அகநானூறு காதல்பாடல் 2

2. குறிஞ்சி

தலைவியை நாடிப் பகலில் வந்த தலைவனிடம் தோழி சொல்கிறாள்.

நாட! உன் நாட்டில் விலங்குகளும் அவை நினைத்துப் பார்க்காத இன்பத்தை அடையும். அப்படி இருக்கும்போது நீ அடைய எண்ணிக்கொண்டு வந்த இன்பத்தை நீ அடைதல் உனக்குக் கடினமாகுமா? எளிதுதானே! இவளது தந்தையின் காவலர் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து வந்தால் இவள் இன்பத்தை நீ இரவிலும் பொறலாம். என்றாலும் ஒன்றை எண்ணிப்பார். வேங்கையும் பூத்துவிட்டது. நிலாவும் வளர்பிறையில் இருக்கிறது. திருமணம் செய்துகொண்டு இவள் இன்பத்தைப் பெறலாமே.

[1]

குறியா இன்பம், குறித்த இன்பம்

•கொழுத்த இலையை உடைய வாழைமரப் பெருங்குலையில் நன்றாக முதிர்ந்த வாழைப்பழம் தானே உதிரும்.
•தெவிட்டி உண்ணமுடியாமல் போன பலாச்சுளையும் கிடக்கும்.
•இரண்டும் பாறையில் இருக்கும் ஆழமான சுனைநீரில் ஊறும். ‘தேறல்’ என்னும் கள்ளாக விளையும். அங்கு மேயும் கடுவன் என்னும் ஆண்குரங்கு அறியாமல் அதனை உண்ணும். மயக்கம் ஏறும். மிளகுக்கொடி படர்ந்திருக்கும் சந்தன மரத்தில் ஏற முடியாமல் தள்ளாடும். இது எண்ணிக்கூடப் பார்க்காத நிலையில் அதற்குக் கிடைத்த குறியா இன்பம். இத்தகைய இன்பத்தைப் பிற விலங்கினங்களும் பெறும் நாட்டை உடையவன் தலைவன்.
•குறியா இன்பத்தை விலங்கினங்களும் பெறும் நாட்டை உடைய தலைவன் குறித்த இன்பத்தை (நாடிவரும் இன்பத்தை)ப் பெறுவது கடினமா? இல்லையே.

[2]

இவளுக்கும் ஆசை

•விரும்பத்தக்க அழகும், மூங்கில் போன்ற தோளும் உடைய இவளும் உன்னைப்போலவே உன்னிடத்தில் பாயும் நெஞ்சத்தைக் கட்டுப்படுத்த முடியாதவளாக இருக்கிறாள்.

[3]

இரவில்

•இவளது தந்தை இரவிலும் காவல்காரர்களை வைத்துக் காவல் புரிகிறான். அந்தக் காவல்காரர்கள் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து இரவிலும் நீ வரலாம்.

[4]

ஆனாலும் ஒன்று.

•வேங்கைப்பூ பூத்திருக்கிறது. (திருமணம் செய்யும் பருவகால அறிவிப்பு இது.) வெண்ணிலா காய்கிறது. (ஊர் பார்த்துவிடும்)

இதனையும் எண்ணிப்பார்.




பாடல் சொல்-பிரிப்புப் பதிவு



[1]

கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை

ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த

சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு

பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்

அறியாது உண்ட கடுவன் அயலது 5

கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,

நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்

குறியா இன்பம், எளிதின், நின் மலைப்

பல் வேறு விலங்கும், எய்தும் நாட!

குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? 10

[2]

வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,

நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,

இவளும், இனையள் ஆயின், தந்தை

[3]

அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,

கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் 15

[4]

வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;

நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.




பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது.

கபிலர் பாடல்

எழுதியவர் : (17-May-17, 3:12 pm)
பார்வை : 54

மேலே