சிறப்பு

ஒரு வியாபாரி நல்லதொரு தொழிலை நடத்தி வந்தான். பிரபல சோப்பு பவுடர் கம்பெனி ஒன்றின் விநியோக உரிமை, வியாபாரிக்கு கூடுதலாக கிடைத்தது. வீடு வீடாகச் சென்று சோப்பு பவுடரை விற்பனை செய்ய வேண்டும். மாதம் ஐந்தாயிரம் கிலோ பவுடரை விற்க வேண்டும் என்பதே கம்பெனி தந்த இலக்கு. ஐந்து விற்பனையாளர்களை நியமிக்க திட்டமிட்டான் வியாபாரி. சுகுமார் மற்றும் மேலும் நான்கு பேரை வேலைக்குச் சேர்த்தான். மாதங்கள் சில ஓடின. சுகுமாரால் மட்டுமே, தனக்கு தரப்பட்ட மாத இலக்கான ஆயிரம் கிலோ விற்பனை என்ற இலக்கை எல்லா மாதங்களிலும் அடைய முடிந்தது. மற்ற நான்கு பேரையும் நீக்கிய வியாபாரி , புதிதாக நான்கு பேரை, பணியில் அமர்த்தினான். அவர்களும் விற்பனை செய்ய முடியாமல் திணறினர். சுகுமார் மட்டும் தன்னுடைய இலக்கைத் தொடர்ச்சியாக எல்லா மாதமும் எட்டினான். வியாபாரியிடமும் நல்ல பெயர் பெற்று இருந்தான். மற்றவர்கள் தினமும் எட்டு மணி நேரம் கடுமையாக அலைந்து திரிந்தாலும் அவர்களால், மாதத்தின் பாதி இலக்கைக் கூட எட்ட முடியவில்லை. சுகுமாரோ, தினமும் இரண்டோ அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே விற்பனை செய்வான். ஆனாலும், மாத இலக்கைத் தாண்டி விடுவான். மற்றவர்களை விட, தான் ஒரு திறமையான விற்பனையாளர் என்ற ஒரு நியாயமான எண்ணம் அவனுள் தோன்றியது. நான்கைந்து மாதங்கள் ஓடின. தொடர்ச்சியாக பல மாதங்கள் விநியோகஸ்தரின் இலக்கை அடையாததால், வியாபாரியிடம் இருந்து விநியோக உரிமையை திரும்ப பெற்றது கம்பெனி நிர்வாகம். ஒருவேளை, சுகுமார், தினமும் எட்டு மணி நேரம் உழைத்து,விற்பனையை இன்னும் அதிகப்படுத்தி இருந்தால், கம்பெனி விநியோக உரிமையை வியாபாரியிடம் இருந்து திரும்ப பெற்று
இருந்திருக்காது.

நீதி: மற்றவர்களை விட திறம்பட செயல்படுவது அல்ல சிறப்பு என்பது. உன்னுள் எது மேம்பட்டதோ அதுவே சிறப்பு.

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (8-Jun-17, 10:08 pm)
சேர்த்தது : தமிழ்ச் செல்வன்
Tanglish : sirappu
பார்வை : 277

மேலே