நமக்கென்று இல்லாத ஒரு எதிர்காலத்தில்..
நீ விட்டு தொலைந்த இடத்தில்..
சுற்றி திரிந்து..
இன்றும் வாழ்கிறேன்..
உன் ஞாபகத்தில்..
ஏன்??
நண்பர்கள் வெறுத்த
சில காரணங்களுக்காக..
உன்னை ஒதுக்கினேன்
மனமில்லாமல்..
ஏன்??
நீ கேட்டு ரசித்த பாடல்கள்
ஒலிக்கும் போது...
சட்டென்று நினைவிலே
மின்னல் கீற்றைப்போல்
உன் முகம்
என்னை வெட்டி போவது..
ஏன்??
யாவரும் பங்கிட்டு
சாதம் பரிமாறிய வேளையில்..
நீயில்லை என்ற
ஒற்றை குறைகண்டு..
தட்டை விட்டெறிந்து
நான் சென்றது
ஏன்??
வகுப்பறையில்
உன் வெற்றிடம் கண்டு..
மரத்தடியிலயே
நான் அன்றைய
நாள் கழித்தது..
ஏன்??
பார்க்க சகிக்கவில்லை
என்று தெரிந்திருந்தும்..
படுதோல்வி கண்ட
படத்திற்கு..
உன்னுடன்
விரும்பி வந்தேன்..
ஏன்??
நண்பர் கூட்டம்
நைய்யாண்டித்தபோது..
தோளில் படர்ந்திருந்த
தூசியை..
துடைத்து போலே..
கேலிகளை தவிர்த்து
விலகி நின்றேன்..
ஏன்??
உன் வாழ்த்துகளுக்கு
இணையாக..
நான் வென்ற பரிசு
தாழ்ந்து போனது..
ஏன்??
உன் கன்னங்களில்
நீர் துளித்த தருணங்களில்..
என் கவலைகள்
எங்கோ காணாமல் போனது..
ஏன்??
நமக்கென்று
இல்லாத ஒரு
எதிர்காலத்தில்..
உன்னோடு நான்
சேர்ந்து வாழ..
கனவுகளுக்கு வர்ணம் பூசி..
எதார்த்தங்களை
வீதியில் வீசி...
வாழ்வை விட்டு...
தொலை தூரம்
நிற்கின்றேன்..
ஏன்??
இதையெல்லாம்
எண்ணி பார்க்கையில்..
விழிகளில்
கண்ணீர் சுரப்பது..
ஏன்???