காதலின் கருவாய் நீ...!

கண்ணாடி முன் நான் நின்றாலும் கூட,
உன்பிம்பம் தானே காண்கின்றேன்...!
புலராத வேளை என் மஞ்சம் எங்கும்
உன்வாசம் தானே நுகர்கின்றேன்...!
யாதொன்றும் அறியாது தவிக்கிறேன்
உன் வரவுக்காய் தினம் தினம் துடிக்கிறேன்...!
நீ தானே என் உறவாகினாய்...
என் உயிருக்குள் ஒன்றாக உறவாடினாய்...!

என் நாசி வழியே நுழைகின்ற காற்றும்
உன் உயிரோடு தானே கலக்கின்றது...!
உன் இதழ் தீண்டும் தருணம் உயிர்மூச்சு ஒன்று
சட்டென்று தானே வெடிக்கின்றது...!
உன் விரலாலே நீ போடும் கோலங்கள்
என் விரகத்தில் விளைந்ததன் மாயமே...!
உன்னோடொரு கதை பேசினேன்
என் நரம்புக்குள் நீதானே திரியேற்றினாய்....!

அருகம்புல் ஒன்று அரிதாரம் பூசி
நீயாக கண்முன் சிரிக்கின்றது...!
பிரியாத பந்தம் நீதானே என்று
கைகோர்த்துக்கொண்டு லயிக்கின்றது...!
கட்டொன்று குலையாத மேகமாய்
நீ என்றென்றும் எனக்கான மழையாகிறாய்...!
உன்னாலே நான் தாயாகிறேன்
என் காதல் கதையில் நீ கருவாகிறாய்...!

எழுதியவர் : ஜி.டி (7-Jan-13, 12:07 am)
பார்வை : 432

மேலே