ஆமாம்.. இதுவும் வன்முறையே.....
உழைப்பிலேது பேதம் ?
தொழில் குறிக்கத் தொடங்கியதே
இந்த அடையாளப் பெயர்கள்...
இடையிலேறி வந்த ஏமாற்றுக்
கூட்டமொன்று
பிரித்தாளப் புகுத்தியதே - இந்த
பெருநோய்க் கிருமிதனை.....
கிருமிதின்ற ஒருகூட்டம்
கிறுக்கேறிக் கீழ்படிந்து ஒத்தூதிய
துதிப்பாட்டுக்காய்
கைமாறாய்ப் பெற்றது காண்....
கூட்டுக் கொள்ளையில் ஒருபாதி..
எதிர்த்து நின்ற மாந்தரெல்லாம்
எல்லாமும் இழந்து நிற்க..
இருப்பதையும் பிடுங்கியதந்த
சுயமிழந்த சகுனிக் கூட்டம்...
அன்றுமுதல் தொடங்கியதே நம்
ஆணிவேருக்குச் சுடுதண்ணீர்.....
பசப்பிச் சிரித்தவரெல்லாம்
பாடப்பட்டோர் மேலோரென்று...
எதிர்த்துச் சிதைந்தோரெல்லாம்
ஒடுக்கப்பட்டோர் கீழோரென்று..
அடிமை சிக்கிவிட்டானென
ஆர்ப்பரித்துப் பூரித்தது....
தீண்டாமை தீட்டியது....
பற்றவைத்த தீயதுவும் பரவி
எரிந்தது காண்...
சுயமரியாதையை சுட்டுப் பொசுக்கி...
வாழ வழிதேடும்
வாழ்ந்து கேட்ட சமூகமெல்லாம்
சோற்றுக்காய் கையேந்த
திளைத்துக் களித்தது காண்...
பெருத்து நின்ற கிருமித் தின்றி...
நிர்வாணம் காட்டவைத்து
எகத்தாளம் ஏற்றிவைத்து
கண்ணுக்குள் தூசிவிட்டு
கருவறுத்துக் கொன்றது காண்...
தொடர்கதையாம் அவலங்கள்...
தொலைத்தழிக்க என்னவழி...?
இயங்காச் சட்டமதை
எழுப்பிவிட்டு நடைபழக்கி
சாதீயம் பேசாதே யென
சங்கறுத்துக் கொல்லவேண்டும்....
செக்கிலிட்டு ஆட்டவேண்டும்..
வன்முறை தூண்டுகிறாயென
வக்கனையாய் கேட்பீரானால்
அடக்குமுறை ஆளுமையில்
என்ன
அகிம்சைத்தனம் நீர் கண்டீர் ..?