மழை நீரில் மூழ்கிய அவனும் அவளும்

மழை நீரோடு மூழ்கிய அவன்...
அவள் நினைவுகளோடு மூழ்கி போனான் ..

காதுகளை செல்லமாக கிள்ளி பார்க்கிறது விழுகிற
மழைத்துளியின் சட் சட் சத்தம்
தூரமாய் வரும் உன் வரவை சுமந்து வரும்
கொலுசுமணி சத்தத்தை போல ...

கண்களுக்கு சுகம் தந்து கண்ணிமைக்க மறக்க சொல்லிப் போகிறது
என் வீட்டு ஜன்னலில் மழை துளிகள் வரையும் சாரல் ஓவியம்
பிரம்மன் வரைந்த பேசாத ஓவியமாய் என்னை
கடந்து செல்லும் உன்னை போல ...

கண்களை மூடிக் கொள்ள சொன்னது காட்டமாக
மழையோடு கட்டிக்கொண்ட மின்னலின் ஒளி
என் பார்வையின் ஆழம் தாங்காமல் நீ
வீசி சென்ற ஒற்றை பார்வையை போல ...

இதயத்தை புரட்டி போட்டு ஒடுக்கி தான் போனது
மின்னலோடு ஒட்டிக்கொண்டு வந்த இடி சத்தம்
ஒற்றை பார்வையோடு ஒட்டிக கொண்டு வந்த
உன் கோபத்தை போல ...

மழையில் நனைந்திட சொன்னது
எனக்குள் இருக்கும் குழந்தை மனசு
உன் விரல் பிடித்திட சொன்னது
என் வயசு ...

குடை பிடித்தே நடக்கிறேன் உனக்காக
தடை உடைத்து என் குடைக்குள் என்றாவது
நீ வருவாய் என ...

வெண் சாயம் பூசி கொண்டன
பொழிந்து தீர்த்த கரு மேகங்கள்
பெண் மனம் புரியாமல் தூங்காது
விழித்து கிடந்த கரு விழிகள் ....

இறை வரைந்த வண்ண ஓவியமாய்
கலங்கி தெளிந்த வானத்தின் வானவில்
இரை தேடும் பறவையாய் என் தேடல்களின்
முடிவாய் தோன்றும் உன் முகம் ....

மேகங்கள் போக தொடங்குகின்றன
எவரை தேடியோ
என் நினைவுகளும் போக தொடங்குகின்றன
உன் பின்னாடியே ...

மழை தொடர்ந்து பெய்கிறது மண்ணில்
மனம் தொடர்ந்து தன்னை தொலைகிறது உன்னில் ....!
....................................................
மழை நீரோடு மூழ்கிய அவள்
அவன் நினைவுகளோடு மூழ்கி போனாள்...

காதுகளை செல்லமாக கிள்ளி பார்க்கிறது விழுகிற
மழைத்துளியின் சட் சட் சத்தம்
தூரமாய் வரும் உன் வரவை சுமந்து வரும்
சிரிப்பு சத்தத்தை போல

கண்களுக்கு சுகம் தந்து கண்ணிமைக்க மறக்க சொல்லிப் போகிறது
என் வீட்டு ஜன்னலில் மழை துளிகள் வரையும் சாரல் ஓவியம்
பிரம்மன் படைத்த ஆண்மையின் இலக்கணமாய் என்னை
கடந்து செல்லும் நீ வீசி செல்லும் பார்வை துளிகள் போல

கண்களை மூடிக் கொள்ள சொன்னது காட்டமாக
மழையோடு கட்டிக்கொண்ட மின்னலின் ஒளி
பெண்மையின் நாணத்தை ஒளிந்து கொள்ள செய்த
உன் பார்வையின் ஆழத்தை போல

இதயத்தை புரட்டி போட்டு ஒடுக்கி தான் போனது
மின்னலோடு ஒட்டிக்கொண்டு வந்த இடி சத்தம்
என்னை அறியாமல் எனக்குள் நீ பிரவேசம் செய்ததை
நான் உணர்ந்த அந்த நொடி போல

மழையில் நனைந்திட சொன்னது
எனக்குள் இருக்கும் குழந்தை மனசு
உன் கரம் கோர்த்து வாழ்ந்திட சொன்னது
எனக்குள் பூத்த பெண்மையின் ஆசை

குடை பிடித்தே நடக்கிறேன்
இந்த ஊருக்காக
விடை கொடுத்தே நகர்கிறேன்
அது யாருக்காகவோ

வெண் சாயம் பூசி கொண்டன
பொழிந்து தீர்த்த கரு மேகங்கள்
பெண் மனம் புரியாமல் தூங்காது
அழுது கிடந்த கரு விழிகள்

இறை வரைந்த வண்ண ஓவியமாய்
கலங்கி தெளிந்த வானத்தின் வானவில்
கரையில் கால் நனைத்து உன் கடலில் கலந்திட
குழம்பி தவிக்கும் குழந்தை என்னில்
விடையில்லா கேள்விகளோடு
வண்ணவில்லை தேடிக்கொண்டு ...

மேகங்கள் போக தொடங்குகின்றன
எவரை தேடியோ
நிஜங்கள் போக தொடங்குகின்றன
நினைவுகளின் முன்னாடியே ...

மழை தொடர்ந்து பெய்கிறது மண்ணில்
மனம் தொடர்ந்து தன்னை இழக்கிறது உன்னில் ...!
மனம் தொடர்ந்து தவித்து மாய்கிறது என்னில்...

மழைத்துளி தந்த சாரல்களோடு
Yazhini வளன்

எழுதியவர் : யாழினி வளன் (15-Aug-17, 1:44 pm)
பார்வை : 343

மேலே