தோழா...வா...வேலை இருக்கு நமக்கு...-பகுதி :14 -அகன்

தோழா...வா...வேலை இருக்கு நமக்கு...-பகுதி :14 -அகன்
###########################################…
ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சட்டென்று பறப்பது போல் அந்தப் புள்ளைகள் அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருத்தர்க்கு ஒருத்தர் உதவிட கிடுகிடுவென்று மரத்தில் ஏறி ஆளுக்கு ஒரு கிளையில் அமர்ந்து கொண்டனர்…
தி.அமிர்தகணேசன்
############################################

மறுநாள் காலை!

வீராச்சாமி தாத்தாவையும், வேப்பமரத்து மேலே ஒட்டி இருந்த இருட்டையும் சூரியன் எழுப்பிக் கொண்டு இருந்தான்.

முண்டாக கட்டி, கீழ்ப்பாச்சாங் வேட்டி கட்டிய ஆட்கள் நிறைய பேர் அரம், கோடரி சகிதம் வந்து சேர்ந்தனர்.

“லே உச்சிக்குள்ளே எப்படி வெட்ட முடியும். கௌ கழிக்கவே உச்சியாகிடும். என்ன ஆலமரம் கணக்கா பெரிசா இருக்கு மரம்” அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்!

மரத்தடியில் படையலும், மற்றப் பொருட்களும் சிதறிக் கிடப்பதையும், அருகில் இருந்த வீராச்சாமித் தாத்தாவையும் பார்த்தனர்.

ஒரே நாளில், காமிராக்கள் பளிச்சிட, மக்கள் மத்தியிலும் பத்ரிக்கையிலும் சாதனையாளர் என்ற பேர் வாங்கிட 10,000 மரக்கன்றுகளை மட்டும் நட்டு நட்டப்பின் அவைகளை சற்றுப் பராமரிக்கவில்லை என்பது வேறு விஷயம் ­ எம். எல். ஏக்காக மரம் வெட்டிக் கொடுக்க அனந்தராமன் வந்து விட்டார். பின்னால் தங்கராசு!

முருகனும், லட்சுமியும் வந்தார்கள்!

நேரே அனந்தராமன் காலில் விழுந்து கெஞ்சினர்.
“அய்யா ­ வேணாமய்யா… மரத்தை வெட்டப் போறியளா… வேணாமய்யா… எங்க தாத்தாவுக்கு இதேன் வாழ்க்கை… அவுக காலம் வரைக்கும் இது இருந்துட்டுப் போகட்டும்! இவுகளுக்குப் பொறவு வேணும்னா வெட்டிப் போடுங்க…” லட்சுமி கெஞ்சினாள்.

“அய்யா பள்ளிக்கூடத்லே அன்னெக்கு அப்படிப் பேசினீயளே… இன்னெக்கு இப்படிச் செய்யலாமா? அய்யா உங்க மவளை இந்த மரத்லே வச்சு அமாவாசை காப்பாத்திப் போட்டாங்க! வெள்ளத்லே கூட சரிந்து விழாத இந்த மரத்தை வெட்டாதீக அய்யா…” முருகன் கெஞ்சினான்!

“அய்யா கீழ்ச்சாதி புள்ளெங்க யாரும் இனி வரக்கூட மாட்டோம்! எங்க தாத்தாவுக்காக வெட்டிப் போடாதீக…” கெஞ்சினார்.

“எலே… இந்த மூதிகளை இழுத்துப் போங்கடா… வேலை ஆகட்டும்! ஏ… பெரிசு… நீரு மொதல்ல எழுந்து இங்ஙென வாரும்” கட்டளைகள் பறந்தன!

ஆனால் காரியமாகும் முன்..........
டுர்ர்ர் பிப்பீ டு ர்ர்ர்ர் பிப்பீ பிப்பீ டுர்ர்ர்ர்…
லட்சுமணனின் வாய் வண்டி முன்னால் வர அவன் பின்னால் ஊரின் ஏறக்குறைய எல்லாக் குழந்தைகளும் வந்தனர்! கூலியாட்களின் பிள்ளைகளும் அதில் இருந்தனர்!

சர்ரென்று தங்கராசுவும் ஓடிப்போய் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டான்! அவன் தாய் நேற்றிரவே சொல்லி வைத்து இருந்தாள் மரத்தடியில் காலையில் என்ன செய்ய வேண்டும் என்று!

ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சட்டென்று பறப்பது போல் அந்தப் புள்ளைகள் அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருத்தர்க்கு ஒருத்தர் உதவிட கிடுகிடுவென்று மரத்தில் ஏறி ஆளுக்கு ஒரு கிளையில் அமர்ந்து கொண்டனர்!

உச்சாணிக் கொம்பில் அனந்தராமன் பேரன் தங்கராசு!

ஆபத்தான கிளை ஒன்றில் கூலியாளியின் பெண்!

கட்டளைகள் இப்போது அங்கிருந்து பறந்தன.
காரியமாகிட வேண்டும்! வேறு வழி இல்லை!

“இந்த மரத்தை எப்போதும் இனி வெட்டற தில்லைன்னு சட்டென்று இங்ஙெனெ இப்படியே பஞ்சாயத்துக் கூடி முடிவெடுங்க. மீறி எவர் வெட்டினாலும் அம்பது புளிய ­ மிளாறு சவுக்கடின்று முடிவெடுங்க. இந்த ஊர்ல எங்க தாத்தாவும், நாங்களும் நட்ட எந்த மரத்தையும் வெட்டரதில்லை ­ அதுகளா கீழே சாய்ந்தா பயன்படுத்திக்கலாம்னு முடிவுபண்ணுங்க!

அப்போதான் நாங்க கீழே இறங்கி வருவோம்! இல்லேன்னா எங்களையும் சேர்த்து இந்த மரத்தோட வெட்டிப் போடுங்க!”

ஊரே அதற்குள் அங்குக் கூடி விட்டது!

அனந்தராமன் முகம் பேய் அறைந்தது போல் ஆயிற்று. கூலியாட்களில் ஒருத்தர் மகள் ஆபத்தான கிளையில் இருப்பது கண்டு, அவன் ஆயுதங்களைக் கீழே போட்டான் ­ மற்றவர்களும் அப்படியே செய்தனர்! அவர்கள் எல்லோரும் இப்போது வீராச்சாமித் தாத்தா அருகில் நின்றுக் கொண்டனர்.

“மரத்துக்கு மாராப்பு சீலை கட்டி, கட்டிலும் தொட்டிலும் இல்லாமெ போன அய்யாவும் அந்த மவராசியும் இங்ஙெனெ இந்த ஊர்க்குச் செஞ்சதை எல்லாம் நன்னி கெட்டப் பயலுவ கணக்கா மறந்து போய் இருந்கீளா, போங்கலே போய் மரத்தை வெட்டிப் போடுங்க!” வயசாளி ஒருத்தர் உரக்கக் கத்தினார்.

அங்கே ஒருவித அமானுஷ்ய அமைதி நிலவியது!

வீராச்சாமித் தாத்தா ­ விரதத்தின் சோர்வும், நினைவுகளின் தாக்குதலும், குழந்தைகளின் இந்தச் செயல்களும் ­ சூழ பலவித உணர்ச்சிகளின் இடையே மேலே அண்ணாந்து பார்த்தார்!

மரமெல்லாம் மழலைகள் ­ குழந்தைகள்!

“இந்த மரம் பூரா நம்ப பிள்ளைகள் ஓடியாடணும். அதுக குசும்பு பண்ணி ஓடுகையிலே நாம கொம்பு எடுத்து அதுகளை வெரட்டிப் பிடிக்கோணும்”

செண்பகம் கடைசி நாளில் பேசியது போல இன்று மரமெல்லாம் மழலைகள்!

“நாங்க சின்னப்புள்ளெங்கதான… இறங்கி வந்தப்புறம் மரத்தை வெட்டலாம்னு நினைச்சியேள்னா… பொறவு நாங்க ஒவ்வொருத்தரா ‘தொப் பொப்புன்று’ அந்தா ஏரியிலே குதிச்சு செத்துப் போவோம்! இது எங்க தாத்தா மேலே சத்தியந்தேன்.”

இப்போது பேசியது தங்கராசுவா?

அட என் மக்கா… இம்புட்டு ஞானமா பேச யாரு உங்களுக்குச் சொல்லிகுடுத்தது? வேணாம்…
வேணாம் நீங்கள் எல்லாம் இளங்குருத்துக்கள்… வாழவேணும்… மனதில் நினைத்தவாறு வீராச்சாமித் தாத்தா பார்த்தார்.

அமாவாசை, உட்கார்ந்திருந்த இடத்தில் இன்று முருகள்! அவன் கையில் தங்கராசு!!

அப்போது சட்டென்று நிலை குலைந்து சரியாப் பார்த்த தங்கராசுவை முருகன் பிடித்துத் தன் பிடியில் இழுத்துக் கொண்டான். இருவரும் இப்போது ஒரு பெருங்கிளையொன்றில்!

அண்ணாந்து பார்த்த அனந்தராமன் அசந்துப் போனார்!

எது தீட்டு ­ தீண்டாமை? எங்கே உள்ளது!

அன்று அமாவாசைக் கையில் தன் மகள்!

இன்று முருகன் கையில் தன் பேரன்!

ஊர் மக்களும் பஞ்சாயத்துப் பெரியோர்களும் கூடிப் பேசினார்கள்!

முடிவெடுத்தார்கள்!

அனந்தராமன் பேசத் தொடங்கினார்!

“… வேணாம் வேணாம்! இந்த பேச்சே வேணாம் பொறவு மாறி போய்டுவீக! ஊர் மண்ணெடுத்து கையடிச்சு சத்தியம் பண்ணிப் போடுங்க! எங்க தாத்தாவை பார்த்துச் சொல்லுங்க! அவுக சம்மதித்து கீழே வரச் சொன்னாதேன் வருவோம்.”

அதேப் போல, “புள்ளெகளே… இனிச் சத்தியமா இந்த மரத்தை யாரும் வெட்ட மாட்டாங்க! ஊர்ல எந்த மரத்தையும் வெட்டமாட்டாக! மீறினா அபராதமும் புளியம்மிளாரும் உண்டு! பஞ்சாயத்து முடிவு மட்டுமல்ல! ஊர் முடிவு இது” எனச் சொல்லிப் பிடி மண்ணில் சத்தியம் பண்ணி வீராச்சாமி காலில் எல்லோரும் கொட்டினார்கள்;

அனந்தராமன் தன் வீட்டில் இருந்து வெற்றிலை எடுத்து வரச்சொல்லி எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னார் ­ தானே பஞ்சாயத்து கூட்டிய கணக்கா!

காத்திருப்போம் தோழர்களே
அகன்

எழுதியவர் : அகன் (8-Jan-13, 2:50 pm)
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே