின் அருகில் வந்து... விசாந்தினியை பார்த்து... 'நீங்க சுந்தர் சாரோட பொண்ணு தான?' என்று கேட்டார். முதன்முறையாக விசாந்தினி முகத்தில் ஒரு பயம் கலந்த குழப்பத்தை காண முடிந்தது... 'என்ன விசாந்தினி இப்ப ரொம்ப மாறிட்ட போல... நிஜமாகவே என்னை உனக்கு ஞாபகம் இல்லையா??' என்று அந்த நபர் மீண்டும் கேட்டார்... நாற்காலியை உதறிவிட்டு சட்டென்று எழுத்து... தயக்கத்துடன் பேச தொடங்கினாள்... அவளது குரல் பயத்தில் உடைந்தது... 'நீ எப்படி இங்க.....

-(தொடரும் )

==================================
தேவதைகள் தூங்குகிறார்கள் தொடர் கதையின் அடுத்தடுத்த பாகங்களை எழுத விரும்புவோர் கவிஜி அவர்களை விடுகை மூலம் தொடர்புக் கொள்ளுங்கள்

==================================

எழுதியவர் : கோபி சேகுவேரா (30-Oct-15, 8:34 pm)
பார்வை : 337

மேலே