உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே( பொங்கல் கவிதை போட்டி)
ஊரெல்லாம் பொங்க வைக்க - ஒண்ணுமில்லா
இந்த வெவசாயி வெறும் கண்ணீர
மட்டும் பொங்க வைக்க - எஞ்சாமீ
எம் பொழப்ப இனி நா எங்க வைக்க...!!
அரப்படி நெல்லையும் ஆறுநாளா பட்டினி
கெடக்கையில தின்னு தீர்த்தோமே...
மழ தூங்கி பாதி நெலம் கருக - மறுநேரம்
வெள்ளத்துல மீதி நெலம் உயிர் நீத்த - எஞ்சாமீ
எம் பொழப்ப இனி நா எங்க வைக்க...!!
மனை மனையா ஆகுதம்மா..
வியாபாரம் தான் போகுதம்மா..
மருதமெல்லாம் வீடென மாற, வெவசாய
கூட்டமெல்லாம் வேற வேல தேட - எஞ்சாமீ
எம் பொழப்ப இனி நா எங்க வைக்க...!!
கடசி பொண்ண கரையேத்திட்டு
காலத்த முடிச்சிக்க இருந்தேனே,..
இன்னிக்கு நா செத்தா, அவ கல்யாணம்
அரசு தருதாம் ஒரு லட்சம் - எஞ்சாமீ
எம் பொழப்ப இனி நா எங்க வைக்க...!!
மனுசங்கள நம்புற தொழில் ஆயிரம் - மழத் தாயீ
உன்ன மட்டுமே நம்புனது என் வெவசாயம்...
நீயும் சேர்த்து என்ன ஏமாத்த - காத்துகிட்டு இருக்கேன்
எந்த விடியல் என்ன கைதூக்க...!!!