வீணாகப் போகாத மாலை அ.முத்துலிங்கம் வார இறுதி வரும்போது...
வீணாகப் போகாத மாலை
அ.முத்துலிங்கம்
வார இறுதி வரும்போது எனக்கு மெல்லிய நடுக்கம் பிடிக்கத் தொடங்கிவிடும். ஏனெனில் சனி, ஞாயிறு மாலைகளில்தான் நடன அரங்கேற்றம், பாடல் கச்சேரி, இலக்கிய விழா, நாடகம், புத்தக வெளியீடு என்று வழக்கமாக நடைபெறும். ஏதாவது ஒன்றுக்கு போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். போதிய சமாதானம் கைவசம் இல்லாவிட்டால் போயே தீரவேண்டும்.இப்படித்தான் போனவாரம் ஒரு நிகழ்ச்சியில் மாட்டிவிட்டேன். ஆரம்பத்தில் இரண்டு பெண்மணிகள் இணைந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார்கள், தங்கள் தங்களுக்கு பிடித்த சுருதிகளில். எதற்கு இரண்டு பேர் என்று தெரியவில்லை. பாடலின் இறுதிவரை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வீரமாகப் பாடினார்கள். பாட்டு முடியும் வரையில் இருவருக்குள்ளும் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.அன்று எலக்ரோனிக் தேவதைகள் வேறு ஒத்துழைக்காத நாள். இரண்டு காதுகளாலும்கூட தாங்கமுடியாத அதிர்ச்சி. இவ்வளவு ஒலி வெள்ளத்துக்குள்ளும் அவர்கள் இசை அமுங்கிவிடாதது அதிசயம். பாடல் முடிய இரண்டு நிமிடம் இருக்கும்போதே தமிழ்த் தாய் பின்பக்கம் வழியாக ஓடிவிட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர் திரும்பவில்லை.இந்த அனுபவங்களால் நான் மிகவும் ஆடிப்போய் இருந்தேன். ஆகவே நவம்பர் 8ம் தேதி சனிக்கிழமை ரொறொன்ரோ எஃகுத் தொழிலாளர் அரங்கத்தில் உலகமயமாக்கலை எதிர்கொள்ளும் முகமாக ஒரு கருத்தரங்கமும், கலை நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்ற அறிவித்தலை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் ஒரு புதுவகையான கூத்து ஏற்பாடாகியிருக்கிறதாகச் சொன்னார்கள். உலகமயமாக்கலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய நாட்டுக்கூத்து என்றதும் என்னுடைய எதிர்பார்ப்புகளை இன்னும் சுருக்கி, மனதை தைரியமாக வைத்துக்கொண்டேன்.ஆனால் நிகழ்ச்சியிலே நடந்தது வேறு. பாரம்பரிய நாட்டுக்கூத்து அல்ல. கூத்துக் கூறுகளை அடக்கிய ஒரு புதுவிதமான musical கலவை; இசை நாடகம் என்றும் சொல்லலாம். இதில் பாட்டும், நடனமும், கூத்தும், கவிதையும், வசனமும், நடிப்புமாக சகல அம்சங்களும் அடக்கியிருந்தன.அரச சபையில் நடனத்தோடு நாடகம் ஆரம்பமாகியது. மன்னன் வழமைபோல மந்திரியிடம் நாட்டு வளம் எப்படி என்று கேட்கிறான். மந்திரி அதற்கு உலமயமாக்கலால் விளையும் அனர்த்தங்கள் பற்றி எடுத்துரைக்கிறான். அந்த விவரம் ஒவ்வொரு காட்சியாக விரிகிறது.எழுநூறு ஆண்டுகளுக்கு முன் மார்க்கோ போலோ ஆறுவயது சிறுவனாக ஒரு பயணம் மேற்கொண்டான். வடக்கு தெற்காக அமைந்த இந்த முதல் பயணம் அவனை சீனாவுக்கு கொண்டுபோய் சேர்த்தது. இரு நூறு வருடங்களுக்கு பிறகு மேற்கு நோக்கிய பயணத்தில் அமெரிக்காவை கண்டுபிடித்தார்கள். அந்தப் பயணங்களில்தான் உலகமயமாக்கல் ஆரம்பமாகியது. மெள்ள மெள்ள இதன் விளைவுகளை மக்கள் புரிய தொடங்கியபோது வல்லரசு முதலீட்டு நிறுவனங்கள் உலகமுழுவதையும் தம்வலையில் வளைத்துவிட்டன.மக்கள் அரசனிடம் முறையிடுகிறார்கள். புல்வெளிப் பசுக்களின் மடியில் அமிலம் சுரக்கிறது. காற்றில் நச்சுப் புகை கலந்துவிடுகிறது. ஆற்று நீர் அணு உலைக் கழிவுகளை அள்ளிவருகிறது.அரசனுக்கு கோபம் மூள்கிறது. கம்பனி முகவர்களை உதைத்து விடுவதுபோல மேடையிலே பாய்கிறான்.'படுபாதக மூடனேதப்பிதக் குணங்கள் போமோடாபடுபாதக மூடனேஇப்படிப்போய் செய்யலாமோடா 'என்று செங்கோலைச் சுழற்றியபடி இப்படியும் அப்படியும் மேடையில் மிதித்து நடந்தபோதே சபையோர் நிமிர்ந்து உட்காரத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் மெக்ஸிக்கோ, கொலம்பியா, கனடா என்று உலகத்து நாடுகள் எதிர்நோக்கும் அழிவுகளைச் சொல்லியபடி நாடகம் நகர்கிறது.

.அப்பாதுரை முத்துலிங்கம்
51, Alexmuir BlvdScarborough, OntM1V1H3Canada