அணு ரசனை - அத்தியாயம் இரண்டு

ப்ரொபெல்லரின் தட் தட் ஓசையும், பாலாவின் இதய துடிப்பும் ஒரே சீராக ஓடிக்கொண்டிருக்க. ஆனால் எண்ணங்களோ மாறி மாறி தோன்றி மறைய, அவன் இடது கண் ஓரத்தில் வழிந்த சிறிய நீர்த்துளி அமைதியை உண்டாக்கியது. வெற்றிடத்தில் பேசிய வார்த்தைகள் மற்றவர்களுக்கு கேட்காமல் புரியாமல் போகலாம். ஆனால், வார்த்தைகள் கூறியவனுக்கு அதன் ஆழ்ந்த அர்த்தங்களும் வலிகளும் என்றும் அழிவதில்லை. அந்த ப்ரொபெல்லரின் ஓசையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த பாலா, பின்னால் யாரோ வரும் சப்தம் கேட்டு மெதுவாக திரும்பி பார்த்தான். அனு தன்னை நோக்கி வருவதை கண்டான். அந்த இரவு நிலா வெளிச்சத்தில், லாவெண்டர் நிற பட்டர்பிளை கவுன் இல், அனு எப்போதும் இருப்பதற்கு மேலாக மிகவும் அழகாக காட்சியளித்தாள். இத்தகைய தருணம் பாலா விற்கும் புதிதாக தோன்றியது. 5 வருட காதல் வாழ்க்கை, 3 மாத திருமண வாழ்க்கையில் கூட இத்தைகைய தருணம் கிட்டியது இல்லை. சூரியன் மறைந்த பிறகும், இரவு நேரங்களில் கூட, வான் தேவதைகள் விண்ணிலிருந்து இறங்க கூடும் என்பதை புரிந்து கொண்டான். கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பாலா வை அனு ஆச்சர்யத்துடன் நெருங்கி,

"என்னடா பாலா???? இப்படி பாக்குற???", என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

"ரொம்ப அழகா இருக்க அனு!!", என்று பாலா கண்களை விரித்து கூறினான்.

"ஏதோ புதுசா பாக்குற மாதிரி பேசுற!! என்ன டா? எனக்கு தெரியாம சரக்கு சாப்பிட்டு வந்துட்டியா??" என்று அனு அவனை பார்த்து முறைக்க..

"சரக்கு எல்லாம் தேவையில்லை. உன் கண்ணை பார்த்தாலே போதும். உச்சி மண்டை வரைக்கும் போதை ஏறுது." என்று பாலா கூற,

"போடா......." , என்று வெட்கத்துடன் திரும்பி கொண்டாள். அவளும் ப்ரொபெல்லர் இருக்கும் திசையில் பார்த்துக்கொண்டு வெட்கத்தில் சிரித்துக்கொண்டாள்.

"இப்போ உனக்கும் ப்ரொபெல்லர் சத்தம் தாண்டி என்ன மாதிரி அமைதியை உணர முடியுது போல" என்று பாலா அவள் கண்களை நோக்கியபடி கேட்க. அனு தலை நிமிராமல்,

"அதையும் தாண்டி என் இதய துடிப்பு தான் எனக்கு கேக்குது." என்று கூறி மீண்டும் சிரித்துக்கொண்டாள்.

இருவரும் இரண்டு நிமிடம் மெளனமாக படர்ந்து விரிந்த கடலை பார்த்துக்கொண்டே நின்று இருந்தார்கள். அனு மெதுவாக பாலா வின் பக்கம் திரும்பி,

"பாலா......"

"என்னடி... சொல்லு"

"நிஜமாவே நீ என்ன லவ் பண்றியா?"

"எல்லாரும் இதே கேள்வியை தான் கேப்பீங்களா?"

"இது பெண் குணம். உண்மை என்ன னு தெரிஞ்சும் காதலன் வாயால கேக்குறது ஒரு இனிமையான சுகம். நீ சொல்லு."

"நீ எத்தனை தடவ கேட்டாலும் இந்த உண்மை மாறாது. ஆமா... உன்ன நிஜமாவே லவ் பண்றேன்."

"எவ்ளோ லவ் பண்ற?"

"ஹம்ம்ம்ம்ம்ம்ம்.......", சலித்துக்கொண்டான்.

"ப்ளீஸ்... சொல்லுடா....."

பாலா அவள் தோள் மேல் இரு கைகளையும் வைத்து அழுத்தி பிடித்து அவளை தன்பால் திருப்பினான்.

"அடியேய்... என் சலிப்பு பொண்டாட்டியே...... இந்த கடல் தண்ணி தீரும் வரைக்கும் உன்ன லவ் பண்ணுவேன்"

சட்டென்று அனு ஒரு கவலை கலந்த சந்தேகத்தில் பாலா வின் கண்களை பார்த்து,

"ஒருவேளை தீந்துருச்சுன்னா ?????????"

"நம்ம காதல் இருக்கிற வர இந்த கடல் தண்ணி தீராது...." என்று கூறிய பாலா வை அனு இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

அனு பாலா வின் காதில் மெதுவாக, மென்மையாக, "நம்மள மாதிரி இந்த உலகத்துல யாரும் லவ் பண்ண முடியாதுல?"

பாலா பதில் கூறாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான். அனு சட்டென்று பிடியிலிருந்து விலகி,

"என்ன பாலா ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?"

பாலா மீண்டும் ப்ரொபெல்லர் பக்கம் திரும்பி நின்று கொண்டு கடலை பார்த்துக்கொண்டே பேச தொடங்கினான்.

"இந்த கப்பல் ல சராசரியா 150 ஹனிமூன் ஜோடிகள், நம்மளையும் சேர்த்து. வித விதமான காதல் கதைகள். பல விதமான காதல் ரசனைகள். ஆனா இவ்ளோ இருந்தும் ஏதோ குறையுற மாதிரி ஒரு எண்ணம். காதலை எதிர்பார்த்து தான் காதலிக்கிறோம். ஏன்.... இந்த ஒன் சைடு லவ் கூட ஒரு நாள் காதலிக்க மாட்டாளா னு எதிர்பார்த்து தான் காதலிக்கிறோம். இந்த உலகத்துல செய்ற எல்லா விஷயமும் எதையோ எதிர்பார்த்தோ இல்ல ஒரு குறிக்கோளை முன்னோக்கியோ தான் இருக்கு. ஆனா நான் பார்த்த, கேட்ட ஒரு கதை இது எல்லாத்தையும் ஒடச்சுருச்சு. அது காதலா? அன்பா? நட்பா? நன்றியா? எதுன்னு எனக்கு சொல்ல தெரில. ஏன்!!! அதை புரிஞ்சுக்கவும் எனக்கு பக்குவம் இல்ல. அந்த கதை என் மனசுல இருக்கிற வரைக்கும், மனதால் என்னால் எதையும் சிறந்தது னு ஏத்துக்க முடியல. அதுல நம்ம காதலும் விதிவிலக்கு அல்ல."

வியப்புடன் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த அனு தன்னை சுதாரித்து கொண்டு கேட்டாள்.

"அப்படி யாரோட கதையை பத்தி நீ பேசற?? உன்ன இந்த அளவுக்கு பாதிச்சு நான் பார்த்தது இல்லையே ?"

பாலா சிறிது நேர மௌனத்திற்கு பின் சொன்ன வார்த்தை, "இர்ஷாத்"

"யாரு??? உன்னோட முதல் கப்பல் முதலாளி இர்ஷாத் சார் ஆ?

"ஆமா..."

"அவர் மனைவி அலிஷாவை அவர் அவ்ளோ லவ் பண்ணினாரா என்ன ????"

"ஆமா..... அந்த பெயர் தெரியாத ஒரு உணர்வு. அன்போ? காதலோ? நட்போ? நன்றியோ? எனக்கு தெரியல. இந்த பிரபஞ்சத்துலயே யாரும் வைக்க முடியாத ஒரு உணர்வை அவர் அலிஷா மேல வச்சு இருந்தார்."

அனு பதில் எதுவும் கூறாமல் அவனையே பார்க்க, பாலா தொடர்ந்தான்.

"ஆனா.... அது அவர் மனைவி அலிஷா இல்ல. அவரோட உயிருக்கும் மேல நினைத்த அவர் கப்பல் அலிஷா."

"என்ன..........." என்று அனு ஆச்சர்யத்துடன் கண் கொட்டாமல் பாலா வை பார்க்க,

"அந்த உயிர் இல்லாத கப்பல் மேல இர்ஷாத்க்கு இருந்த அந்த பெயரில்லா உணர்வு தான் நான் சொன்ன ஈடாகா காதல்."

என்று கூறி அவன் மனதை அடிக்கடி நெகிழ செய்யும் அந்த காவியத்தை கூற தொடங்கினான்.

3 வருடத்திற்கு முன்...................

மும்பை நகரம். இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று. வர்த்தகத்தின் தலை நகரம் என்றே சொல்லலாம். இந்தியாவின் மாபெரும் பணக்காரர் அம்பானி இருக்கும் இடமும் இது தான். ஏழைகள் அதிகம் வசிக்கும் சேரிகளும், குப்பங்களும் அதிகம் உள்ள ஊரும் இது தான். நம் இன்றைய இந்தியாவின் நிலையை உணர்த்த இது ஒன்றே சிறந்த சான்று.

பாலா அவசரம் அவசரமாக உடை அணிந்துக்கொண்டு, நிறைய காகிதங்களை ஒரு பையில் நிரப்பிக்கொண்டு தனது கை கடிகாரத்தில் மணியை பார்த்துக்கொண்டு அந்த ஹோட்டல் அறையை விட்டு வெளியே வந்தான். கதவை சரியாக பூட்டினோமா என்று ஒரு முறை கதவை இழுத்து சரிப்பார்த்து கொண்டு வரவேற்பாளர் அறையை நோக்கி வேகமாக அணுகினான்.

"ரூம் நம்பர் 205. டாக்ஸி புக் கியாத்தா!!"

என்று தனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தி யில் பேச, அந்த வரவேற்பாளன் அதை புரிந்துக்கொண்டு, ஆங்கிலத்தில் பதில் அளித்தான்.

"Sir, your taxi is on the way sir. please wait"

பாலா மீண்டும் ஒரு முறை கை கடிகாரத்தை பார்த்துக்கொண்டு அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அப்பொழுது மொபைல் போன் சினுங்க, அதை எடுத்து பேச தொடங்கினான்.

"ஹலோ.... அம்மா.... டாக்ஸிக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் மா"

"முதல் நாள் வேலைக்கு போற, கோவில் போய் சாமி கும்பிட்டிட்டு போடா..."

"அம்மா... வேலைக்கு எல்லாம் போகல. இன்னைக்கு ரிப்போர்டிங் மட்டும் தான். எப்போ னு இனிமே தான் சொல்வாங்க."

"முதல் முதலா கப்பல் வேலை விஷயமா போற.. அம்மா சொல்ற மாதிரி கோவில் போயிட்டு போ.. நல்லதா நடக்கும்."

"சரி மா" , பாலா சலித்துக்கொண்டான்.

டாக்ஸி ஹோட்டல் வாசலில் நின்று ஒலி எழுப்ப, பாலா வேகமாக போன் ஐ அணைத்து விட்டு டாக்ஸியில் ஏறி கொண்டான். டாக்ஸி ஓட்டுநர் பின்னல் திரும்பி பாலாவிடம்

"கிதர்??"

என்று கேட்க,

"Darukhana Ship Breaking Yard" என்றான் பாலா.

டாக்ஸி ஒரு சிக்னல் இல் பச்சை நிறத்திற்காக காத்திருக்க, பாலா இடது பக்கம் செல்லும் சாலையில் ஒரு கோவிலை கண்டான். அம்மா கூறியது நினைவிற்கு வந்தது. ஒரு பக்கம் கடவுள் நம்பிக்கை இல்லை. கோவிலுக்கு செல்ல வேண்டுமா என்று யோசிக்க, மறுபக்கம், இந்த மாதிரி கடவுள் நம்பிக்கை தான் இல்லை. ஆனால் தாய் என்னும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அம்மா பேச்சை கேட்டு தான் பாப்போம் என்று டாக்ஸி ஓட்டுனரிடம்,

"பையா, ஏக் மினிட் உதர் ருக்கோ" என்று கோவிலை நோக்கி கையை காட்டினான்.

டாக்ஸி அங்கே ஐந்து நிமிடம் நிற்க, பாலா உள்ளே சென்று மறுபடியும் டாக்ஸியில் ஏறி அமர்ந்துக்கொண்டான். டாக்ஸி நேராக அந்த Darukhana Ship Breaking yard ஐ நோக்கி சென்றது.

தாருகான ஷிப் பிரேக்கிங் யார்ட (DARUKHANA SHIP BREAKING YARD)....

பாலா டாக்ஸியிலிருந்து இறங்கி அந்த இடத்தை ஒரு நோட்டம் விட்டான். பழைய துரு பிடித்த இரும்பின் நாற்றம், பாதி தீர்ந்து போன கிரீஸ், ஆயில் சிலிண்டர்களிலிருந்து வெளி வந்த ரசாயண மணம் எல்லாம் சேர்ந்து அந்த இடம் சராசரி வாழ்விடத்திற்கு சற்று அப்பால் காணப்பட்டது. அந்த ஷிப் பிரேக்கிங் யார்ட்க்குள் நுழைய பாலா சற்று தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

நூற்றுக்கணக்கான உழைப்பாளிகள், பல கிரேன்கள் (cranes), பாதி உடைந்த நிலையில் பெரிய பெரிய கப்பல்கள் என அந்த இடமே பாலா விற்கு சற்று அசௌகரியத்தை தந்தது. தனது ஆசை, கனவு அனைத்தும் கப்பல் துறையில் வேலைக்கு சேர்ந்து கடல் வாழ்க்கையை ரசிப்பது தான். அத்தகைய கனவோடு வந்த பாலா இப்படி பட்ட காட்சிகளை முதல் நாள் காண்பான் என்று சற்றும் எதிர்பாக்கவில்லை.

பழைய துரு பிடித்த இரும்பை கிரேன் மூலமாக உடைக்கும் சப்தமும், பெரிய துரு பிடித்த இரும்பிலிருந்து தரமான இரும்பை வெல்டிங் மூலமாக பிரிக்கும் சப்தமும், நூற்றுக்கணக்கான உழைப்பாளிகள் சுத்தி வைத்து இரும்பை உடைத்து பிரிக்கும் சப்தமும் அந்த இடத்தை நிரப்பின. கம்பீரமாய் கடலில் போரில் செல்லும் தேர் போல் காற்றை கிழித்து செல்லும் கப்பலை தான் பாலா கனவில் பார்த்து இருந்தான். கடல் அரசன் போல் மிடுக்குடன் திரிந்து கிடந்த பல கப்பல்கள் அங்கே ஊனமாய் நிற்பதை கண்ட பாலாவிற்கு சற்று சங்கடமாய் இருந்தது. அங்கே இன்னொரு விஷயமும் அவனை உறுத்தியது.. முக்கால் வாசி உழைப்பாளிகள், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அங்கே ஒரு பெரியவர், சிறிய கருப்பு கண்ணாடி அணிந்துக்கொண்டு, வெல்டிங் மூலம் இரும்பை அறுத்துக்கொண்டு இருந்தார். தீப்பொறிகள் அவர் மேல் தெறிப்பது கூட தெரியாமல் மும்முரமாக வேலை வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கே அவர் அருகில் ஒரு பெரிய கிரேன் 40 டன் எடையுள்ள ஒரு இரும்பு தட்டை சுமந்த படி நகர்த்துக்கொண்டு இருந்தது. அப்பொழுது எதிர் பாராத விதமாக, அந்த கிரேன் பிடியிலிருந்து அந்த இரும்பு தளர்ந்து விழுந்தது. அது நேராக அந்த பெரியவர் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் விழுந்து அந்த இடம் முழுவதும் புழுதியை கிளப்பி விட்டது. அனைவரும் ஒரு நிமிடம் வேலையை அப்படியே விட்டுவிட்டு, பெரியவர் அருகில் நெருங்கி அவருக்கு என்னவென்று கவனித்தார்கள். அந்த பெரியவர் உடல், முகம் முழுவதும் புழுதி படர்ந்து எழுந்து நின்று கொண்டிருந்தார். நல்ல வேலை ஒன்றும் ஆகவில்லை என்று அனைத்தையும் மறந்து மீண்டும் அனைவரும் வேலையில் ஈடுபட தொடங்கினர்.

அந்த பெரியவர் நேராக பாலாவிற்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு வந்து முகம் கழுவி கொண்டே பாலா வை கவனித்தார். அரைகுறையாக முகம் கழுவி கொண்டு பாலாவை நெருங்கினார்.

"தம்பி யாரு? தமிழா?

"ஆமா.. எப்படி கண்டுபிடிசீங்க?"

கிரேன், வெல்டிங், இரும்பு உடைக்கும் சத்தம் அதிகமாக இருக்க, அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே கடினமாக இருந்தது.

"சேப்டி எகுய்ப்மெண்ட்ஸ் எல்லாம் இல்லையா?" என்று பாலா உரத்த குரலில் கேட்க.

"என்ன தம்பி???????" என்று அவர் கேட்காதது போல் செய்கை செய்தார்.

பாலா தன் முகம் முன்னாடி அவன் கைகளை வைத்து மறைத்து,

"பாதுகாப்பு கவசம் எல்லாம் இல்லையா?" என்று மீண்டும் உரத்த குரலில் கூறினான்.

"தம்பி.. இந்த சத்தத்துல ஒண்ணுமே கேட்கல. டீ வாங்கி தரியா" என்று அவர் பாலாவை பாவமாக பார்க்க..

பாலா சற்று வினாடி மெய் மறந்து நின்றுகொண்டிருந்தான். பின் சுதாரித்து கொண்டு

"வாங்க ஐயா போகலாம்" என்று அருகில் இருக்கும் ஒரு டீ கடைக்கு அழைத்து சென்று டீ வாங்கிக்கொடுத்தான்.

"இப்போ சொல்லுங்க தம்பி.. என்ன சொன்னீங்க?"

"இல்ல.... ஆபத்தான வேலையாச்சே. சரியான பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் இல்லையா?"

"இல்ல தம்பி. நாங்களும் பல தடவ கேட்டுட்டோம். இப்போ தர்றோம் அப்போ தர்றோம் னு சொல்ராங்களே தவிர ஒன்னும் கொடுக்கிறதில்ல. எங்களுக்கும் இதே பழகிடுச்சு.",

என்று டீ யை ரசித்து குடிக்க தொடங்கினார். பாலா விற்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை. அந்த பெரியவர் மீண்டும் தொடர்ந்தார்.

"ஆமா.... தம்பி... நீ ஏன் இங்க வந்த? யாரை பாக்கணும்?"

"சுப்ரமணியம் சார் ஆ பாக்க வந்தேன். அவர் எங்க இருக்கார்?"

"ஓ.... அவரா? இங்க தான் இருக்கார். இனிமே தான் வருவார். கொஞ்சம் நேரம் ஆகும்."

மீண்டும் பாலா அமைதியா இருக்க, அவர் தொடர்ந்தார்.

"நீ என்ன விஷயமா அவரா பாக்கணும் தம்பி?"

"நான் இப்போ தான் படிச்சு முடிச்சுட்டு புதுசா கப்பல்ல வேலைக்கு சேர போறேன். அது விஷயமா அவரா பாக்க சொன்னாங்க. அதான்"

"ஓ.... புதுசா கப்பல் வாழ்க்கையை தொடங்க போறியா??? முதல் தடவ கப்பல் வாழ்க்கை விஷயமா வந்து இருக்க. இந்த மாதிரி இடத்துக்கு வந்து பாக்கலாமா. இது கப்பலுக்கெல்லாம் சுடுகாடு மாதிரி."

என்று தன் கண்களை விரித்து கூறிக்கொண்டு கடைசி டீயை குடித்து முடித்தார். பாலாவினால் இதற்கும் பதில் சொல்ல முடியாமல் நின்றிருந்தான். அந்த பெரியவர் பாலா வை பார்த்து ஒரு சிறிய புன்னகையுடன் பேச தொடங்கினான்.

"தம்பி..... நாமளும் இந்த கப்பலும் ஒன்னு தான். ஓடுற வரைக்கும் நல்லா உழைக்கும், ஊரு ஊரா வாழறதுக்கு ஓடிட்டே இருக்கும். அதுவும் தன்னை நம்பி வந்த மக்களை சுமந்துட்டு ஓடிட்டே இருக்கும். முக்கால் வாசி நேரம் அதுக்கு இருக்கிற பிரச்னை அதுக்கே தெரியாது. கடைசியா நேரம் முடிஞ்சதும் இங்க வந்து விட்ருவாங்க. அப்பறம் அவ்ளோ தான். 25 ல இருந்து 30 வருஷம் தான் இந்த கப்பலோட ஆட்டம் கூட."

பாலா அவரை பிரமிப்புடன் பார்க்க, அந்த பெரியவர் மீண்டும் தொடர்ந்தார்.

"ஆனா தம்பி. கப்பலுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. இந்த கப்பலோட நேரம் முடிஞ்சதும் அதோட பாகங்களை எல்லாம் எடுத்து வேற ஏதாவது கப்பலுக்கோ இல்ல வேற ஏதாவது கட்டுமானத்திற்கோ பயன்படுத்திப்பாங்க. ஆனா மனுஷன் செத்துட்டா அவ்ளோ தான். நேரா மண்ணுக்குள்ளே தான். தம்பி.... எத்தனை பேரு உடல் தானம் பன்றாங்க. நீயே சொல்லு."

பாலாவிற்கு கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.

"தம்பி... நேரம் ஆச்சு.. நான் இன்னும் பத்து மணி நேரம் வேலை பாக்கணும்.. அதோ... அங்க ஒரு ஆபீஸ் தெரியுதா? அங்க தான் சார் வருவார். டீக்கு ரொம்ப நன்றி தம்பி,,,"

என்று கூறி கொண்டு வேகமாக ஓடி சென்று வெல்டிங் வேலையை மீண்டும் தொடங்கினார். பாலா பிரமித்து போய் அவர் சொன்ன திசையில் இருக்கும் ஆபீஸ் அருகே நின்று கொண்டு, அங்கு இருக்கும் பழைய கப்பல்கள் அழிவின் விழிம்பில் நிற்பதை பார்த்துக்கொண்டு இருந்தான்.

"பாலா??"

ஓசை கேட்டு பாலா பின்னால் திரும்பி பார்க்க, ஒரு நடுத்தர வயது ஆள் நின்றுக்கொண்டு இருந்தார்.

"ஆமா..." , என்று பாலா கூற.

"நான் தன் சுப்ரமணியம்.."

"ஹலோ சார்.. நான் தான் பாலா." என்று புன்னைகை உடன் கை குலுக்கினான்.

"உள்ள கிளீனிங் நடந்துட்டு இருக்கு. இங்கயே பேசலாமா?" என்று அவர் கேட்க, பாலா சரி என்று தலை அசைத்து பையில் இருக்கும் காகிதங்களை நீட்டினான். சுப்ரமணியம் அதை வாங்கி பார்த்துக்கொண்டே,

"என்ன போஸ்டிங்? கேடட் ட்ரைனி? இல்ல ஜூனியர் என்ஜினீயர்?"

"ஜூனியர் என்ஜினீயர் சார்"

"எந்த ஷிப் அல்லோட் பண்ணி இருக்காங்க?"

"அலிஷா சார்", அவ்ளோ நேரம் காகிதங்களை பார்த்து கொண்டு இருந்த சுப்ரமணியம் ஒரு வினாடி பாலாவின் முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

"முதல் முதலா கப்பல் வாழ்க்கை ஆரமிக்க போற. அலிஷா கொடுத்து இருக்காங்களே..." என்று வருத்தத்துடன் கூறினார்.

"ஏன் சார்" என்று பாலா கேட்க.

"அதோட காலம் முடிஞ்சு போச்சு. இது தான் அதோட கடைசி பயணம். அப்புறம் இந்த கதி தான்" என்று சுப்ரமணியம் ஒரு திசையில் கண்களை காட்ட. அங்கு ஒரு மிகப்பெரிய கிரேன் இல் கட்டி இருந்த கனமான இரும்பு உருண்டை, அங்கு நின்று இருந்த ஒரு முழுமையான பழைய கப்பலை இடித்து பாதியாக உடைத்துக்கொண்டு இருந்தது.

------------ தொடரும்.......

எழுதியவர் : இர்ஷாத் (9-Jun-17, 12:10 am)
பார்வை : 258

மேலே