கூடா நட்பு

எலும்பின் மச்சை வரை
எனக்கு அச்சத்தை உட்டி
எதிலும் நான் காலூன்ற
விடாமல் செய்தவர்கள்

கரை நக்கும் வெண் நுரை
தரை தடவிச் செல்கையில்
கருங்கோடாய் வளைந்திருக்கும்
உருமாறிய எச்சங்கள்

நினைவுப் பாதை அதன்
முடிவென்று வரும்போது
நினைவிலியாய் மாறி விடும்
கனவு தேசக் கணவான்கள்

சூரியனாய் நான் இருந்தும்
சந்திரனாய் தாமிருந்து
ஆரியக் கூத்தாடும் அந்த
அரைக் கிறுக்குக் கிரகங்கள்.

நட்பென்று சொல்வதனால்
நடிப்பங்கு உள்ளுறையாம்
வெட்டொன்று துண்டிரண்டாய்
வெட்கமின்றி நான் சொல்வேன்

உட்கார்ந்து எழும்போது
ஒட்டிவரும் மண் துகளாய்
தட்டி விட்டுச் சென்றிடுவோம்
பட்டுப் போன நட்பதனை.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (23-Aug-17, 3:14 pm)
Tanglish : kuutaa natpu
பார்வை : 201

மேலே