காட்சிப் பிழைகள் 24

காட்சிப் பிழைகள் 24
1).ஒருதலை ராகம்

வார்த்தைகள் எல்லாம் விற்றுத்
தீர்த்து விட்டு வருகிறாய்.
உன் கூடையில் மிச்சமாய் எனக்காக
சில மௌனங்கள.

நீண்ட வாழ்க்கைப் பயணம்
ஒதுக்கப்பட்டஆசனத்தோடு
காத்திருப்பின் தரிப்பில் எனது பேரூந்து.
கால்நடையாய் போய்விடுகிறது காதல்.

அழகின் மழைக்காலத்தில்
வெளியில் வருகிறது பருவத்தவளை.
விரதமிருக்கின்றன விழி அரவங்கள்.

நுழைவு கிடைப்பதே
குதிரைக் கொம்பாக இருக்கும்
ஆரம்ப பள்ளிக்கூடம்.
அதற்குள் உன் இதயத்தின் வாசலில்
புத்தகப் பையுடன் நிற்கிறது காதல்.

நீ நினைக்கக் கூடாது என்பதைக்கூட
நினைத்துக் கொண்டுதானிருக்கிறாய்
நினைக்க வேண்டிய என்னை
நினைக்காமலேயே..

என்னிடம் இருக்கும் வசதிகள் திரட்டி
செய்து கொடுக்க முடியவில்லை
எளிமையாய் உனக்கோர் குடிசை.
உன்னிடமிருக்கும் ஏழ்மையை மிரட்டி
வாங்கி விடவும் முடியவில்லை மனசை.

இருவர் துயில்வதற்கென்று வாங்கிய கட்டிலில்
எனது போர்வைக்குள் என்னை
அணைத்துக்கொண்டுத் துயில்கிறது வெறுமை.
நீ ஏற்படுத்திக் கொடுத்த வறுமை.

நாயோடு நடைபயிற்சி போகிறாய்.
காதலுடன் நடைபிணமாய் கிடக்கிறேன்
இரக்கப்பட்டுக் குரைத்து விடபோகிறதென்று
பொத்தி வைக்கிறாய் நாய் வாய்.

உன் வாசலில் இரண்டு யாசகர்கள்.
இல்லை என்று சொல்லாமல்
கொடுத்தனுப்புகிறாய் நீ.
திருவோடு நீட்டியவனுக்கு சாதமும்
இதயம் காட்டியவனுக்கு பட்டினியும்

நீ எனக்குக் கடிதங்கள் எழுதுவதில்லை
தந்துவிட்டுத்தான் போகிறான் தபால்காரன்.
விரக்தி கொஞ்சம் நீள்வதற்கு
மேலும் சில ஏமாற்றம்

அழகாய் இருக்கிறது குளம்.
பூத்துவிடக் காத்திருக்கு ஆம்பல்
நீ விடியலில் வருகிற நிலா.

நானனுப்பிய காதல் மடலில்
அழகழகாய் செய்து விடுகிறாய் காகிதக் கப்பல்
அது மூழ்கி விடுவதென்னவோ
தினம்தினம் என் கண்ணீர்க் கடலில்.

நீ விழவேண்டும் என்பதற்காகத்தான்
என் சமுத்திரத்தில்
விரித்துவைத்தேன் உன்னை மணக்க வலை.
நீளுகின்ற காத்திருப்புக்களால்
வலைக்கு இப்போது மனக்கவலை.

நீ என் காதலி என்று நான் சொல்வதில்
உனக்கு விருப்பம் இல்லை என்றால் சொல்
விட்டு விடுகிறேன் அதை.
நீ என் மனைவி என்று சொல்லிக்கொண்டு...

உன்னிடமிருந்து பிரிந்துவிடுவதும் சுலபமல்ல
முதலில் நீ சேர்ந்தால் அல்லவா அது நடக்கும்.

நீ அக்கரை.
நான் இக்கரை.
நதியின் அடியில் கிடக்கிறது
நமது படகின் துடுப்பு.
எடுத்துத் தருவதாய் இல்லை உதவாக்கரைகள்.

துண்டாடப்பட்ட ஊரில்
பந்தாடிக்கொண்டிருக்கிறது ஜாதியும் மதமும்.
ஆற்றங்கரையில் என் துணியோடு
உன் துணியையும் சேர்த்தே துவைக்கிறான்
சலவைத் தொழிலாளி.
வெளுக்கவில்லை கறைபடிந்த சமுதாயம்

இனியும் உன் காதல் வேண்டாம் எனக்கு
ஒரு முறை என் தெருவில் நடந்து போய்விடு.
வெளிச்சம் பற்றி அறிந்துகொள்ளட்டும்
தெருவிளக்குகள்.

2). ஊடல்
************
துள்ளிக் குதிக்கப் பார்க்கின்றன கயல்கள்
துடிக்கின்றன கரைகள்
கண்களை மூடிக்கொள்

உட்புறமாக தாளிடப்பட்டிருக்கும்
உன் வீட்டிலிருந்து நீயும்
என் வீட்டிலிருந்து நானும்
காணாமல் போய்விடலாம்.
பயப்படாதே.
எல்லோரும் பணப்பெட்டியில்
கண்களை வைத்துப் பூட்டிவிட்டு
உறங்குகிறார்கள்

எடுப்பதிலோ
பொருள் சேர்ப்பதிலோ இல்லையாம்
கொடுப்பதில்தான் கிடைக்கிறதாம் ஆனந்தம்.
கொடுத்துவிடு ஒரு முத்தம்.

நான் நாணயமானவன் .
சொன்ன வாக்கு மீறாமல்
வட்டியுடன் திருப்பித் தந்துவிடுவேன்
உன் சேமிப்பிலிருந்து இப்போதைக்கு
கடனாய் தந்துவிடு சில முத்தங்கள்.

உன் உதடு உன்னிடமிருந்தாலும்
உன்னால் கொடுக்கமுடியாது
அதற்கு ஒரு முத்தம்.
விட்டுவிடு. அந்தப் பொறுப்பை என்னிடம்

நீயும் நானும் நடந்து செல்லும்
ஏகாந்த பயணத்தில்
உன் உதட்டை பாம்பு கடிக்கவேண்டும்
என்னும் எண்ணம் வருகிறது.

3).வாழ்வியலின்பம்
*********************
திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள்
சொர்க்கம் உன்னால் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.

விளக்கை அணைத்தும் பிரகாசமான
நமது முதலிரவில்
உறுதி செய்துகொண்டேன்.
நீல் ஆர்ம் ஸ்ட்ரோங் கால் வைத்தது
வேறொரு கிரகமாகத் தானிருக்க வேண்டும்

அலுவலக குடிநீர் சுத்தமில்லை.
நீ கொடுத்தனுப்புவதில் தீர்வதில்லை தாகம்.
தண்ணீர்க் குப்பிகளில் நிரப்பமுடிவதில்லை முத்தம்

பழைய சோறு
காலையில் உன் கன்னங்களில் இடும் முத்தம்
இரண்டும் போதும்
மதியம் எனக்கு தக்காளி சாதம்.
.
உனக்குத் தாலி கட்டிய கையோடு
கட்டியிருக்கவேண்டும்உன் அம்மா கழுத்திலும்,
ரோஜா செடியில் முத்தம் பறிக்கையில்
முள்குத்தாமிலிருக்க ஒரு மணி.!

நீ இரவில் வரையும் ஓவியங்களை
அழித்து விடுவதற்கு மனசில்லை
காலையில் பல் துலக்கி
வாய்கழுவாமலிருக்கவும் முடிவதில்லை.

நீ உலையில் போட்ட அரிசி
கொதிப்பதற்கு முன்பே
வடித்துவிடுகிறேன்
உனக்கான கவிதைகள்.

4)பொது
*******
மரணவீட்டில் உன் ஒப்பாரி ஓலம்
அவசரப்பட்டு தற்கொலைச் செய்து கொண்டதை
எண்ணி வருந்தியிருக்கக்கூடும் வெளியேறிய ஆத்மா.

உண்மையைக் கூட
உன்னிடம் சொல்ல பயமாய் இருக்கிறது.
உன்னைவிட உன் தங்கை அழகியென்று .

ஊருக்கு ஊர் நம்பிக்கையோடுதான்
திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன
மூட நம்பிக்கைகளின் கதவுகள்.
மூடிக்கிடக்கின்றன அதை மூடும் நம்பிக்கைகள்.

உழைப்பின்போது கண்டுகொள்வதேயில்லை
உழைப்பாளர் தம் வியர்வை
அதனால்தானோ கண்டுவிடுகிறார்கள்
முதலாளிகள் தம் உயர்வை.

சாகும் வரையில் பேசக் கூடாதெனும்
வைராக்கியத்தோடு வாழ்ந்தவர்கள்
பக்கம் பக்கம் படுத்தும்
இப்போதும் அப்படியே..சவக்குழிக்குள்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Jan-16, 2:09 am)
பார்வை : 696

மேலே