எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)

மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 
பாடலுக்குச் செல்லும் முன் அப்பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது. 

பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ பற்றிக் குறிப்பிடுவது. 

காதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும்.

குறுந்தொகைப் பாடல்  எண் - 27
ஆசிரியர் - வெள்ளிவீதியார்
திணை - பாலைத்திணை

தலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்து, மனதில் துயரம் குடிகொண்டதோடு, பொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூறிகிறாள்.

‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது  
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமக் கவினே’’

கலம் – பால் கறக்கும் பாத்திரம்; நல் ஆன் – நல்ல பசு தீம் பால் – சுவையான பால், உக்காங்கு – சிந்துதல்/விழுதல் என்னைக்கும் – என் `ஐ`க்கும் – காதலன் பசலை – மேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது உணீ இயர் – தன்னை உட்கொள்ளும்; திதலை – தேமல் அல்குல் – இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்) மாமை – மாந்தளிர் நிறம்; கவின் – அழகு 

பாடலின் பொருள்:

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல்  அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

“இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை. அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.
 
ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது.”

மேலும்

பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலபேரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். இணைய நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துச் சுவைத்து, தங்களின் கருத்துரையை இணைக்க வேண்டுகிறேன்.

பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும்.

பொதுவாக குறிஞ்சித் திணையானது தனித்திருக்கும் தலைவனும் தலைவியும் அல்லது வேட்டைக்குச் செல்லும் ஒரு இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியொருத்திக்குமிடையே நிகழும் ``புணர்தலும் புணர்தல் நிமிர்த்தமுமாகும் (கூடல்)’’. 
குறுந்தொகைப் பாடல்  எண்: 40 (நாற்பது)
ஆசிரியர் செம்புலப்பெயனீரார்
திணை - குறிஞ்சி

தலைவன் கூற்று – தலைவியிடம் தலைவன் கூறுதல்
தலைவனுக்கும் தலைவிக்குமிடையே எதிர்பாராத சந்திப்பின்பால் காதல் மலர்ந்தது. இப்படி முன்பின் தெரியாத இளைஞனுடன் கண்டதும் காதல் ஏற்பட்டதால் தலைவிக்குத் தலைவன் மேல் ஐயமேற்படுகிறது, எங்கு இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானே என்ற பயம்தான் அது. தலைவியின் முகத்தில் சட்டெனத் தோன்றிய கவலையை உணர்ந்த தலைவன், தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம் கூறும் பாடல் இதோ:
``யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’.
யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல் = மழை;
பாடலின் பொருள்:

என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்? எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே!
இப்படி செம்மண் நிலத்திலிருக்கும் நீர் போல் தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டிருந்தனர்.

மேலும்


மேலே