தேசிய கொள்ளையர்கள்
தேன் கூட்டை கொள்ளையிட்டு எடுத்த
..தேனாலே தித்திப்பு கொள்வோம்
மான் வேட்டை தனைசெய்து இறைச்சி
..மட்டும்நாம் உணவாக்கி கொள்வோம்
மீன் எல்லாம் வலைவீசி பிடித்து
..மணக்கின்ற கறியாக்கி உண்போம்
ஊன் உண்ண நமக்காக உலகில்
..உயிரெல்லாம் கொலைகொள்ளை செய்வோம்
பிறர் பொருளை களவாடல் மட்டும்
..பெரிதான கொள்ளையென சொல்லி
துறவி போலே போர்த்துகின்ற நாங்கள்
..துவம்சம் செய்கின்ற மிருகம்
அறம் இன்றி கொல்லையாதல் தன்னை
..அகம்மீதில் வைப்பதுவோ இல்லை
நிறம் மாறும் பச்சோந்தி போலே
..நிலம்வாழும் நாம் செய்யும் கொள்ளை
கொலை கொள்ளை செய்கின்ற பேரை
..கும்பிட்டு வணங்குகின்ற பெரிய
நிலை செய்து நிமிர்த்திய நாமவர்
..நிழல்தேடி நடக்கின்றோம் .பின்னர்
வலை வீழ்ந்த மீனாகி தவித்து
..வாழ்நாளில் துன்பங்கள் வாங்கி
விலை இல்லா பொருளாகி நாமும்
..விதியென்று கொள்ளையாகி போவோம்
சின்ன சின்ன கொள்ளை செய்யும் போது
..சிரிக்கின்ற எம்முள்ளம் வாழ்வில்
வண்ண வண்ண கோலங்கள் கண்டு
..வசந்தம்போல் இருக்கின்ற வேளை
தின்னும் பொருள் கூட இன்றி எம்மை
..திருடும் பெருந் திருட்டுக் கூட்டம்
பென்னம் பெரும் மனிதராக இருக்க
..பெரும் தவறாய் வாக்களித்து வைப்போம்
கோடி கோடி சேர்த்து வைத்து தங்கள்
..குடும்பம் வாழ நமை ஏய்க்கும்
கேடி மார்கள் வாழுகின்ற உலகில்
..கீழ் வர்க்கம் என்றென்றும் மண்ணில்
வாடி வதங்கி கொண்டிருப்பதற்கே
..வாங்கி வந்த வரமாய் தவிக்க
மாடி மனை நிலம் பணம் என்று
...மக்கள் சொத்தில் மட்டும் வாழ்வாரே..
(தொடரும்)
..
..
..