பால்யத்திற்கு திரும்புதல் இனிமையானதா....?
நடமாடும் கிளை அஞ்சலகமாய்
அரைக் கால்சட்டை
எச்சில் துத்திஇலை வெறுத்தே
ஆறிய காயங்கள்
எட்டாம் வகுப்பு தேறியதால் பார்த்த
முதல் பேருந்து
அகன்ற திரைப் பாவைக் கூத்தில்
ஒரு சினிமா
ஆண்டுக்கு இருமுறை கிடைத்த
நெல்லுச் சோறு
விளையாட்டிற்கு அனுமதிக்காத
மைதானம்
வீட்டு விளக்கணைத்துக்
கொண்டாடிய
பிறந்த நாட்கள்
செருப்பால்
தீண்டத்தகாத பாதங்கள்
தெரு விளக்கு
பார்த்திராத புத்தகங்கள்
என
என் பால்ய நாட்களுக்கு
திரும்புதல்
இனிமையானதில்லை...!