செல் செலா சொல்

'சொல்லாக்கியம்' என்ற தலைப்பில் தமிழ் எழுத்துக்களைப் பற்றிய அருமையான ஆய்வு நூல் ஒன்றை படைத்திருக்கிறார் இனிய நண்பர் திரு. சொல்லாக்கியன் அவர்கள் [திரு தீனதயாளன்]. ஆழமான, தேவையான, புதுமையான ஆய்வு. திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

நூலில் இடம் பெற்ற எனது கருத்துரை ... ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் பயன்படுத்தி கொள்ள இவ்வறிமுகம்

************************************************************************************************************************************************************
செல் செலா சொல்
************************************************************************************************************************************************************
புதுயுகன்
இலண்டன்

இலக்கியங்கள், கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி சான்றுகள், இலச்சினைகள், சில்லுகள் இவற்றின் மூலமாகவே பெரும்பாலும் மொழியின் காலம் நிறுவப்படுகிறது.

இது தவிர அறிவியல் பூர்வமாக கரிமம் அல்லது கார்பன் கால மதிப்பீட்டு முறை, பலவகை தனிமம் சார்ந்த முறைகள், கதிரியக்க முறை இவைகளின் மூலமாகவும் கால மதிப்பீடு செய்யப்படுகின்றது. இருப்பினும் இந்த முறைகள் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையான சான்றுகளையே துல்லியமாக கால மதிப்பீடு செய்யும் திறன் கொண்டவை என்ற சிந்தனையும் மறுபக்கம் வைக்கப்படுகின்றது.

மதுரை அருகே கீழடி கிராமத்தின் கீழே சங்க காலத்தைச் சேர்ந்த நகரம் ஒன்றின் தடங்கள், சான்றுகள் கிடைத்திருப்பதாக சமீபத்திய செய்திகளில் பார்க்கிறோம். இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் சான்றுகளின் வயது 3000 ஆண்டுகள். இதற்கு முன்னதாகவே அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கும் சான்றுகளின்படி தமிழ் எழுத்துகளின் தொன்மை 2500 முதல் 3000 ஆண்டுகள் என சொல்லப்படுகிறது. சங்க இலக்கியத்தின் காலத்தை பெரும்பாலான அறிஞர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டோடு பொருத்தி வைக்கின்றனர்.

ஆக தமிழ் எழுத்துகளின் தொன்மை 3000 ஆண்டுகளா? எழுத்துக்கள் தோன்றிய போதே சம காலத்தில் உயர்வான இலக்கியமும் தோன்றியதா? அறிவியல் வளர்ந்து பெருகும் போது இன்னும் துல்லியமாக தமிழின் இறந்த காலத்தை வருங்காலத்தில் வரையறுக்க இயலும்.

அப்படி துல்லிய உண்மையாக நிறுவப்பட இருக்கும் தமிழின் தொன்மைக்கு இன்னொரு முகமாக, ஆதாரமாக இந்த நூல் விளங்குகிறது. கனடா வாழ் ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு. தீனா சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ச் சொற்களின் பரிணாம வளர்ச்சியை ஆழப்பட்ட பார்வையோடு ஆய்வோடு சொல்லாக்கியம் என்ற தலைப்பில் ஆக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

இது ஒரு தனிச்சார்பான ஆய்வு. சொல்லை விடுத்து ஒவ்வொரு எழுத்துக்கும் தனியானதான பொருள் உண்டு என நிறுவ முயலும் புதுமை ஆய்வு.
‘சிந்து’, ‘பிராமி’ எழுத்துருவாக்கங்களை தமிழோடு ஒப்பிட்டு ‘ஓம்’ என்ற பதத்தின் எழுத்துக்களை பிராமி, தமிழ், ஸ்வஸ்திக் இவற்றோடு ஒன்றுபடுத்தி இவர் எடுத்து வைக்கும் வாதத்தில் ஆரம்பமாகி விடுகிறது நமது ஆர்வம்.

‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்பது மகாகவி பாரதி சொன்ன சொல்.
இந்த அரிய ஆய்வின் சாராம்சமாக இந்த நூலில் இவர் முன் வைத்திருக்கும் பின்வரும் கருத்தே அதற்குச் சான்று:

‘பெரும்பாலான தமிழ்ச் சொற்களுக்குள்ளேயே பொருள் பொதிந்துள்ளன’

‘தமிழின் உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து மொத்தமான மனித மொழியாகின்றது. தனிமனிதனும் பிரபஞ்சமும் இறைமையும் ஒத்த தன்மைகளுடன் இருப்பதால், தமிழ்மொழியை உலகமொழி, பிரபஞ்ச மொழி, இறைமொழி எனலாம்’.

ஒவ்வொரு மெய் எழுத்தையும் உச்சரிக்கும் போது ஒவ்வொரு உடல் பாகம் மையம் பெறுகிறது என்ற கோணம் சுவாரசியம் [உதாரணமாக ‘ங்’ - தொண்டைச் சங்குப் பகுதி; ‘ப்’ - வயிற்றுப் பகுதி].

இதைப் போலவே உயிரும் மெய்யும் இணையும் போது இணக்கமான அணுக்கம் தோன்றுவதாக இவர் குறிப்பிடுவதும் புதிய சிந்தனை. [உதாரணமாக: அக் = அ + க். உயிரும் மெய்யும் சேர்ந்து (அகம், அக்கம்)]
இப்படி பல நிலைகளில் சொல்லாகத்தைப் பற்றி நுணுக்கமாக அணுகியிருக்கிறார் நூல் முழுதும்.

முதல் பக்கங்களில் ஆய்வின் அறிமுகம். பிற்பாடு அந்த ஆய்வினால் விளைந்த அகராதி. இதற்கு முன்னாள் இப்படி சொற்களையும் விடுத்து எழுத்துகளை வகைப்படுத்தி பொருள் காணும் விரிவான ஆய்வு நிகழ்த்தப் பட்டிருக்குமா என்பது சந்தேகம். அந்த வகையில் இது மிக தனித்துவமான முதல் முயற்சி. இதற்காகவே இந்த ஆசிரியரை மனதார பாராட்டலாம். இவர் இந்த ஆய்வை புதிய ஆதாரங்களோடு மேலும் தொடரவேண்டும்.


‘தமிழ்மொழியின் வரலாறு’ நூலில் பரிதிமாற் கலைஞர்

‘தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் 'உயர்தனிச் செம்மொழியேயாம் என்பது நிச்சயம்’

என்று தமிழை ‘உயர்மொழி’, ‘தனிமொழி’, ‘செம்மொழி’ என்று மூன்று விதமாகவும் நிறுவுகிறார். நாகரிக வளர்ச்சி அல்லது அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மொழிகள் வளர்ந்தாக வேண்டும்; அந்த வளர்ச்சியும் புதிய சொற்களாக, அதிலும் பிற மொழிச் சொற்களின் துணை இல்லாமல் தனித்துவமாகவே தமிழில் வளர்ந்து வந்திருக்கிறது என்பது மகிழ்வான உண்மை.

பரிதிமாற் கலைஞரின் மொழியில் 'உயர் தனிச் செம்மொழியான தமிழில் காலமாற்றத்திற்கேற்ப புதிய சொற்களை உருவாக்கும் முயற்சியிலும் இந்த ஆய்வையும், அகராதியையும் பயன்படுத்திப் பயன் பெறலாம்.

செல் சென்று அரிக்க இயலாத அரிதான சொல் தமிழ்ச்சொல். அந்தச் சொல்லின் ஆக்கத்தை படைப்பாற்றலோடு ஆய்ந்திருக்கும் திரு. தீனா அவர்களுக்கு எனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள். இது ஆய்வு நூல், அகராதி மற்றும் பாட நூல். இப்படி முன்று சிறப்புகள் ஒருங்கே பெற்ற நூல். மூன்று ஒன்றில் ஒன்றும் நூல் [3 in 1]!

நன்றி : 'சொல்லாக்கியம்' பக்: 20

எழுதியவர் : புதுயுகன் (9-May-16, 10:31 pm)
சேர்த்தது : pudhuyugan
பார்வை : 225

சிறந்த கட்டுரைகள்

மேலே