கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் என்ற டி.எம்.அஹ்மத்

தஞ்சை மாவட்டம் கூத்தாநல்லூரில் 20.04.1923 ல் பிறந்தவர் சாரண பாஸ்கரனார். இறைத் தூதர்களில் ஒருவரான யூசுப் நபியின் வாழ்க்கை வரலாற்றை கருப்பொருளாக வைத்து ’யூசுப் சுலைகா’ என்ற பெருங்காப்பியம் படைத்திருக்கிறார். இவர் மணியோசை, சாபம், சங்கநாதம், நாடும் நாமும், மணிச்சரம், பிரார்த்தனை, சிந்தனைச்செல்வம், இதயக்குரல் என்ற பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். ’ரோஜாத் தோட்டம்’ என்ற நாடகத் தொகுப்பு நூல் ஒன்றும் படைத்திருக்கிறார். இவரது ‘பாலயோகியின் பிரார்த்தனை’ என்ற நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கவிஞர் சாரண பாஸ்கரனார் என்ற பெயருள்ளவர் இந்துவாகத்தான் இருக்க வேண்டும், அவர் எப்படி இஸ்லாமைச் சார்ந்த யூசுப் நபிகள் பற்றி பெருங்காப்பியம் செய்திருக்க முடியும் என்றெண்ணினேன். எனவே வலைத்தளத்தில் தேடியபொழுது, ’உயிர்மை’ என்ற தளத்தில் கழனியூரன் எழுதிய முஸ்லீம் நாட்டாரியல் – தாலாட்டு என்ற கட்டுரையில், கவிஞர் சாரண பாஸ்கரனாரின் பெயரை குறிப்பிடுகையில் அவரது இயற்பெயர் டி.எம்.அஹ்மத் எனத் தெரிய வந்தது. கவிஞர் சாரண பாஸ்கரனார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய தாலாட்டுப் பாடல்கள் சுவையாக உள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்.

தள்ளாடிக் காலூன்றித்
தகிங்கனத்தோம் தாளமிட்டு
சொல்லாட வந்தவனே
சோர்வகற்றத் தூங்கி விழி!

என்ற பாடலில் குழந்தையின் தளர் நடை பற்றிய வர்ணனை மிக அழகாகப் பதிவாகியுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் இவரை ’தமிழோடு நிலைத்திருக்கப் பிறந்தவன்’ என்று பாராட்டியிருக்கிறார். இவர் 63 ஆண்டுகள் வாழ்ந்து 1986 ல் இயற்கை எய்தினார்.

’யூசுப் சுலைகா’ காப்பியம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் அரசியல், சமுதாய, பண்பாட்டு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. மிஸ்ர் நாட்டில் முடியாட்சி இருந்தாலும், அது மக்களைத் துன்புறுத்தும் கொடுங்கோலாட்சியாய் இல்லாமல் மக்கள் மகிழும் வண்ணம் நல்லாட்சியாய் இருந்தது.

மிஸ்ர் மன்னர் உழவர்களுக்கு உதவுவதைத் தன் தலையாய கடமையாக்க் கொண்டுள்ளார். விளைகின்ற தானியத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் வரியாக வசூலிக்கப்பட்டது. உழவர்கள் ஆட்சியாளர்களிடம்,

’எம் நிலத்தை ஒழுங்கு செய்து
உணவுப் பொருள் விளைவிக்க உதவுவீரேல்
ஆனமட்டும் பயிர்விதைத்து விளையுமட்டும்
அடுத்தவர்க்கும் வழங்கிடுவோம்’

என வேண்டி நிற்பதால் அவர்கள் உழவுத் தொழில் புரிந்து கிடைக்கும் பயன்களை மற்றவர்க்கும் வழங்குவோம் என்று ஆர்வமுடன் இருந்தனர்.

மேலேயுள்ள கவிதையை எனக்கு பிடித்திருந்தது. அதனாலேயே இந்தக் கவிதையையும், கவிஞரையும் பற்றி விரிவாக எழுதலாயிற்று. இதை மாதிரியாக வைத்து, ஒப்பில்லா உழவு அல்லது தேவை ஒரு விவசாய புரட்சி என்ற தலைப்புக்கேற்றபடி 16 வரிகளில் யாரேனும் கவிதை படைத்தால் மகிழ்வேன்.

ஆதாரம்:பேராசிரியர்.ச.அபீபுர் ரகுமான் அவர்களின் கட்டுரை – ’செந்தமிழ்ச் செல்வி’ திங்கள் இதழ் மார்ச் 2000

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jun-12, 9:38 am)
பார்வை : 376

மேலே